ஏன் கவிதை எழுதுகிறாய்?


ஏன் கவிதை எழுதுகிறாய்  என்றார் சிலர்
நானெங்கே எழுதுகிறேன்,
கவிதை
தன்னைத் தானே
எழுதிக் கொள்கிறது
நானென்ன செய்ய என்றேன்
அதனிடமே கேள் என்றார்கள்
தன்னைத் தானே எழுதிக் கொண்ட
கவிதையிடம் ஒருநாள் கேட்டேன்
கவிதையெழுதுவது எப்படி என
சிறகை விரி காற்றில் பற
என்றது கவிதை
எனக்கு சிறகில்லையே என்றேன்
இல்லாத சிறகை விரி, அஃதே கவிதை
என்று சொல்லிவிட்டுப்
பறந்தது
கவிதை