இந்த இடத்துக்கு வந்து நாட்கள் பல ஆகி விட்டன. காரணம், மிக அவசரமான வேலை. ஆங்கிலப் பதிப்பாளர் ஔரங்ஸேபின் அத்தியாயவாரியான சுருக்கம் கேட்டிருந்தார். அதைத்தான் எழுதி அனுப்பி வைத்தேன். எழுதுவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இதற்கிடையில் வினித்தின் பிறந்த நாள் வந்து போனது. முந்தின தினம் மாலை சந்திப்புக்கு என்னை அழைக்கலாம் என்று நினைத்ததாகச் சொன்னான் வினித். சென்றிருந்தால் இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது வினித் என்றேன். இனிமேல் ஒருபோதும் அந்தக் கட்டத்துக்கு நான் செல்ல இயலாது. சாத்தியமே இல்லை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தினங்கள் வேலையிலிருந்து தப்பி ஆரோவில் செல்லலாம். வெளிநாட்டுப் பயணம் என்பது முதல் முக்கியத்துவம். எழுத்தை விட முக்கியம். அதனால் அதற்கு ஒன்றும் பட்சமில்லை. மற்றபடியான சந்திப்புகள் சாத்தியமே இல்லை.
இன்னும் நான்கைந்து நாவல்களை முடித்தாக வேண்டும்.
ஆங்கிலப் பதிப்பாளர் கேட்டதை அனுப்பி விட்டதால் இங்கே வந்தேன். காரணம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு மெக்கா எப்படியோ ஹிந்துக்களுக்கு காசி ராமேஸ்வரம் எப்படியோ கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் எப்படியோ அப்படித்தான் எனக்கு ரோமுக்கு அருகில் உள்ள ஒஸ்தியா என்ற இடம். இங்கேதான் பியர் பாவலோ பஸோலினியின் கல்லறையும் நினைவுச் சிற்பமும் இருக்கிறது. இந்த இடத்தை நான் தரிசிக்க வேண்டும். இங்கே நான் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டேன். இங்கே நான் நின்றால் உங்களுக்கு ஒரு புத்தகம் கிடைக்கும், நிலவு தேயாத தேசத்தை விட பிரமாதமான ஒரு புத்தகம்.
பஸோலினிதான் இந்த உலகில் என்னை ஆகக் கவர்ந்த இயக்குனர். பஸோலினி இயக்குனர் மட்டும் அல்ல. ஓவியர். கவிஞர். நாவலாசிரியர். சிந்தனையாளர். நடிகர். நாடகாசிரியர். பத்திரிகையாளர். அரசியல்வாதி. இன்னும் என்ன இருக்கிறது? எல்லாம்.
அவரைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். நீங்கள் யாரும் படித்திருக்க மாட்டீர்கள். என் வாசகர்கள் அனைவரும் கடந்த பத்து ஆண்டுகளாக, ஐந்து ஆண்டுகளாக வாசிப்பவர்கள். நான் பஸோலினி பற்றி எழுதி இருபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
இப்போது எழுதப் போவதில்லை. கூகிளில் கிடைக்கும். படித்துக் கொள்ளுங்கள். நான் எழுதிய போது கூகிள் இல்லை. புத்தகங்களை வாசித்து எழுதியது.
அவருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன். நாவல்களை வாசித்திருக்கிறேன். புத்தகங்களும் கைவசம் உண்டு. அவர் நம்முடைய தமிழ் இயக்குனர்கள் பாராட்டுகின்ற குரஸவா போல் இல்லை. பஸோலினி போன்ற ஒரு கலைஞன் கடந்த 300 ஆண்டுகளில் ஒரே ஒருவன்தான் உண்டு. அவன் மார்க்கி தெ ஸாத். பஸோலினி இயக்கிய Sodom (Salò, or the 120 Days of Sodom) என்ற படத்தைப் பார்த்தால் நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். அந்தப் படத்தைத் தனியாகப் பாருங்கள்.
ஆச்சரியம் ஒன்றுமில்லை. பஸோலினியைக் கொன்று விட்டார்கள். பஸோலினியைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தால் உங்களுக்கு அதற்கென்று தனியாக ஒரு ஆண்டு தேவைப்படும். 1968இல் ரோமில் ஒரு மாணவர் கிளர்ச்சி ஏற்பட்டது. எல்லா இடதுசாரிகளும் மாணவர்களை ஆதரித்தார்கள். ஆனால் பஸோலினி மாணவர் கிளர்ச்சியை எதிர்த்தார். போலீஸை ஆதரித்தார். அப்போது அவர் மாணவர்களிடம் சொன்னார், ”நீங்கள் அத்தனை பேரும் பூர்ஷ்வா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உண்மையில் பாட்டாளி வர்க்கம் என்றால் அது போலீஸ்காரர்கள்தான். அவர்களைத் தாக்காதீர்கள்.”
