அன்புள்ள சாருவுக்கு,
இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இப்போதும்கூட எழுத வேண்டுமென்று தோன்றியதற்குக் காரணம் உண்டு. பதினைந்து வருடங்களாக நான் உங்கள் வாசகி. ஆரம்பித்தில் சுஜாதா என்னுடைய அலமாரியை நிறைத்தவர். பிறகு ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என வாசித்துவிட்டு ஒருசில கதைகளுடன் நிறுத்திவிட்டேன். தமிழிலக்கியத்தில் நான் கேள்விபட்ட முதல் அழகான புனைப்பெயர் உங்களுடையது. அதன் வசீகரம் அப்படி. எங்கோ எதிலோ உங்கள் பெயர் என்னை சற்று நிறுத்தியது. உங்கள் புத்தகங்களை வாங்கி வாசித்தேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகிறபோது நான் வாங்கும் ஒருசில புத்தகங்களில் உங்களுக்குத்தான் முன்னுரிமை. ஸீரோ டிகிரி இதுவரைக்கும் ஐந்து முறை வாசித்திருக்கிறேன். மலாவி என்றோரு தேசம் வாசித்தபோது அதைப்போலவே உங்களுக்கு நான் என்னுடைய உலகத்திலிருந்து கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. பிறகு அது சாதாரணமான ஆசை என்று விட்டுவிட்டேன்.
பாலியல் அத்துமீறல் என்று உங்கள் எழுத்தைக் குறித்து மதிப்பீடு செய்யும்போது எனக்கு சிரிப்புதான் வரும். இலக்கியமே அத்துமீறல்தானே? உங்களது எழுத்தின் பாதிப்பால் ஒரு சில கதைகள் எழுதியிருக்கிறேன். வாரப் பத்திரிகைகளில் பிரசுரமானது. பிறகு திருமணம் குடும்பம் குழந்தை என்று என் வாழ்வு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிவிட்டது.
2015 லிருந்து உங்களது இணைய தளத்தை வாசித்து வருகிறேன். வேறு எந்த எழுத்தாளர்களையும் வாசிப்பது இல்லை. அப்படியொன்றும் நேரம் எனக்குக் கிடைக்காது. எனது ஒருநாள் உங்களது போஸ்ட் பற்றிய சிந்தனையிலேயே ஓடும். சில கட்டுரைகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு நூறு கட்டுரைகளையாவது என்னால் வரி பிசகாமல் சொல்ல முடியும். இந்தத் தருணத்தில் உங்களுடைய எண்ணவோட்டம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் யோசிப்பேன். சமீபகாலமாக நீங்கள் உற்சாகமான மனநிலையில் இருந்ததுகூட நான் அவதானித்ததுதான். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருது உங்களுக்குக் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய எழுத்துக்கும் இலக்கியப் பங்காற்றலுக்கும் இது மிகச்சிறிய விருதுதான். ஆனால் குழந்தைக்குக் கிடைக்கும் பொம்மைத் துப்பாக்கி மாதிரி அதை நீங்கள் பிடித்துக்கொண்டு குதூகலிக்கிறீர்கள். இந்தத் தளத்திற்கு வந்த கட்டுரைகளில் விருது பற்றி பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் நடந்து கொண்டிருப்பதை அறிகிறேன். என்னைக் கேட்டால், எந்த விருதும் எழுத்தாளனுக்குப் பெரிய கௌரவம் அல்ல. ஆனாலும் உங்களுடைய உற்சாகமும் மனநிறைவும் இந்த விருதால் கிடைக்கிறது என்கிறபோது ஏற்றுக்கொள்ளுங்கள், வேறு என்ன. இன்னொன்று, இப்படியான அறிவிப்புதானே நானும் உங்களுக்கு இத்தனை வருடத்தில் முதன்முறையாக ஒரு கடிதம் எழுதத் தூண்டியிருக்கிறது.
உங்கள் கதைகளிலும் சிந்தனைகளிலும் வருவதற்கு நேர் எதிரானது நான் வாழ்கின்ற உலகம். இங்கு ஆண்கள் இன்னும் 1980களில்தான் இருக்கிறார்கள். அவர்களது சிந்தனை மளிகைக் கடையில் கிசுகிசுக்கும் எல்லையை இன்னும் தாண்டவில்லை. உங்கள் எழுத்து என்னை இந்த உலகை மறக்கச் செய்கிறது.
ஸீரோ டிகிரி நாவலை போலத்தான் என் வாழ்க்கை. துண்டு துண்டான சிதறல்களால் யாரோ ஒருவரால் சொல்லப்படுகிறது. ஆமாம், அந்த நாவலின் narration வாழ்க்கையின் narration. எந்த வாழ்க்கை நேர்க்கோட்டில் பயணிக்கிறது? எந்த நிகழ்வு நம்மோடு தொடர்ந்து வருகிறது? எந்தக் கனவை நாம் அடைகிறோம்? நாளை யாரை சந்திப்போம் என்பது நிச்சயமில்லை. அப்படித்தான் ஸீரோ டிகிரி நாவலின் narration ம் கதையும் இருக்கிறது.
