வரும் சனிக்கிழமை அன்று (14.5.2022) என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. The Outsider என்று பெயரிட்டிருக்கிறோம். இயக்குனர் ஷங்கரின் கைங்கரியத்தில் அந்நியன் என்றால் பைத்தியம் என்ற அர்த்தம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் இந்த ஆங்கிலத் தலைப்பு. முதல் இரண்டு நாட்கள் நடக்கும் படப்பிடிப்பு சும்மா ஒரு மாதிரிக்குத்தான். எப்படி வருகிறது என்று சோதிப்பதற்காக. நான் கணினியில் தட்டச்சு செய்வது. (எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் அதிவேகத்தில் தட்டச்சு செய்வது ஜெயமோகன். அவருக்கு அடுத்தபடியாக நான். சில சமயங்களில் வெறி கொண்டு தட்டச்சு செய்யும் போது அவரை விடவும் அதிக வேகத்தில் அடிப்பேன்.) நான் காய்கறியும் வெங்காயமும் கொத்துமல்லிக் கீரையும் நறுக்குவது. நான் ஒரு பெரிய கத்தி வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு நறுக்கினால் இங்கே உள்ளவர்கள் கையில் வெட்டிக் கொள்வார்கள். அந்தக் கத்தி நட்சத்திர ஓட்டல்களிலும் மலேஷியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. பெரிய விலை. மாமிசம் வெட்டும் பட்டாக் கத்தி மாதிரி இருக்கும். அதைக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கண்களையும் மூடிக் கொண்டு வெங்காயத்தை நறுக்கி விடுவேன். இறையருளால் இதுவரை கையில் வெட்டிக் கொண்டதில்லை. குடும்பஸ்தர்கள் யாரும் இத்தனை நேர்த்தியாகவும் வேகமாகவும் வெட்டி நான் பார்த்ததில்லை. பெண்கள் உட்பட. வீட்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் வந்து எட்டிப் பார்க்கும் பணிப்பெண்கள் நான் வெங்காயம் வெட்டுவதைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.
ராயர் கஃபே வர வேண்டும். என் வாழ்வில் தீராத இடம் பெற்ற ஒரு இடம். நான் பாத்திரம் தேய்ப்பது வரும். இதையெல்லாம் எடுக்க வேண்டும். இதெல்லாம்தானே அன்றாட வாழ்க்கை? பார்க்கிலும் கடற்கரையிலும் நடப்பது வரும். சுய தணிக்கை செய்யப்பட்ட படம் என்பதால் சில விஷயங்கள் வராது. எடுக்கப்படவும் படாது. அதற்கான சமூகச் சூழல் இங்கே இல்லை. ஃப்ரான்ஸாக இருந்திருந்தால் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். கோவா பப்பில் ஆடியது இடம் பெறுமா என்று தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும், எதை வைத்துக் கொள்ள வேண்டும், எதை நீக்க வேண்டும் என்பதில் இயக்குனரின் முடிவே இறுதியானது.
இயக்குனருக்கு சினிமா தெரிந்ததை விட என்னைத் தெரிந்திருக்க வேண்டும். சினிமாவை ஒளிப்பதிவாளர் கவனித்துக் கொள்வார். இந்த ஆவணப்படத்தில் நீங்கள் கொஞ்சமும் யூகிக்க முடியாத ஒரு இன்ப அதிர்ச்சியும் காத்திருக்கிறது. படம் வெளி வரும்வரை அதை நான் சொல்ல இயலாது.
படத்துக்கான பட்ஜெட் ஏற்கனவே சொன்னேன். ஜான் ஆப்ரஹாம் மாதிரியோ மற்றவர்கள் மாதிரியோ பொதுமக்களிடம் நான் வசூல் செய்ய முடியாது. இங்கே எழுத்தாளனுக்கு சமூகத்தில் இடம் இல்லை, அடையாளமும் இல்லை. என் வாசகர்கள் ஆயிரம் பேர்தான். முதல் பணமாக வந்த பத்தாயிரத்தைத் திருப்பி அனுப்பி விட்டேன். ஒரு கல்லூரி மாணவி தன் சேமிப்புப் பணம் பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருந்தார். மாணவர்களிடமிருந்து நான் பணம் வாங்குவதில்லை. அது அவருடைய பெற்றோர் பணம். அடுத்து அமெரிக்காவில் வசிக்கும் என் நெடுநாளைய நண்பர் 20000 ரூ. அனுப்பினார். இன்னொரு நண்பர் 25000. ஒரு நண்பர் 5000 ரூ. ப்ராதா நிறுவனத்துக்காக நான் எழுதிய 1000 வார்த்தை சிறுகதைக்கு ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் வந்தது. இதனால்தான் மேற்குலகில் எழுத்தாளர்கள் இங்கே உள்ள சினிமா நடிகர்களைப் போல் வாழ்கிறார்கள். அந்த ஒன்றே முக்காலையும் ஆவணப்பட பட்ஜெட்டில் சேர்த்தேன்.
