கனவில் ஒரு கவிதை

“நீயும்

கனவிலா வர வேண்டும்,

இதையும் மறந்துவிடுவேனே?”

“கவலை கொள்ளாதே,

கனவிலும் இருப்பேன்,

நனவிலும் இருப்பேன்.”

ஒவ்வொரு

எழுத்தாக

வார்த்தையாக

வாக்கியமாக

அர்த்தமாக

படிமமாக

எல்லாவற்றையும்

எழுதிக் காண்பித்தது.

“மேலே கேள் என்ன வேண்டும்?”

“கனவு, மறந்து விடும்

இல்லையா?”

என்று புலம்பினேன்

”இதோ பார்,

இது கனவல்ல,

கனவு போல் தோன்றுகிறது.

இதன் பெயர்

 நனவு, அவ்வளவுதான்

கவலை விடு.”

“என்னைப் பற்றி உனக்குத் தெரியாது

எனக்கு மறதி அதிகம்.

நனவில் கனவு

மறந்து விடும்.”

”பிதற்றாதே. நானொரு மந்திரம் சொல்வேன்.

சொல்வதை அப்படியே திரும்பச் சொல்.”

சொன்னேன்.

”இனி இது மறக்காது.

நன்றாக உறங்கு.”

சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றது

கவிதை

அந்த மந்திரம் என்ன என்று கேட்கிறீர்களா?

மறப்பது வரம்.

மறதியே செல்வம்