இரு கவிதைகள்

இரவின் மறுபெயர்

மரணம்

இருள்

நட்சத்திரம்

நிலா

திருடன் மற்றும் இதர குற்றவாளிகள்

மயானம்

பேய்

பிசாசு

மணம்

பிணம்

நிர்வாணம்

காமம்

கலவி

தனிமை

தற்கொலை

போதை

இசை

ஊளை

பசி

முனகல்

வெம்மை

கடல்

ரகசியம்

நோய்

***

?

பார்ப்பதற்கு பெர்ஷியன் பூனை மாதிரியே இருக்கும் டெட்டி

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் அழகி

உடம்பிலும் வாலிலும் புஸுபுஸுவென்று முடிக்கற்றை

சாம்பல் பழுப்பு

சாது

சாத்வீகி

பெண் ஞானி

சண்டையே போடாது

சண்டை என்றாலும் ஓடி விடும்

குட்டியாக இருக்கும்போது வீட்டுக்கு எடுத்து வந்தேன்

அதிசொகுசாயிருந்தது அஞ்சு நாள்

ஏசி என்ன

வேளாவேளைக்கு உணவு என்ன

மண் கலயத்தில் தண்ணீர் என்ன

படுக்க மெத்தை என்ன

எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு

சுதந்திரம் தேடி கீழே தரைத்தளம் சென்றது

அவ்வப்போது மூன்று நான்கு குட்டிகள் போடும்

எந்தக் குட்டியும் மிஞ்சாது

ஒவ்வொன்றாய் காரில் அடிபட்டுச் சாகும்

ரெண்டு மூணு நாள் ஈனமாய் அழுது விட்டு

விட்டு விடும் டெட்டி

இப்போது மூணு குட்டி போட்டிருக்கிறது

இன்று காலை நடைப் பயிற்சி முடித்து விட்டு

வந்து கொண்டிருந்த என்னிடம் ஓடி வந்து

மேலே வந்து விடவா

என்று

கேட்டது…