என் வீட்டில் இப்போது பத்து பூனைகள் உள்ளன. லக்கி தாய்ப் பூனை. ஸிஸ்ஸி, ச்சிண்ட்டூ, கெய்ரோ, டெட்டி இவை ஒரு வயது ஆன பூனைகள். லக்கிக்குப் பிறந்தவை. லக்கியே மீண்டும் ஐந்து குட்டி போட்டது. இப்போது மூன்று மாதம் ஆகிறது. இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படியே விட்டால் நூற்றுக்கணக்கில் பெருகி விடும் என்று லக்கிக்கும் மற்ற குட்டிகளுக்கும் கர்ப்பத்தடை, காயடிப்பு ஆகிய விஷயங்களைச் செய்து விட்டேன். இயற்கையின் இயல்பான சுழற்சியின் மனித இடையீடு என்று இதைப் பார்க்கலாகாது என்பதை பூனைகளை அறிந்தவர்கள் அறிவர். இனப்பெருக்கம் பெண் பூனைகளுக்குத் தண்டனை. காமம் ஆண் பூனைகளுக்குத் தண்டனை. இப்படித்தான் பூனை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதிலேயும் எனக்குக் கருத்து முரண்பாடு உண்டு. பூனைகளை இப்படிக் காயடித்து, கர்ப்பப்பை நீக்கி வீட்டில் வளர்க்கலாகாது, பூனைகள் வெளியில் அவைகளின் இயல்பில் வளர வேண்டியவை என்பது என் கருத்து. ஆனால் அவந்திகா லக்கியைக் காப்பாற்றக் கொண்டு வந்தாள், அது பத்தாகப் பெருகியது.
கர்ப்பப்பை நீக்கம், காயை அகற்றுதல் ஆகியவற்றுக்காக சென்ற மாதம் எனக்கு 60000 ரூ. ஆனது. அதற்காக நான் பட்ட பாடு ஒரு நாவலுக்கானது. கார் கிடைக்காது. மருத்துவர் சொன்ன நேரத்தில் போக வேண்டும். மொத்தம் பன்னிரண்டு முறை திருவான்மியூர் சென்றேன். இதில் ஐந்தாறு முறை ஆட்டோ பயணம். ஆட்டோவில் சென்றால் அந்த சத்தத்தில் மிரளும் பூனை எகிறிக் குதித்து விட்டால் பூனை மரணமடையும். காரில் இந்தப் பிரச்சினை இல்லை. மருத்துவர் மதியம் தெரிவிப்பார், மாலை வாருங்கள் என்று. கார் வேண்டுமானால் நண்பரிடம் முதல் நாளே சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் நான் என்னுடைய இணைய தள வாசகர்களுக்குப் படிக்கத் தரலாகாது என்றே நினைத்திருந்தேன். அவர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள். அதனால் நான் எழுதிக் கொண்டிருக்கும் ம்யாவ் நாவலிலேயே இதை எழுத நினைத்திருந்தேன். ஆனால் சென்ற மாதம் எனக்கு வந்த ஒரு வாட்ஸப் செய்தி இதை எழுத வைக்கிறது.
என் நெருங்கிய நண்பர் ஒருவர் அனுப்பிய செய்து அது: நீங்கள் மிகப் பெரிய சேவையைச் செய்கிறீர்கள்.
நண்பரும் பூனை, நாய்களுக்காகப் பணி செய்பவர். காலையும் மாலையும் தெருத் தெருவாகச் சென்று பூனை நாய்களுக்கு உணவிடுபவர். என் 30 ஆண்டுக் கால நண்பர்.
எனக்கு அவர் செய்தியைப் படித்து பல விஷயங்கள் மனதில் மோதின. ஒருவகையில் இது நான் அவருக்கு எழுதும் பதில்தான்.
ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இருக்கிறார். அவரிடம் ஒரு பத்து பூனைகளைக் கொடுத்து வளர்த்து வாருங்கள் என்று சொன்னால் அது எத்தனை பெரிய சமூகக் குற்றமோ அதைப் போன்றதுதான் நான் செய்வதும். என்னுடைய ஒரு நாளில் குறைந்த பட்சம் ஐந்து மணி நேரம் பூனைகளுக்காக செலவு செய்கிறேன். அந்த ஐந்து மணி நேரமும் இந்த சமூகத்துக்காக நான் எழுத வேண்டிய காலம். என் வயது எழுபதை நெருங்குகிறது. இன்னும் ஐந்து பெரிய நாவல்களை முடிக்க வேண்டும். ஆய்வுகள் செய்ய வேண்டும். இதற்கிடையில் வீட்டில் பூனைப் பண்ணை இருப்பதால் பணிப்பெண்கள் வருவதில்லை. தினமும் பாத்திரம் தேய்ப்பதிலும் சமைப்பதிலும் இரண்டு மணி நேரம் போகிறது. ஆக, நான் எழுத அமர்வதற்கே மதியம் மூன்று ஆகி விடுகிறது. எவ்வளவு பெரிய சமூகக் குற்றம் இது!
பூனை வளர்ப்பை யார் வேண்டுமானாலும் செய்து விட முடியும். ஆனால் நான் எழுதுவதை நான் மட்டுமேதான் செய்ய இயலும். மேலும், நான் செய்வது ஒரு ஞானியின் காரியம். மானுட குலத்தின் ஞானத்தைப் பற்றிய, அறம் பற்றிய விசாரத்தில் இருக்கிறேன் நான்.
