சூர்ய தாரையின் ஒரு துளியை
ருசித்து விழுங்கினேன்
அதன் பிறகு நடந்ததோர் அதிசயம்
நினைத்த நேரத்தில் பறக்க முடிந்தது
நினைத்த நேரத்தில்
தேவர்களுடனும்
கடவுள்களுடனும்
தீர்க்கதரிசிகளுடனும்
பேய் பிசாசுகளுடனும்
பேச முடிந்தது
பெண்கள் என்ன நினைக்கிறார்களென
புரிந்து கொள்ள முடிந்தது
மிருகங்களோடும் உறவாட முடிந்தது
பசி மறந்தது
உறக்கம் தொலைந்தது
துக்கம் சந்தோஷம் கண்ணீர் சிரிப்பு
மரணம் ஜனனம் விருப்பு வெறுப்பு
வலி சுகம் இன்பம் துன்பம் நல்லது கெட்டது
மலம் மூத்திரம் சந்தனம் பன்னீர்
தென்றல் புயல் அமிர்தம் நஞ்சு எல்லாமே
ஒன்றுபோலானது
அப்போது-
வழக்கம்போல் அருகில் வந்து
அமர்ந்தது தேன்சிட்டு
தேன்சிட்டே தேன்சிட்டே
எப்படியிருக்கிறாய் என்றேன்
உனக்கென்ன ஏதேனும் மனப்பிறழ்வா
என்றது தேன்சிட்டு
”ஆமென்றாலென்ன இல்லையென்றாலென்ன
ரெண்டும் ஒன்றுதான் தேன்சிட்டே!”
”உன்னோடு நான் தத்துவம் பேசும் நிலையிலில்லை
உன் இனத்தைச் சேர்ந்தவர்கள்
வனத்தை அழித்து விட்டதால்
நான் உங்கள் வசிப்பிடத்துக்கு வர வேண்டியதாயிற்று
பசியாறி மாசம் பல ஆச்சு
கடைசியாக உண்டது ஒரு மனிதக் குழந்தையை
இரை தேடி அலைந்தபோது
ஒரு வீட்டுத் தோட்டத்தில்
எங்களைப் போல் நாலு காலில்
தவழ்ந்து கொண்டிருந்த
ஒரு சிசுவை அடித்து உண்டேன்
யானைப் பசிக்கு சோளப் பொறி
அதற்கப்புறம் மனிதர்கள்
என்னைத் தேடி வெறிபிடித்து
அலைந்தபோது
ஒரு பாழடைந்த கோவிலிலே பதுங்கிக் கிடந்தேன்
பசியாலே சாகப் போகிறது ஒரு புலி
என விசனம் கொண்டேன்
அப்போதுதான் மாட்டினாய் நீ
உன்னைப் புசித்தால் கொஞ்ச நாள் தாங்கலாம்
ஆனால் என்னைத் தேடி நகரமே உறங்காதிருக்கிறது
எப்படியானாலும் உங்கள் துப்பாக்கி ரவையால்தான்
சாகப் போகிறேன்
கெட்டதிலும் ஒரு நல்லது
பட்டினியால் சாகாமல் உன்னைத்
தின்று விட்டுச் சாகலாம்
ஆனால் எனக்கோர் சம்சயம்…”
“என்னவென்று சொல் தேன்சிட்டே…”
”பசியால் வெறி கொண்டு கிடக்குமென்
கண்களைக் கண்டுமா நீயென்னைத்
தேன்சிட்டு தேன்சிட்டு என்று அழைத்துக் கொண்டிருக்கிறாய் நீ
மனிதனா தேவனா
தேவனென்றால் தேவனைக் கொன்ற பாவம் சுமக்க வேண்டுமென்று பார்க்கிறேன்
உண்மையைச் சொல்
நான் பசியாற வேண்டும்.”
“நான் மனிதன்தான் தேன்சிட்டே
நீயும் புலியல்ல தேன்சிட்டுதான்
எப்படியிருந்தாலும் நீ பசியாற வேண்டும்
இதோ என்னை எடுத்துக் கொள்”
என்று என் ஆடை ஆபரணங்களை அவிழ்த்து நிர்வாணமானேன்
இப்போது இந்தக் கவிதையை
ஒரு
தேன்சிட்டின்
வயிற்றிலிருந்துதான்
எழுதுகிறேன்