எப்போதுமே அவர் மீது வழக்குகள் பாய்ந்து கொண்டே இருந்தன. அவர் bisexual. ஒருமுறை பதினேழு வயது மாணவர்களின் முன்னே சுயமைதுனம் செய்தார் என்று கைது செய்யப்பட்டார்.
பஸோலினியின் 41ஆவது வயதில் அவர் நிநெத்தோ தவோலி என்ற 15 வயது சிறுவனைப் பார்த்து அவன் மீது தீராக் காதல் கொண்டார். வாழ்நாள் பூராவும் தவோலியுடனேயே வாழ்ந்தார். அவருடைய எல்லா படங்களிலும் நடித்தார் தவோலி. பின்னர் தவோலி ஒரு புகழ்பெற்ற நடிகராகவும் விளங்கினார். தற்போது தவோலி பிரபலமான தொலைக்காட்சித் தயாரிப்பாளராக இருக்கிறார்.
பஸோலினி எடுத்தவை சினிமா அல்ல. அவர் எழுதியது நாவலோ கவிதையோ அல்ல. பஸோலினி இந்த உலகை மாற்ற முனைந்த கலைஞர்களில் முதன்மையானவர். அவர் ஒரு இயக்கம். ஆனால் உலக அளவில் அவ்வளவு பிரபலமாகப் பேசப்படாதவர். காரணம், அவருடைய transgressiveness. என்னுடைய எழுத்தில், சிந்தனையில் ஏதாவது ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மை உண்டு என்று நீங்கள் கருதினால் அதற்குக் காரணம், பஸோலினி ஒருவர்தான். ஒருவரேதான். அவருடைய சினிமாவினால், கவிதையினால், நாவல்களால் உருவானவன் நான்.
பஸோலினியின் அரேபியன் நைட்ஸ் என்ற படத்தை இன்றே பாருங்கள். தவோலி நடித்தது.
ரோம். அங்கே Roma Termini ஒரு ரயில்வே ஸ்டேஷன். 1 நவம்பர் 1975. இரவு 10.30. பஸோலினி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம்தான் Abel Ferrara இயக்கிய Pasolini என்ற புகழ்பெற்ற படத்தின் கதை. Willem Dafoe தான் பஸோலினியாக நடித்திருப்பவர். அவசியம் இந்தப் படத்தைப் பாருங்கள்.
ரோமா தெர்மினி ரயில் நிலையத்தை நான் காண வேண்டும்.
நள்ளிரவு ஒன்றரை மணிக்கு போலீஸ் சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்துகிறது. காரை நிறுத்தி விட்டுத் தப்பி ஓடுகிறான் ஒரு பதினேழு வயதுப் பையன். பெலோஸி என்று பெயர். கார் உரிமையாளர் பஸோலினி என்று தெரிகிறது. போலீஸ் அவனைக் கைது செய்கிறது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பஸோலினியின் உடல் கடுமையான முறையில் கட்டையால் தாக்கப்பட்டு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கிடைக்கிறது. உடலின் மீது கார் பலமுறை ஏற்றி இறக்கப்பட்டிருக்கிறது. கொன்றவன் பெலோஸி. குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
ஆனால் பஸோலினியின் ஓரினச் சேர்க்கை பழக்கத்தினால் ஏற்பட்ட சண்டை என்றே ஃபாஸிஸ்டுகள் வழக்கை முடித்து விட்டார்கள். உண்மையில் பஸோலினி அவருடைய அரசியல் எதிரிகளால் தீர்த்துக் கட்டப்பட்டார் என்பதே உண்மை. பெலோஸி வெறும் கருவி. நுகர்வுக் கலாச்சாரமே இனிமேலான உலகளாவிய ஃபாஸிஸமாக இருக்கப் போகிறது என்று தான் கொல்லப்படுவதற்கு முந்தின தினம்தான் அறிவித்தார் பஸோலினி.
இத்தாலியை நான் பார்க்க வேண்டும் என்று நினைப்பதன் காரணம், அந்த்தோனியோ க்ராம்ஸி (1891 – 1937). அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை அளித்த போது ப்ராஸிக்யூட்டர் அறிவித்தார், ”இவருடைய மூளை இன்னும் 20 ஆண்டுகளுக்கு செயல்படாமல் முடக்கப்பட வேண்டும்” என்று.
