எழுத்தாளரும் வாசகரும்

அன்புள்ள சாரு,

“நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்” என்று முந்தைய மின்னஞ்சலில் எனது விருப்பமாக எழுதியிருந்தேன். அடுத்த நாள் இன்ப அதிர்ச்சியான ஒரு செய்தியாக தங்களுக்கு “விஷ்ணுபுரம் விருது” அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மிக்க மகிழ்ச்சி.

தங்களது ப்ளாக் மற்றும் சில நாவல்கள், சிறுகதைகளை வாசித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது முள், ஜீரோ டிகிரி, ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி. தற்போது நான்தான் ஔரங்ஸேப் முன்பதிவும் செய்துள்ளேன். உங்களின் எழுத்துகளை வாசித்து உங்களை நெருக்கமாக உணர்வதால் உங்களுக்கு எழுத எத்தனிக்கும் என்னைப் போன்ற சாதாரண ஒரு வாசகன் உங்களைத் தொடர்பு கொள்வதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற அச்சமும் கூச்சமும் வருகிறது. சில நேரங்களில் என்னுடைய மின்னஞ்சல் தங்களுக்கு வருகிறதா என்ற சந்தேகம் கூட உள்ளது.  

சாருதாசன்

அன்புள்ள நண்பருக்கு,

எனக்கு உங்கள் பெயர் கூடத் தெரியவில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியிலும் சாருதாசன் என்ற பெயரே உள்ளது.  பரவாயில்லை.  கடந்த ஒரு மாதத்தில் இது உங்களின் ஐந்தாவது கடிதம்.   எதற்குமே நான் பதில் எழுதவில்லை.  எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.  நேரம் இல்லை.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இன்று வாட்ஸப்பில் ஒரு விஷயம் கேட்டார்.  விருது கிடைத்த்து பற்றி வாழ்த்து அனுப்பினேனே, பார்த்தீர்களா? 

சுருக்கென்று இருந்தது எனக்கு.  முதல் வேலையாக வாழ்த்து அனுப்பியவர்களுக்கெல்லாம் நன்றி அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  நன்றி என்பதன் பொருள், உங்கள் வாழ்த்தை நான் பார்த்து விட்டேன் என்பதுதான்.  எனவே நன்றி என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. 

ஆனால் இந்த விருது விஷயத்தின் மூலம் யார் நண்பர்கள், யார் நாடக நண்பர்கள் என்பதை அறிந்து கொண்டேன்.  ஃபேஸ்புக்கில் தினமும் ஐந்து பதிவைப் போடும் நண்பருக்கு எனக்கு பெஸ்ட் விஷஸ் என்று ரெண்டு வார்த்தையை அனுப்புவதற்கு நேரம் இல்லை என்று சொன்னார்.  நம்பித்தான் ஆக வேண்டும். 

ஆனால் வாழ்த்து அனுப்பியவர்களுக்கு இன்னும் நன்றி கூறாமல் இதோ உங்களுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  காரணம், ஒரே மாதத்தில் இது உங்களுடைய ஐந்தாவது கடிதம். 

மேற்கத்திய நாடுகளிலும் ஜப்பான் போன்று லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட நாடுகளிலும் நிலைமை வேறு.  அங்கே ஒரு எழுத்தாளரை அவருடைய ஏஜண்டைத் தவிர வேறு யாருமே தொடர்பு கொள்ள முடியாது.  ஏஜண்டுக்கும் பதிப்பாளருக்கும் மட்டுமே எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருக்கும்.  என் நண்பர் ஆலன் ஸீலி கைபேசியையே உபயோகித்து நான் பார்த்ததில்லை.  அவரோடு நான் பல நாட்கள் உடன் இருந்திருக்கிறேன்.  கைபேசியே இல்லாமல் அவர் சீனாவுக்கு மூன்று மாதங்கள் பயணமும் செய்து விட்டு வந்திருக்கிறார்.  அவர் நட்சத்திர விடுதிகளில் தங்குபவர் அல்ல.  மிகச் சாதாரண விடுதிகளில் தங்கி பேருந்துகளிலும் ரயிலிலும் பிரயாணம் செய்பவர். 

