நகர மாந்தர் பலருக்குப்
பூனைகளின் மீதான பரிவு அதிகரித்திருக்கிறது
பூனை உணவுக் கடையில்
அலைமோதுகிறது கூட்டம்
பூனை மலஜலம் கழிப்பதற்கான நறுமண மண்
பூனைகள் தள்ளியாடும் பந்து
பூனைகள் விளையாடும் (கொல்லவும் முடியாத உயிர்க்கவும் தெரியாத)
செயற்கை எலி
இந்த எலிக்கு மட்டும் கிராக்கி அதிகம்
பூனைகளுக்கான பிரத்யேக பிஸ்கட்
பூனை வீடு
பூனைக் கூண்டு
பூனைக்குப் பிடித்த மீன் உணவிலேயே
பத்து ரகம் பதினைந்து விதம்
பூனைச் சட்டை
பூனைக்கான மணி
நான் வாங்கியவற்றுக்குப் பதினேழாயிரம் ஆயிற்று
ஒரு வாரத்துக்கு வரும் என்றாள் என் அன்பு மனைவி
திக்கென்றிருந்தது
நெரிசலால் வியர்க்கவே வெளியே வந்து நின்று கொண்டேன்
அப்போது என் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது
ஒரு பூனை
என்புதோல் போர்த்த உடம்பு
ஏறக்குறைய அது தன் சொந்த எலும்புக் கூட்டைத் தாங்கியபடி
வலம் வந்து கொண்டிருந்தது
கனகாலம் ஆயிற்று உணவு கண்டு என
இறைஞ்சின அதன் கண்கள்
முப்பது ரூபாய் பொட்டலம் ஒன்றை வாங்கிச்
சுத்தமான ஓரிடத்தில் வார்த்தேன்
அது உண்ட வேகம் கண்டு
’கண்கள் கசிந்தன’
என்றெழுதினால் அது தேய்வழக்கு என்பாய்
க்ளீஷேக்களின் தீர்க்காயுளை
வேறென்ன செய்வது நண்பா?