இறுதி அத்தியாயம்

அது ஒரு பெரிய வீடு

புராதனத் தோற்றம் தரும் வீடு

உள்ளே பத்துப் பன்னிரண்டு அறைகள்  

எல்லா அறைக் கதவுகளிலும் கனத்த பூட்டு

மூதாட்டி எனச் சொல்ல முடியாத தோற்றம் கொண்டிருந்த

அறுபதைத் தாண்டிய ஒரு பெண்மணி –

இளம் வயதில் அழகியாக இருந்திருக்க வேண்டும் –

ஒன்பது மணி அளவில் சயன அறையிலிருந்து எழுந்து வருவாள்

விளக்கு மாடத்திலிருக்கும் கனத்த சாவிக் கொத்தை எடுத்து

வீட்டின் பின்புறக் கதவைத் திறப்பாள்

பலவித வண்ணங்களைத் தாங்கிய

பலவேறு முகபாவங்களைத் தரித்துக் கொண்டிருக்கும்

விதிகளை ஒருபோதும் மீறியிராத  

பத்துப் பன்னிரண்டு ஒழுக்கமான பூனைகள்

சிலைபோல் அமர்ந்திருக்கும்

வீட்டுக்குள் வந்து பூனை உணவை எடுத்துச் சென்று

எல்லா பூனைகளுக்கும் அதற்கான கிண்ணங்களில் போடுவாள்

போட்டதுதான் தாமதம், பலநாள் பட்டினி போல் பாய்ந்து சாப்பிடும் பூனைகள்

பிறகு

பல் துலக்கி விட்டு வீட்டை சுத்தம் செய்வாள்

அதற்குள் பூனைகள் சாப்பிட்டு அதனதன் இருப்பிடம் சென்றிருக்கும்

பூனைப் பாத்திரங்களை எடுத்து வந்து தேய்ப்பாள்

பிறகு

பின்கட்டுக் கதவைப் பூட்டி விட்டு

சாவிக் கொத்தைப் பழையபடி விளக்கு மாடத்திலேயே வைப்பாள்

பிறகு

ப்ரெட்டை சுட வைத்து வெண்ணெய் தடவி உண்பாள்

பத்தரை மணி வாக்கில் பக்கத்திலிருக்கும்

டிபார்ட்மெண்டல் ஸ்டோர் சென்று தேவையான பொருட்கள் வாங்கி வருவாள்

மதிய உணவு தயாராகும்

அதன் பின் குளியல்

எல்லாம் முடிந்து இரண்டு மணிக்கு உட்கார்ந்தால்

மாலை வரை விதவிதமான தொலைக்காட்சி சீரியல்கள்

சீரியல் கண்டு சிரிப்பாள் அழுவாள்

அந்தந்தப் பாத்திரமாகவே மாறிப் போவாள்

ஆறு மணி வாக்கில் எழுந்து வந்து விளக்குகளைப் போட்டு விட்டு

விளக்கு மாடத்திலிருந்து கனத்த சாவிக் கொத்தை எடுத்து வந்து

பின்கட்டுக் கதவு திறந்தால்

காலையில் கண்டபடியே

விதிகளை ஒருபோதும் மீறியிராத 

அந்தப் பத்துப் பன்னிரண்டு ஒழுக்கமான பூனைகள்  

சிலைபோல் அமர்ந்திருக்கும்

எல்லாவற்றுக்கும் சாப்பாடு போட்டு விட்டுக்

கொஞ்ச நேரம் காத்திருப்பாள்

பூனைகள் உண்டபின்

கிண்ணங்களை எடுத்து வந்து தேய்ப்பாள்

பிறகு

பின்கட்டுக் கதவைப் பூட்டி விட்டு

சாவிக் கொத்தைப் பழையபடி விளக்கு மாடத்திலேயே வைத்து விட்டு மீண்டும் சீரியல்களில் ஒன்றுவாள்

நள்ளிரவு பன்னிரண்டு வரை பலவித சீரியல்களைக் கண்டு களித்து விட்டு

தன் mac pro மடிக்கணினியை மூடுவாள்

ஒருநாள்

அந்தப் பெண்மணி வழக்கம் போல் சயன அறையிலிருந்து எழுந்து வரவில்லை

பின்கட்டுக் கதவு திறக்கப்படவில்லை

வீட்டில் எந்தச் சலனமும் இல்லை

சில தினங்களில் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தார் காவல்துறையிடம் புகார் அளித்தார்

சடுதியில் வந்த காவலர் வீட்டின் கதவை உடைத்துத் திறந்தார்

அவசர ஊர்தியில் வந்த

முகக் கவசம் அணிந்த பணியாளர்

பெண்மணியின் அழுகிய பிரேதத்தை

ஊர்தியில் வைத்து எடுத்துச் சென்றார்

அதன் பிறகு அந்த வீட்டில்

எந்தச் சலனமும் இல்லை

பலவித வண்ணங்களைத் தாங்கிய

பலவேறு முகபாவங்களைத் தரித்துக் கொண்டிருந்த

விதிகளை ஒருபோதும் மீறியிராத 

அந்தப் பத்துப் பன்னிரண்டு ஒழுக்கமான பூனைகள்

சென்ற இடம்

தெரியவில்லை…