சில சர்வதேசக் கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்டதுண்டு.  என் அறை நண்பர் ஒரு கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளராக இருப்பார்.  மூன்று தினங்கள் அவரும் நானும் ஒரே அறை.  ஆனால் அந்த மூன்று தினங்களிலும் அவர் தன் மடிக் கணினியையோ கைபேசியையோ உபயோகித்து நான் பார்த்திருக்கவே மாட்டேன்.  நான் மட்டுமே கைபேசியைக் குடைந்து கொண்டிருப்பேன்.  எனக்கே அவமானமாகத்தான் இருக்கும்.  ஆனாலும் பழகி விட்டது. 

ஒருமுறை என் அறைவாசியாக இருந்த ஒரு ஸெர்பிய எழுத்தாளரிடம் “இப்படி தொடர்பே இல்லாமல் இருந்தால் உங்கள் மனைவி ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டாரா?” என்று கேட்டேன்.

ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.  அவரால் என் கேள்வியைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.  என் விஷயத்தில், சுமார் எட்டு மணி நேரத்துக்கு மேல் மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால் இந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்தையே தொடர்பு கொண்டு விடும் அளவுக்கு செல்வாக்கானவர் என் மனைவி என்றேன்.

ஸெர்பிய எழுத்தாளர் என்ன முயன்றும் அவர் கண்களில் தெரிந்த பரிதாப உணர்வை அவரால் மறைக்க முடியவில்லை. 

பாவ்லோ கொய்லோ ஃப்ரான்ஸில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்துக் கொண்டு ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் ப்ரஸீலில் உள்ள தன் வீட்டுக்குப் போய் வருகிறார்.  அது தவிர ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் வீட்டுக்குப் போவாராம்.  கொடுத்து வைத்த மகராசன்கள். 

நம் தமிழ்நாட்டு நிலைமையே வேறு.  இங்கே எழுத்தாளர்களாகிய நாங்கள் வாசகர்களாகிய உங்களை நம்பித்தான் வாழ்கிறோம்.  இல்லாவிட்டால் பத்திரிகைகள் தரும் பிச்சைக்கார காசு ஐநூறு ரூபாயிலா வாழ்ந்து விட முடியும்?

ஒரு வார காலம் இரவு பகலாகக் கண் விழித்து ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை அனுப்பினேன்.  அவர்களாக்க் கேட்டதால் அனுப்ப வேண்டி வந்த்து.  நானாக அனுப்பவில்லை.  இரண்டு மாதம் கழித்து ஐநூறு ரூபாய் வந்தது.  அதற்கு 20000 ரூ கொடுக்க வேண்டும்.  அதுதான் முறை.  அதுதான் தகுந்த சன்மானம்.  ஆனால் ஐநூறு ரூபாய் கொடுத்ததே பெரிய விஷயம்.  காரணம், அதன் சர்க்குலேஷனே ஐநூறோ அதிக பட்சம் ஆயிரமோதான் இருக்கும்.  காரணம், அது இலக்கியப் பத்திரிகை.  ஆனால் இரண்டு லட்சம் சர்க்குலேஷன் உள்ள பத்திரிகையிலும் இங்கே ஐநூறோ ஆயிரமோதான் கொடுக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 

ஆக, நாங்கள் – அல்லது, குறிப்பாக நான் – வாசகர்கள் தயவில்தான் வாழ வேண்டியிருக்கிறது. 

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன். ”உங்களின் எழுத்துகளை வாசித்து உங்களை நெருக்கமாக உணர்வதால் உங்களுக்கு எழுத எத்தனிக்கும் என்னைப் போன்ற சாதாரண ஒரு வாசகன் உங்களைத் தொடர்பு கொள்வதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற அச்சமும் கூச்சமும் வருகிறது” என்று எழுதியிருக்கிறீர்கள்.  அச்சமோ கூச்சமோ வேண்டாம்.  நான் பதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் உங்களைப் போன்ற வாசகர்களின் கடிதங்களும் தொடர்பும்தான் எனக்குப் பிராண வாயு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல வாசகன் தனக்குப் பிரியமான எழுத்தாளனை எப்போதும் சந்திக்க மாட்டான் என்று சுஜாதா சொன்னது வடிகட்டின முட்டாள்தனம்.  அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர்.  எனவே ஜனரஞ்சக எழுத்தாளரையும் ஜனரஞ்சமான எழுத்தை வாசிக்கும் சராசரிகளையுமே அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும்.  துரதிர்ஷ்டவசமாக இலக்கிய வாசகர்களும் சுஜாதா சொன்னதை முழுக்க நம்பி ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  அதனால் இலக்கிய சூழலுக்குத்தான் நஷ்டம். 

