”தேன்சிட்டே, தேன்சிட்டே,
எங்கே இரண்டு நாட்களாகக் காணோம்?”
“ஊருக்குப் போயிருந்தேன்.”
”ஓ, அதெல்லாம்
உங்களுக்கும் கூட உண்டா?”
“பின்னே, ஊரென்பது உங்களுக்கு மட்டுமானதா?”
தேன்சிட்டு கழுத்தை ஒரு பக்கம்
நொடித்தது.
செக்ஸியாக இருக்கிறதே என்றெண்ணிய
மறுகணமே மானசீகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.
ஊரில் என்ன விசேஷம் என்றதற்கு
மகளோடு போயிருந்தேன் என்றது தேன்சிட்டு
”ஓ, அதெல்லாம்
உங்களுக்கும் கூட உண்டா?”
“பின்னே, உங்களுக்கு மட்டும்தானா?”
என்று சொன்ன தேன்சிட்டு மீண்டும் கழுத்தை
நொடித்தது.
செக்ஸி செக்ஸி என அலறிய மனதை
அதட்டி அடக்கினேன்
அதன் பிறகு பேச்சு
கொடுமை கொடுமை
என்று போக
நானும் என் பங்குக்கு
மனைவி கொடுமை மகன் கொடுமை
சக எழுத்தாளர் கொடுமை கடவுள்கள் கொடுமை
என்று கொட்டித் தீர்த்தேன்
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு
வரட்டுமா என்ற தேன்சிட்டு
கிளம்பும்போது
ஆமாம், எனக்கொரு கேள்வி
என்றது
கேள் என்றேன்
”தேன்சிட்டு தேன்சிட்டு என்கிறாயே, ஏன்?”
”தேன்சிட்டை வேறென்னவென்று அழைப்பது?”
“தேன்சிட்டா? நானா?
உனக்கேதோ மனப்பிரமை,
அல்லது,
அதுவொரு படிமமாகவும் இருக்கக் கூடும்.
ஒன்றும் பட்சமில்லை. கிளம்புகிறேன்.”
***
நீங்கள்
நம்ப மாட்டீர்கள்.
வந்தது தேன்சிட்டுதான்,
இதோ பாருங்கள்,
தேன்சிட்டு அமர்ந்த இடத்திலொரு இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு வாழ்வின் பறவையை
எழுதிச் சென்ற இறகு
அல்லது
இந்த இறகு
ஒரு தேன்சிட்டை
தேன்சிட்டாகவே கண்ட
ஒரு
மானுட மனச்சீர்மையின்
ஸ்தூல சாட்சி