இது தவிர இதற்கு செலவாகும் பணம். மாதம் 60,000. (கீழ்த்தளத்தில் இருக்கும் பத்து பூனைகளுக்கும் சேர்த்து இந்தத் தொகை!) எனக்கு எழுத்தின் மூலம் வரும் அறுபதாயிரத்தையும் பூனைக்கு செலவிட்டால் என்னால் இனிமேற்கொண்டு எந்தப் பயணமும் செய்ய முடியாது. நீங்கள் உலகம் சுற்றுங்கள் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் மாதம் 15000 ரூ. கொடுக்க ஆரம்பித்தார். எல்லாமே நாய்களுக்குச் செலவானது. சீலே போக முடியவில்லை. நாய் போனதும் பூனை வந்தது. மோடியும் வந்தார். நண்பரும் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டார். மோடியால் வியாபாரம் பழையபடி போகவில்லை.
எனவே என்னால் முடிந்த வரை பிச்சை எடுக்கிறேன். பூனைகளுக்காக. இதில் எனக்கு எந்த கௌரவப் பிரச்சினையும் இல்லை. தியாகராஜரை உங்களுக்குத் தெரியும். பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார். அக்காலத்தில் ஞானத்தைக் கொடுத்தால் தட்சணை கூட வாங்கக் கூடாது. எனவே தெருவில் சென்று பாடி உஞ்சவிருத்தி செய்தார். எல்லாம் சரி. அவரது எண்பதாவது வயதில் மனம் உருகிப் பாடுகிறார். ராமா, எத்தனை நாள்தான் நான் உப்பு இல்லை, அரிசி இல்லை, சர்க்கரை இல்லை என்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது?
அதைப் படித்தபோது நான் ரத்தக் கண்ணீர் சிந்தினேன். ஒரு மகா ஞானிக்கே இந்த சுய இரக்கம் வருகிறது. ”என்னை ஏன் இந்தக் கேவலமான உலகில் வாழ நிர்ப்பந்தித்திருக்கிறாய்? உன் மடிக்கு நான் எப்போது வருவேன்?” கதறுகிறார் தியாகராஜர். (இந்தக் கீர்த்தனையை ஒருத்தர் கூட பாடி நான் கேட்டதில்லை. பாட மாட்டார்கள் அஞ்ஞானிகள்.)
எனக்கு ராமர் இல்லை. எனக்கு சீதை இல்லை. என்னுடைய கடவுள் எழுத்து. என் சுவாசம் எழுத்து. என் சுவாசம் நீங்கும் வரை நான் எழுதிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அதற்கு இடையில் இந்தப் பூனைக் குழந்தைகள். பிச்சை எடுக்காமல் இந்தக் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்து விடலாம்.
ஏன் மற்றவர்களைச் சார்ந்து, மற்றவர்களை எதிர்பார்த்து இருக்கிறாய் சாரு என்று நேற்று கேட்டாள் அவந்திகா.
வரும் காசை எல்லாம் பூனைகளுக்கு அள்ளி விட்டால் என் பயணத்துக்கு நான் என்ன செய்வேன்? எழுத்து அளவுக்கே எனக்கு முக்கியமானது பயணம். இதுவரை என் நண்பர்கள், என் வாசகர்கள் கொடுத்த பணத்தில்தான் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். எந்த இலக்கிய அழைப்பும் இதுவரை எனக்கு அளிக்கப்பட்டதில்லை. ஒரே ஒரு முறை சிங்கப்பூர் சென்று வந்ததோடு சரி, நான்கு நாட்கள். ’அதனால்தான் நண்பர்களை எதிர்பார்த்து இருக்கிறேன், என் குழந்தைகளுக்கு உணவு வாங்க’ என்று நினைத்துக் கொண்டேன். அவந்திகாவிடம் சொல்லவில்லை. அவளுக்குப் புரியாது. உலகமே நம்முடைய உள்ளங்கையில் சாரு என்று ஏதாவது தத்துவம் பேசுவாள். அது மேலும் நம் மன உளைச்சலை அதிகரிக்கும்.
பல சமயங்களில் நண்பர்களிடம் பூனைகளுக்காக யாசகம் கேட்கும் போது தியாகராஜரைப் போலவேதான் சுய இரக்கத்தில் என் மனம் அரற்றுகிறது. எழுபது வயதிலும் நமக்கு இதெல்லாம் தேவையா? வாஸ்தவத்தில் எனக்குப் பணமே தேவையில்லை. பயணத்துக்கு உட்பட எனக்கு வரும் சந்தாத் தொகையே போதும். ஆனால் பூனை வளர்ப்புக்கே பெரும் தொகை போய் விடும் போது என்ன செய்யட்டும்? எல்லாமே என் மீது திணிக்கப்பட்டது. இப்போது இந்த அவலத்தையும் என் குழந்தைகளுக்காகப் பொறுத்துக் கொள்கிறேன்.
அதுவும் தவிர, நண்பா, பூனை வளர்ப்பு என்று சொல்லிக் கொண்டு என் நேரத்தையெல்லாம் பூனைகளுக்குச் செலவிடுவது சமூக சேவை அல்ல. சமூகக் குற்றம். ஆனால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னைச் சுற்றி நடப்பவை எதுவும் என் விருப்பத்தில் நடப்பது அல்ல. வெளிப்படையாக அவ்வளவுதான் சொல்ல முடியும்…