முப்பது ஆண்டுகளுக்கு
முன்பு
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையை
அறிமுகப்படுத்தினான் நண்பன்
அப்படி ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை
ஆனாலும் அவனிடம் ஒரு வசீகரம் இருந்ததை
உணர்ந்தேன்
அவன் முகமே ஒரு வசீகரம்
அவன் குடி ஒரு வசீகரம்
ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு என்றால்
மேடையில் ஒரு கலயம் இருக்க வேண்டும்
அதி குடியால் வாந்தி வரும்போது உதவும் கலயம்
இனிமேல் குடித்தால் சங்குதான் என்றார் மருத்துவர்
சரியென்று சொல்லிவிட்டு மீண்டும் குடித்தான் ப்யூக்
அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள்
குடித்து
எழுதி
காதலித்து
புணர்ந்து
செத்தான்
சாகும்போது வயது எழுபத்து நான்கு
அவன் குடித்த திருச்சி கணேஷ் பீடி இன்னொரு வசீகரம்
அவன் வாழ்க்கை ஆகப் பெரிய வசீகரம்
எவனுக்கு வாய்க்கும் நடைபாதை வாழ்க்கையும்
அவனுக்குக் கிடைத்த பெண்களும்?
***
அமெரிக்க மையத்தில் வீசா வாங்குவதற்காக
கௌண்ட்டரின் முன்னே நிற்கிறேன்
”ஏன் அமெரிக்கா செல்ல விரும்புகிறீர்கள்?”
”லாஸ் ஏஞ்ஜலஸ் போய் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி வாழ்ந்த இடங்களைப் பார்க்க வேண்டும்.”
சொல்லியிருந்தால் வீசா கிடைத்திருக்கும்
சொன்னதோ வேறு
ஏதோ உளறல்
வீசா ஐந்தாவது முறையாக மறுக்கப்பட்டது
***
இன்று ஞாயிற்றுக்கிழமை
சாலையில் நடமாட்டம் இல்லை
பார்க்கிலும் ஆட்கள் இல்லை
எப்போதும் வரும் நண்பரும் வரவில்லை
ஒரு மணி நேரம் நடந்து விட்டு
கற்பகாம்பாள் மெஸ்ஸுக்குப் போகலாமென்று
நடந்தேன்
அங்கேதான் இட்லி மிளகாய்ப் பொடி நன்றாக இருக்கும்
கையாலே இடித்தது
அப்படியே மெஸ்ஸில் சாப்பிட்டும் விடலாம்
கற்பகாம்பாள் மெஸ்ஸுக்குப் போய்
மூணு வருடம் இருக்கும்
வழியில் சித்திரக் குளத்தைத் தாண்டும்போது
எதிரே ஒரு இளம்பெண்
விழுங்கி விடுவது போல் பார்த்தாள்
நான் வசீகரமானவன்தான்
ஆனாலும் எழுபதில் இது கொஞ்சம் அதிகம்
முகத்தை மறைக்க ஆரம்பித்த பிறகு
பெண்களின் கண்களுக்கு வசீகரம் கூடி விட்டது
என எண்ணியபடி அவளைக் கடந்தேன்
தெருமுனையில் நான்
வலப்பக்கம் திரும்ப வேண்டும்
மனம் ஏதோ உந்தத்
திரும்பிப் பார்த்தேன்
அப்போது மட்டும்
அந்த அதிசயம்
நடந்திருக்காவிட்டால்
இதை நான்
எழுதியிருக்க மாட்டேன்