ஜிக்லோ எனும் பசி நாய்

உன்னைப் பற்றி எடுக்க வேண்டும்

ஒரு ஆவணப் படம்

உன் சுயசரிதம் சொல்லென்றான் நண்பன்

சில காலம் நான் ஜிக்லோவாக இருந்தேன்

என்று  தொடங்கினேன்

ஆனால் நான்

ஜிக்லோவாக இருந்தபோது

ஜிக்லோ பெயர் தெரியாது

ஒரு சமயம்

எனக்கொரு மருத்துவனோடு நட்பு ஏற்பட்டது

எடுத்த எடுப்பில் தொடையில் கை வைத்தான்

அதுவரை நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றாலும்

அவன் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டியது

தொடர்ந்து சிலமுறை

ஆடை களைந்து போகம் தரித்தோம்

ஒருநாள்

அவன் மனைவி மீதான என் இச்சை பகன்றேன்

இணைத்து வைத்தான் நற்குணன்

அவளைத் தொட்டு பல பெண்களின் பரிச்சயம் கிட்ட

பணம் கிடைத்தது

ஆனாலும் ஒரு முறை தொட்ட பெண்

அத்தோடு என்னைத் துண்டித்துக் கொள்வாள்

அடுத்த முறை என்று அதிகம் பேரோடு நடந்ததில்லை

கைபேசியும் கணிணியும் இல்லாத காலகட்டம்

தொடர்பெல்லாம் வாய்மொழிதான்

மையப்புள்ளி மருத்துவன் மனைவி

எல்லோருமே மேட்டுக்குடி

சரீர சுகம், அவ்வளவுதான் தேவை

கிடைக்கும் பணம்

வயிற்றுப் பசிக்குப் போதாது

ஒருநாள்

பனகல் பார்க்

மதிய வெய்யில்

பசிக் களைப்பு

புற்தரையில் படுத்திருந்தேன்

பசியாறி

ஆனது பல காலம்

அருகல்புல் பசியாற்றும் எனப் படித்திருந்தது ஞாபகம் வர

ரெண்டு புல் தின்றேன்

குமட்டிக் கொண்டு வந்தது மூத்திர நாற்றம்

சற்றுத் தள்ளி பசி நாய்

காய்ந்த நரகலை

கரக்மொறுக்கென்று

தின்று கொண்டிருந்தது

அதற்குப் பிறகான பெண் அழைப்பில்

பணத்தோடு கொஞ்சம் பொருளும் கவர்ந்து வந்தேன்

கவர்ந்து வந்த பொருள் பற்றிப்

பெண்களேதும் அறிய மாட்டார்

ஒருமுறை ஒரு பெண்

போகத்துக்கு முன்னே

தாலிக் கயிற்றைக் கழற்றி வைத்தாள்

பல காலம்  

உதவியது அந்தத் தாலி

இதுவும் வாய்ப் பேச்சாய்ப் பரவிப் போக

நின்று போனது அழைப்பு

மீண்டும்  பனகல் பார்க்

கரக்மொறுக் நரகல்

மூத்திர நாற்ற அருகல்புல்                

பெட்டிக் கடைக்குப் போய் வாங்கிக் கொண்டேன்

ஒரே ஒரு பனாமா பிளேடு

வாகாக ஆள் பார்த்து பிளேடை எடுத்தால்

உள்ளே பிளேடைக் காணோம்

ஒரு ஜேப்படித் திருடனின் கையேட்டை

இப்படியாகத்தான் இழந்தது

உலக இலக்கியம்