மாறாக, செல்லப்பாவும், க.நா.சு.வும் ஆயிரக்கணக்கான வாசகர்களை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.  கல்லூரி கல்லூரியாகப் போய் சந்தித்தார் செல்லப்பா.  அதற்குப் பிறகு வந்த அசோகமித்திரனை வாசகர்களே தேடிப் போனார்கள்.  இப்போதைய ஜெயமோகனும் எஸ்.ரா.வும் தோழர் திருமா தன் தொண்டர் படையை சந்திக்கும் அளவுக்குத் தம் வாசகர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  நான் மட்டுமே மாதம் ஒருமுறை – அதுவும் பல நிபந்தனைகளோடு – சந்திக்கிறேன்.  ஆனால் எழுத்தாளரை வாசகர்கள் சந்திக்க வேண்டும்.  அதிலும் ஜெ., எஸ்.ரா. ஆகியோரின் வாசகர்கள் அளவுக்குப் பல நூறு வாசகர்கள் எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும்.  அப்போதுதான் இந்த ஃபிலிஸ்டைன் சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழும். 

மேலும், நான் எழுத நினைத்ததில் எழுதியது இருபது சதவிகிதம்தான் இருக்கும்.  மீதி எண்பதை என்னால் எப்போதுமே எழுத முடியாது.  இரண்டு காரணங்கள்.  இந்தியா ஒரு கட்டுப்பெட்டி சமூகம்.  இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு பார்ட்டியில் ஒரு இளம் பெண்ணுடன் டான்ஸ் ஆடியதற்கு வட இந்தியாவே பொங்கி எழுந்து ராம்கோபால் வர்மாவைத் திட்டியது.  (தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சல்தான், வேறு என்ன?)  இந்தச் சூழலில் ஒரு எழுத்தாளனின் நிலை எப்படி இருக்கும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.  இரண்டு, நான் குடும்பம் என்ற கடும் அமைப்புக்குள் கிடக்கிறேன்.  என்னால் மனம் விட்டு எல்லாம் பேச முடியாது.  மற்றவர்கள் பாதிப்பு அடைவார்கள்.  இதையே கூட படித்து விட்டு என் மனைவியிடம் போட்டுக் கொடுத்து அவள் மன உளைச்சல் அடைவதைக் கண்டு மகிழ்வோர் ஏராளம். 

எனவே, என்னை நேரில் சந்திக்கும்போதுதான் மீதி எண்பது சதத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.  உடனே பாலியல், ஆண் பெண் உறவு என்று நினைத்து விடாதீர்கள்.  குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒருமுறை என் வாழ்க்கையிலிருந்து உதாரணம் காட்டி சீனியிடம் சொன்னேன்.  அவருடைய வாழ்வில் அந்த என் பேச்சு எந்த அளவுக்கு ஒரு தரிசனமாக இருந்தது என்று சீனி பிற்பாடு என்னிடம் சொன்னார்.  எனக்கோ நான் சொன்னதே மறந்து விட்டது.  அவர் சொன்ன பிறகு, நான் அவரிடம் எப்போதோ அப்படிச் சொன்ன விஷயம் உண்மையில் ஒரு தரிசனம்தான் என்று புரிந்து கொண்டேன்.  இப்படி லட்சம் சமாச்சாரம் இருக்கிறது.  நான் அவரிடம் என்ன சொன்னேன் என்று பொதுவில் சொல்ல முடியாது.  என் மீது வழக்கு பாயும்.     

சாரு