நீண்ட நாள் தோழியின் இறுதி சந்திப்பு

அன்றைய தினம்

Ten Downing பப்பில்

சந்திக்கலாம் என்று திட்டம்

மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள்

எட்டு மணியிலிருந்து ஒன்பதுக்குள்

நாலு ரவுண்ட் அடித்தாள்

நான் அப்போது குடிப்பதை நிறுத்தியிருந்ததால்

கோக் குடித்தேன்

ஆடலாமா என்றாள்

கோக் குடித்து விட்டு ஆட

உற்சாகமாக இல்லையென்றாலும்

அவள்

சுழன்று சுழன்று ஆடினாள்

என்னைத் தவிர

அத்தனை பேரும் இளைஞர்கள்

என்பதை கவனித்தேன்

புரிந்து கொண்டாற்போல்

’இளைஞர்கள் அலுப்பூட்டுகிறார்கள்’

என்றாள்

சிரித்து வைத்தேன்

எங்கிருந்தோ வந்த பத்திரிகையாளன்

ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவா

பெரிய ஸ்கூப்பாக இருக்கும் என்றான்

கையெடுத்துக் கும்பிட்டு வேண்டாமென்றேன்

பிழைக்கத் தெரியாதவன் என்று நினைத்துக் கொண்டு

நடனத்தில் மூழ்கினேன்

ஆனாலும்

கோக் குடித்து விட்டு ஆடுவது

உற்சாகமாக இல்லை

குடியை நிறுத்தியது தவறென்று தோன்றியது

நடனத்துக்காகவாவது குடிக்க வேண்டும்

நள்ளிரவு வரை நீண்டது நடனம்

ஆடிக் களைத்ததும் வெளியே வந்து

புகைத்தாள்

நானும் வாங்கி ஒரு இழுப்பு

இழுத்தேன்

அப்போது அவளை நெருங்கிய ஒரு

இளைஞன் கொஞ்சம் நெருப்பு வேண்டுமென்றான்

கொடுத்தாள்

பற்ற வைத்துக் கொண்டு நன்றி சொல்லி

உங்கள் தொலைபேசி எண் தர முடியுமா என்றான்

’திருமணமானவரா?’

’ஆம்’

‘உங்கள் மனைவியின் தொலைபேசி எண்ணை என் நண்பருக்குத் தாருங்கள், என் தொலைபேசி எண்ணை உங்களுக்குத் தருகிறேன், நால்வரும் சேர்ந்து ஆடுவோம்’

என்று சொல்லி விட்டு பைத்தியக்காரியைப் போல்

அத்தனை பல்லும் தெரியச் சிரித்தாள்

கொஞ்சம் மிரட்சியுடன் நகன்றான் இளைஞன்

மேலுமொரு சிகரெட்டைப் புகைத்து விட்டு

’You are such a gentleman,

Couldn’t feel even one wrong touch’

என்றாள்

பிறகு ஓலா போட்டுக் கொண்டு கிளம்பினாள்

கவனம் கவனம் என்று சொல்லி வழியனுப்பினேன்

அதற்குப் பிறகு

என் தொடர்பு எல்லையிலேயே

இல்லை அந்த

நீண்ட நாள்

தோழி