சகாக்கள்

பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முத்தம் கொடுத்துக் கொள்ளாத குறையாகக் கொஞ்சிக் கொள்வார்கள்.  ஆனால் எழுத்து என்று வரும்போது விஷத்தைக் கக்குவார்கள்.  சமீபத்தில் என் ஆவணப்படத்துக்காக ஒரு எழுத்தாளரைச் சந்தித்தேன்.  நேரில் இனிமையின் சொரூபமாகப் பேசியவர் எங்கள் சந்திப்பு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதும் போது விஷத்தைக் கக்கியிருந்தார். 

நான் அப்படி இல்லை.  தர்மு சிவராமு மாதிரி.  எனக்குப் பிடிக்காதவராக இருந்தால் வாய் வார்த்தையாக வணக்கம் கூட சொல்ல மாட்டேன்.  அவராகவே வலிய வந்து சொன்னாலும் யார் நீங்கள் என்றே கேட்பேன்.  என் எழுத்தை அவமதிப்பவர்களோடு எனக்குப் பேச்சு வார்த்தையே இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். 

சரி, எல்லோரையும் அப்படி எதிர்பார்க்க்க் கூடாது. 

ஜெயமோகன் மிகுந்த மனோதிடம் கொண்டவர்.  ஒரு வசைக்கும் அவர் பதில் சொல்லவில்லை.  நீங்களும் சொல்ல வேண்டாம் என்று எனக்கு சொல்லியிருந்தார்.  நானும் அதன்படியே எந்த வசைக்கும் பதில் சொல்லாமலேயே இருந்து வருகிறேன்.  ஒன்றே ஒன்றைத் தவிர.  முன்பு ஜெ.வைத் திட்டினாயே?  மம்மி ரிட்டர்ன்ஸ் எழுதினாயே? 

இதற்கு நான் எத்தனை முறை பதில் சொல்வது?  அம்மன் சிலையை அவமதித்தேன்.  மிக மோசமாக.  எப்படி என்று இப்போது எழுதுவதற்குக் கூட மனம் வரவில்லை.  தி. ஜானகிராமன் வீட்டுக்குப் பக்கத்துக் கட்டிடத்தில் வேலை பார்த்தும் தி.ஜா.வைப் பார்த்த்தில்லை.  ஏனென்றால், அப்போது அவரை நான் ’இலக்கிய பாலகுமாரன்’ என்றே நினைத்தேன்.  புதுமைப்பித்தனையும் தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருந்தேன்.  எல்லாவற்றுக்கும் காரணம், அப்போது நான் ஒரு பெரியாரியவாதி.  இப்போது தி.ஜா. எனக்குக் கடவுளைப் போல் தெரிகிறார்.  புதுமைப்பித்தனோ என் ஐயனைப் போல் தெரிகிறான்.  எந்த சிலையைப் பார்த்தாலும் கை தானாகக் கன்னத்துக்குப் போய் விடுகிறது.  பக்கத்தில் இருப்பவர்கள் “இதெல்லாம் ரொம்ப ஓவர் சாரு” என்கிறார்கள்.

இந்த மாற்றத்துக்காக நான் என்னய்யா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?  இப்படித்தான் ஜெ. விஷயத்திலும்.  ஆனால் இப்போதும் சொல்கிறேன், ஜெ. ஒரு துருவம்.  நான் ஒரு துருவம்.  எல்லோரும் எல்லாவற்றையும் ஒரே மாதிரிதான் பார்க்க வேண்டும், அணுக வேண்டும் என்று எந்த மடையனாவது சொல்வானா?  எனக்கு உன்னதம் என்று தோன்றும் விஷயம் அவருக்குக் குப்பையாகத் தெரிகிறது.  நூறு விஷயங்களை சொல்லலாம்.  மரியோ பர்கஸ் யோசாவிலிருந்து கேங்ஸ் ஆஃப் வாஸேபூர் வரை எல்லாமே உங்கள் முன்னால்தான் இறைந்து கிடக்கிறது.  அதற்குப் பிறகும் மம்மி ரிட்டர்ன்ஸ் மம்மி ரிட்டர்ன்ஸ் என்று புடுக்கு அறுந்த பன்னி மாதிரி கத்திக் கொண்டிருந்தீர்கள் என்றால் நான் என்ன செய்ய முடியும்?

பரவாயில்லை.  என் எழுத்தை என் சக எழுத்தாளர்கள் பலரும் கழிசடை என்றே நினைக்கிறார்கள். அது பற்றி நான் கவலையே கொள்வதில்லை.  ஏனென்றால், வில்லியம் டால்ரிம்ப்பிளும், ஆலன் சீலியும், ஆர்ட்ரெவ்யூ ஏஷியா எடிட்டரான மார்க் ரேப்போல்ட்டும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் என்னை வில்லியம் பர்ரோஸுக்கும் சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கிக்கும் இணையாகக் கருதுகின்றனர்.  நானோ அந்த ரெண்டு பேரையும் விட நான் பெரிய ஆள் ஐயா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

மேலும், சக எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் கவலைப்படவே கூடாது. அது ஒரு அடிப்படைப் பாடம். ஏன் தெரியுமா?

ஒருமுறை காலஞ்சென்ற என் நண்பர் தொமாஸ் ஸாலமுனிடம் (Tomaž Šalamun) “மிலோராத் பாவிச் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.  மிலோராத் பாவிச் ஸெர்பியாவைச் சேர்ந்தவர்.  தொமாஸ் ஸ்லொவேனியாவைச் சேர்ந்தவர்.  ஸெர்பியத் தலைநகர் லுப்லியானாவுக்கும் ஸ்லொவேனியத் தலைநகர் பெல்கிரேடுக்கும் இடையே உள்ள தூரம் 635 கி.மீ.  தொமாஸ் என்ன பதில் சொன்னார் தெரியுமா?  உடனே பதில் சொல்லவில்லை.  புருவத்தைச் சுருக்கியபடி கொஞ்சம் யோசித்தார்.  பிறகு “அவர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.  அவ்வளவுதான்.  பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறார்.  இங்கே தமிழ்நாட்டில் பாவிச் எழுதிய கஸார்களின் அகராதி பைபிளைப் போல் வாசிக்கப்படுகிறது என்று சொன்னேன். 

அதனால்தான் சொல்கிறேன், சக எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் ரொம்பவும் அலட்டிக் கொள்ளக் கூடாது.