சுபிமல் மிஸ்ரா எனக்கு சமீபத்திய அறிமுகம். வங்காள சாரு நிவேதிதா. ஆனால் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது நான் இருபத்தேழு வயதில் எழுதியதை எழுதியிருக்கிறார். என்னை விட பத்துப் பன்னிரண்டு வயது பெரியவர். சந்திப்பதற்காக கொல்கொத்தா செல்லலாம் என்று நினைத்தேன். மிகவும் நோய்வாய்ப்பட்டு பேசக் கூட முடியாமல் இருப்பதாக அறிந்தேன். அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றோர். என் ஸீரோ டிகிரியை நான் கேத்திக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். சுபிமல் பற்றி அராத்து:
சாரு நிவேதிதா சொல்லி சுபிமல் மிஸ்ரா எழுதிய wild animals prohibited என்ற சிறுகதையை படித்தேன். நம் ஆட்கள் ஆண்டன் செகாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம், தவறில்லை. ஆனால் சுபிமல் மிஸ்ரா பெயரே தெரியாமல் இருக்கிறோமே , அதுதான் நம்முடைய தாழ்வுணர்ச்சி அல்லது அந்நிய மோகம். தலைவர் இந்தக் கதையை 1962 ல் எழுதி இருக்கிறார். இவருடைய சில கதைகளை ஆன்டி ஸ்டோரி (anti stories) என்று வகைப்படுத்துகிறார்கள்.ஹார்ப்பர் பெர்ரினியல் எடிட்டர்கள் சிறந்த 10 பத்து புத்தகங்களை தேர்ந்தெடுத்ததில் சுபிநல் மிஸ்ராவின் இந்தத் தொகுப்பும் ஒன்று. இந்தக்கதையில் இரண்டு ஜோடிகள் , இரண்டு பேச்சிலர்கள். ஜோடி மாற்றிக்கொள்வது , பேச்சிலர்களுக்கு மனைவியை பகிர்ந்தளிப்பது போன்றவைகள் உண்டு. உடனே நாக்கைத் தொங்கப் போட வேண்டாம். இதெல்லாம் கிளுகிளுப்பாக இருக்காது. அதற்காக டிரையாகவும் இருக்காது. பெயின் என்ற பஜனைக்குள் எல்லாம் போக மாட்டார். வெகு சாதாரணமான ஒரு சம்பவத்தை சொல்வது போல சொல்லிக்கொண்டு போவார். கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இவரை ரைட்டர்ஸ் ரைட்டர் என்று பெங்காலில் கொண்டாடுகிறார்களாம். இந்தக் கதையில் நான் கண்டடைந்தது என்னவென்றால்- இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகளில் , இரண்டு வெவ்வேறு நாகரீக கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரக்டர்கள் ஒரே கதையில் வருகிறார்கள். இந்த இருவகை மனிதர்களுக்கு இடையில் எப்போதும் மத்திமமாக ஒரு பெருங்கூட்டம் இருந்துகொண்டிருக்கிறது. இந்த மனித வகையினர் வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வகையினரை கொன்று போட்டு விடுவார்கள். ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதிலும் இந்த மத்திம பெருங்கூட்ட கலாச்சாரமற்ற கோஷ்டி இருக்கிறதே , அதுதான் பயங்கரம். அந்த கோஷ்டி மற்ற இரண்டு வகையினரையும் எப்போதும் கொல்ல தயாரான மனநிலையில் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் கொலை என்பதை அப்படியே அப்பட்டமாக கொலை என்ற பெருளில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது ஏதோ மேஜிக்கல் ரியலிஸம் அல்ல. இதுதான் நிஜமான இந்தியா. அதைத்தான் அவர் சர்வசாதாரணமாக ஒரு குட்டிச் சிறுகதைக்குள் விசிறி விட்டு போயிருக்கிறார். மற்ற கதைகளையும் படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.