என் சொல் என் தேகம்
என் சொல் என் சுவாசம்
என் சொல் என் மரணம்
என் சொல் என் தீர்வு
ஒருநாள்
என் சொற்களெல்லாம் திரண்டு வந்து
என்னைப் புசிப்பது போல் கனாக்கண்டு
எழுந்தேன்
அது கனா அல்ல
என் உடலை சொற்கள்
தின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்
இதை
எழுதும்போதே
ரோமக் கால்கள் சிலிர்க்கின்றன
ஆம்
என் உடலை சொற்கள்
தின்று கொண்டிருந்தன
பார்த்துப் பார்த்து வளர்த்த உடல்
சொற்களுக்குத் தீனியாவது கண்டு
ஒருக்கணம் வருந்தினாலும்
சொற்களைத் தின்றவன்
சொற்களாலே தின்னப்படுவான் என்கிற
தீர்க்கதரிசியின் வாக்கை
நினைவுகூர்ந்து அடங்கினேன்
ஒரே ஒரு மனக்குறை
மரணத்துக்குப் பிறகு
இதுகாறும் குடியிருந்த உடல்
கொண்டாட்டமாய் அடங்க வேண்டும்
என ஆசைப்பட்டேன்
என் உடல் சொற்களில் மறைந்து விட்டது
குறையொன்றுமில்லை