க்ராம்ஸி இருந்த சிறைச்சாலை, ரோமில் அவருடைய கல்லறை ஆகிய இரண்டையும் நான் பார்க்க வேண்டும். கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கான இடுகாட்டில் இருக்கிறது அவருடைய கல்லறை. 1980களிலேயே க்ராம்ஸியின் சிறைக் குறிப்புகள் என்ற புத்தகத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். அந்த நூலை தில்லி கனாட் ப்ளேஸில் உள்ள பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸில் வாங்கினேன். பட்டினி கிடந்துதான் வாங்க முடிந்தது.
ஃபெலினி, அந்த்தோனியோனி போன்ற இத்தாலிய இயக்குனர்களெல்லாம் என்னை உருவாக்கியவர்கள் என்றாலும் மேற்கண்ட இருவர்தான் என் ஆசான்கள். க்ராம்ஸியின் மார்க்சிஸத்தில் பின்னாளில் எனக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும் அவருடைய வாழ்க்கையும் சிறைக் குறிப்புகளும் என் வழிகாட்டிகள்.
என்னுடைய இத்தாலியத் தொடர்பை இங்கே திடீரென்று இப்போது எழுதுவதன் காரணம், வெனிஸிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுத்து விட்டேன்.
காரணம், என் வாசகர்களாகிய நீங்கள்தான். ஔரங்ஸேபை முடித்து பதிப்பகத்திடம் கொடுக்காமல் வெளிநாடு செல்லக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.
இரண்டாவது காரணம், தனியாகச் செல்லக் கூடாது. ஏனென்றால், தனியாக எனக்கு ஒரு மெத்ரோவில் கூட ஏறத் தெரியவில்லை. ஓலா டாக்ஸி போடத் தெரியவில்லை. சீலேயில் அதற்கெல்லாம் வழிகாட்டி வைத்துக் கொண்டேன். ஆறு லட்சத்துக்குப் பன்னிரண்டு லட்சம் ஆனது. இதற்கு நான் சீனியோடு போயிருந்தால் ஒன்பது லட்சத்தோடு போயிருக்கும். ஃப்ரான்ஸ் என்றால் என்னால் தேசம் முழுக்க தனியாகப் போய் வந்து விட முடியும். அதைத் தவிர வேறு எங்கேயும் செல்லத் தெரியவில்லை. சீனியை அழைத்துக் கொண்டு போகலாம் என்று பார்த்தால் இப்போதுதான் அவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிஸினஸைத் தொடங்கி இருக்கிறார். அவரே வருகிறேன் என்றாலும் அதை நான் விரும்ப மாட்டேன்.
மேலும், என் செலவில்தான் போய் வர வேண்டும். இரண்டு பேர் சென்று சுற்றி விட்டு வர ஐந்து லட்சம் ஆகும். ரோமில்தான் நிறைய வேலை இருக்கிறது. ரோம் ஒரு மூலை. வெனிஸ் ஒரு மூலை.
வெனிஸிலிருந்து என்ன அழைப்பு? ஃபொந்தாஸியோன் ப்ராதா (Fondazione Prada) என்ற அமைப்பின் தலைவியான ப்ராதா சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு இரண்டு பக்கக் கடிதம் எழுதியிருந்தார். சுருக்கம், என் எழுத்து அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. ப்ராதா யார் என்று கூகிளில் தெரிந்து கொள்ளவும். இளவட்டங்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும். ஃபேஷன் கம்பெனி முதலாளி. ஒரு லேடீஸ் பையின் விலை 5000 டாலர்.
வெனிஸில் இந்த நிறுவனம் ஒரு ஓவிய, சிற்பக் கண்காட்சியை நடத்துகிறது. இதற்கு நான் ஒரு சிறுகதை தர வேண்டும். தந்தேன். 1000 வார்த்தை அளவு. ஆனால் 2000 போய் விட்டது. தாரக தாண்டவம் என்பது கதைத் தலைப்பு. கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை உலகப் பிரசித்தி பெற்ற ஆடியோ புத்தக வாசிப்பாளர் ஜார்ஜ் கைடல் (George Guidall) வாசிக்கிறார்.
நிகழ்ச்சி 22 ஏப்ரல் மாலை வெனிஸில் நடக்கிறது. ஔரங்ஸேப் காரணமாக செல்லவில்லை. ஆக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் முதல் பயணம் மெக்ஸிகோ மற்றும் சீலேவாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. இன்னும் நாலைந்து மாதங்களில். ரோமிலிருந்து எப்போது அழைப்பு வருமோ…
***
Razorpayயைப் பயன்படுத்தி சந்தா/நன்கொடை செலுத்த முயற்சி செய்யுங்கள்.