எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று
Chamiers சாலை அனோக்கி காஃபி ஷாப்
அதன் சுவர்களில் நூறு நூற்றைம்பது ஆண்டுக்கு முற்பட்ட
புகைப்படங்கள் மாட்டியிருக்கும்
குடும்பப் படங்கள்
மடிசார் கட்டிய பெண்கள்
டர்பன் வைத்த ஆண்கள்
கால எந்திரத்தில் பின்னோக்கிச் சென்றது போன்ற
பிரமையூட்டும் படங்கள்
எங்கள் ஊரில் ஒரே ஒரு ஸ்டுடியோதான் இருந்தது
வேலைக்கு விண்ணப்பிக்கும் வரை அப்போது யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை
ஆனாலும் எங்கள் வீட்டில் இரண்டு புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன
இரண்டிலும் இரண்டு தாத்தா
ஒன்று அம்மா வழித் தாத்தா
பர்மா ராமசாமி
இரண்டாம் உலக யுத்தத்தில் வங்காளம் வழியே நடந்து வந்தவர்
புலம் பெயர்ந்த துக்கத்தில் குடித்தே அழிந்தவர்
நான் பிறப்பதற்குள் இறந்து போனார்
இன்னொரு புகைப்படம் நைனா வழித் தாத்தா
கோவிந்தசாமி
சித்தூர்க்காரர்
போலீஸ்காரர்
ஆஜானுபாகுவான தோற்றம் முரட்டு மீசை
எப்போதும் தெலுங்குப் பேச்சு
இரண்டு புகைப்படங்களுமே தாத்தாக்கள் செத்த பிறகு எடுத்தது
வாய் தொங்கி விடாமல் இருக்க இருவர் தாடையையும் துணியால் கட்டி தலையில் முடிந்திருந்தார்கள்
இருவருமே நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்
கண்கள் மூடியிருந்தன
துணி அவிழ்ந்தால் தாடை தொங்கி விடும்போல் தோன்றியது
அந்தப் புகைப்படங்களைப் பார்த்து அறுபது ஆண்டுகள் இருக்கும்
இப்போதும் ஒரு விஷயம் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது
இரண்டு படங்களிலுமே தாத்தாக்களின் நாக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது
தொங்கும் நாக்கை உள்ளே தள்ளி கட்டியிருக்கக் கூடாதா துணியை?