ஞாபக சக்தி என்ற அருள் எனக்கு இறைசக்தியிடமிருந்து கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் நான் இருந்திருக்கும் இடமே வேறு. சிலரிடம் இருக்கும் அந்தத் திறனைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். திலகவதி அவர்களில் ஒருவர். போட்டோகாப்பி எடுக்கும் எந்திரம் போல் எல்லாமே அவர் மனதில் பதிந்து விடும்.
அதேபோன்ற ஒரு நண்பர் ஸ்ரீராம். ஸ்ரீராம் தன்னுடைய அந்தத் திறமையைக் கொஞ்சமும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தம்தான். குறிப்பாக கல்வித் துறையில் இந்தத் திறமையை வைத்து மிகப் பெரிய இடத்துக்குப் போய் விடலாம். உதாரணமாக, சிவில் சர்விஸ் தேர்வு. முதல் பத்து இடத்தில் வரும் அளவுக்கு ஸ்ரீராமுக்கு ஞாபகத் திறன் உண்டு. இன்று அவரிடம் ஐயானிஸ் ஸெனாகிஸ் என்ற இசைக் கலைஞர் பற்றி நான் எந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் என்றேன். கலகம் காதல் இசை என்றார். அதோடு நிறுத்தவில்லை. கணித நிபுணர்தான் இல்லையா என்றார்.
சமீபத்தில் எனக்கு அறிமுகமான அருண்மொழி நங்கையின் புத்தகங்களிலிருந்து அவரும் இந்தப் பிரிவில் வருபவர் எனத் தெரிகிறது.
இந்த வார இறுதியில் என்னைச் சந்திக்க இருக்கும் நண்பர்கள் கலகம் காதல் இசை நூலில் உள்ள காலமும் வெளியும்: ஒலியும் ஒளியும்: ஓர் குறுக்கு வெட்டுத் தோற்றம் என்ற கட்டுரையையும் ரெண்டாம் ஆட்டம் என்ற சிறு நூலையும் படித்து விட்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். படிக்காமல் வந்தால் நீங்களே எல்லோருக்கும் படித்துக் காட்ட வேண்டும். அது ஒரு நிகழ்த்துக் கலை மாதிரி. எது உசிதமோ உங்கள் விருப்பம்.