இன்னொரு நண்பர் – இவரை எனக்கு ஆறு மாதமாக மட்டுமே தெரியும் – ஐந்து லட்சம் அனுப்பினார். ”முழுச் செலவையும் ஏற்றிருப்பேன். ஆனால் மூன்று ஆண்டுகளாக வேலை இல்லை. சேமிப்பு 80 லட்சத்தில் ஒரு ஆவணப்படம் எடுத்து விட்டேன். இன்னும் விற்கவில்லை. அதனால் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அனுப்புவதால் ஐந்து லட்சம்தான் அனுப்ப முடிந்த” என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
முடிந்த வரை விளக்கமாகச் சொல்கிறேன். இந்த ஆவணப் படம் என்னைப் பற்றியதாகவே இருந்தாலும் – கடந்த 2000 ஆண்டு சரித்திரத்தில் நான்தான் சில காரியங்களை முதல் முதலாகச் செய்து வருகிறேன். அது, சமூகத்தில் எழுத்தாளனின் இடம். எழுத்தாளன் பிச்சை எடுக்கக் கூடாது என்பதை நிறுவுவதற்காக நான் பிச்சை எடுத்தேன். இப்போது வாசகர்கள் அனைவரும் பணம் கொடுத்துப் படிக்கிறார்கள். எழுதுவது எப்படி என்று பணம் கொடுத்துக் கற்றுக் கொள்கிறார்கள். கட்டணம் கட்டி எழுத்தாளனின் பேச்சைக் கேட்கிறார்கள். இது எல்லாமே நான் ஆரம்பித்து வைத்தது. வாசகரிடம் பணம் கேட்ட முதல் எழுத்தாளன் நான். ஏன் கேட்டேன்? சாமியார் கேட்கிறார். சமூகம் கொட்டிக் கொடுக்கிறது. நானும் கேட்டேன். எனக்கு முன்னோடி கார்ப்பொரேட் சாமியார்கள்தான். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் ஒரு வங்காளி எழுத்தாளர் தமிழ்நாட்டுக்கு வந்து தான் நிர்மாணித்து வரும் கல்வி நிறுவனத்துக்காகக் கல்லூரி மாணவர்களிடமும் தனவந்தர்களிடமும் பணம் வசூலித்துக் கொண்டு சென்றார். தாகூர் அவர் பெயர். அதே நேரத்தில் இங்கே சென்னையில் ஒரு கவிஞன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
நான் இதை மாற்றிப் போட நினைத்தேன். இனிமேலும் எழுத்தாளன் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காகவே கட்டணம் என்பதை அறிமுகப்படுத்தினேன். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள் என்றேன். என் சக எழுத்தாளர்களே என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று எழுதினார்கள். நான் தளரவில்லை.
அதேதான் ஆவணப்படத்துக்கும். இதுவரையிலான ஆவணப்பட முயற்சிகளை நான் குறை சொல்ல மாட்டேன். இத்தனை குறைந்த பட்ஜெட்டில் எடுத்தால் இவ்வளவுதான் செய்ய முடியும். வெளியே 25 கோடியில் எடுக்கிறார்கள். நான் 25 லட்சத்தில் எடுக்கப் பார்க்கிறேன். 25000 ரூபாயில் எடுத்தால் எப்படி இருக்கும்? எனவே நான் யாரையும் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.
முடிந்தால் ஆவணப் படத் தயாரிப்புக்கு உங்களால் இயன்ற பொருளுதவியைச் செய்யுங்கள். நாகூர், தில்லி, மும்பை, கோவா ஆகிய இடங்களை முடித்துக் கொண்டு பிறகு சீலேவும் பாரிஸும் செல்லலாம் என்று முடிவாகியிருக்கிறது. பணம் கொடுக்க முடியாதவர்கள் டிக்கட் எடுத்துக் கொடுக்கலாம். ஏதாவது ஒரு உதவி.
இந்த ஆவணப் படம் உலகத் தரமாக இருக்கும் என்று உறுதி கூற மாட்டேன். அதற்கு இன்னும் பணம் தேவை. ஆனால் உலகத் தரமான ஆவணப் படத்துக்கு என்னைப் பற்றிய இந்தப் படம் முன்னோடியாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.