உண்மையில் நிறைய பெண் வாசகர்களைக் கொண்ட எழுத்தாளனே மனித உணர்வுகளை மிக ஆழமான அறிந்தவன் என்று சொல்லலாம். நீங்கள் அப்படிபட்டவர். ஜெயகாந்தனுக்கும், தி.ஜானகிராமனுக்கும் அப்படி நிறைய வாசகிகள் இருந்ததாக என் தாத்தா சொல்வார். உங்களை இதுவரை நான் சந்தித்தது இல்லை. ஒரே ஒரு முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன். நிறைய வாசகர்கள் சூழ நீங்கள் ஓர் அரங்கில் அமர்ந்திருந்தீர்கள். உங்களை நெருங்க மனத்தடை இருந்தது. இப்போதும் உண்டு. இதோ இந்தக் கடிதத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் போனில், காகிதத்தில், கணிணியில் என மாறி மாறி எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத எழுத மனம் லேசாகிறது. நான் உங்களைச் சந்திப்பேனா என்று தெரியாது. அதைப் பற்றி யோசிக்கவில்லை. என்னைப் பொருத்தவரை எழுத்தாளன் தன் வாசக வாசகிகளைச் சந்திக்கவே கூடாது. வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் தம் வாசகரை பல வருடங்களுக்கு ஒரு முறைதான் சந்திக்கிறார்கள். அதுவும் எல்லோரும் அல்ல. ஏதாவது ஒருத்தர், எப்போதாவது ஒரு தடவை. அந்தச் சந்திப்பு அபூர்வமாக நடக்க வேண்டும். திருமணம், காதுகுத்து மாதிரி ஆகிவிடக் கூடாது.
என்னைப் போல நிறைய பேர் உங்களைச் சந்திக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் அழகு. நீங்கள் தமிழ் எழுத்தாளர் அல்ல சாரு. தமிழ் எழுத்தாளர்களின் வட்டம் மிகச் சிறியது போல இருக்கிறது. என்னுடைய கணிப்பு சரியா என்று தெரியவில்லை. தவறாகக் கூறியிருந்தால் மன்னிக்கவும். ஏனென்றால் இங்கு எழுத்தாளர்கள் எழுதுவது மட்டுமல்லாமல், கூட்டம் கூட்டுவது, விருது விழா, பரிசளிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என பலவற்றிலும் பங்கெடுக்கிறார்கள். வாசகர்களுடன் உரையாட வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள். நான் அன்றைய தினம் உங்களை புத்தகக் காட்சியில் பார்த்தபோது நீங்கள் எதையும் சட்டை செய்யவே இல்லை. ஆனால் உங்களிடமும் தமிழ் எழுத்தாளர்களுக்கே உரிய சில குணங்கள் அவ்வப்போது தென்படும். ஆனால் சிலசமயம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதுகிற வேலையை மட்டும் செய்வீர்கள். இப்போதுகூட உங்கள்மீது கடுமையான எதிர்வினை வருகிறது. நீங்கள் பெரிதாக அவற்றுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறீர்கள். பாருங்கள், கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்த மனத்தடை விலகியதும் உங்களுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்துவிட்டேன். மன்னிக்கவும் சாரு.
இந்தக் கடிதத்தைப் பெரும் பதற்ற உணர்வுகளோடு எழுதுகிறேன். எனக்கு இது ஒரு புதிய அனுபவம். என் அப்பா என்னுடைய முதல் ஆசான். அவர் ஜெயகாந்தனைப் பற்றி நிறைய கூறுவார். அவ்வளவு பெரிய தைரியமான படைப்பாளிகள் தமிழில் இல்லையென்று. உங்களை வாசித்த முதல் அனுபவமே எனக்கு தமிழின் எவர் கிரீன் படைப்பாளி இவர் என்கிற உணர்வை ஏற்படுத்தியது. எதையும் பூசி மொழுகும் எழுத்து அல்ல உங்களுடையது. தமிழிலக்கியம் ஒரு பக்கம் எதார்த்த அறத்தை மீட்டு எடுக்க அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தபோது நீங்கள் உங்களுக்காக எழுதிக்கொண்டிருந்தீர்கள். அதுதான் இன்றைக்கு உங்களுக்கு நிறைய வாசகர்களைக் கொடுத்துள்ளது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன்.
ஔரங்ஸேப் வாங்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டும். அடுத்து இனி எப்போதாவது கடிதம் எழுதத் தோன்றினால் எழுதுவேன்.
மிக்க அன்புடன்,
சாதனா கிருஷ்ணமூர்த்தி
12.9.2022.
அன்புள்ள சாதனா,
”விஷ்ணுபுரம் விருது உங்களுக்குக் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய எழுத்துக்கும் இலக்கியப் பங்காற்றலுக்கும் இது மிகச்சிறிய விருதுதான். ஆனால் குழந்தைக்குக் கிடைக்கும் பொம்மைத் துப்பாக்கி மாதிரி அதை நீங்கள் பிடித்துக்கொண்டு குதூகலிக்கிறீர்கள்.”
என்னைப் பொருத்தவரை நோபல் விருது கிடைத்தால் கூட இந்த அளவுக்கு நான் குதூகலிக்க மாட்டேன். ஏனென்றால், என் எழுத்து உலகுக்கு நேர் எதிர் நிலையில் இருப்பவர்கள் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள். அதில் உள்ள சிலருக்கு என் எழுத்து குப்பையாகத் தோன்றும். அதை அவ்வப்போது பதிவு செய்யவும் தவறுவது இல்லை. இல்லாவிட்டாலும் கூட என்னுடைய அ-புனைவுகள்தான் அவர்களுக்குப் பிடிக்குமே தவிர புனைவுகள் பிடிக்க வாய்ப்பே இல்லை. சுனில் கிருஷ்ணன் போல் என் எழுத்தை ஆழ்ந்து வாசிப்பவர்கள் அங்கே சிலர் இருந்தாலும் பொதுவான நிலை அதுதான்.
ஜெயமோகனைத் தங்கள் பிரியத்துக்குரிய எழுத்தாளராகவும் ஆசானாகவும் நினைக்கும் சிலர் இந்த விருதை எனக்குக் கொடுத்ததற்காக அவரை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜெ. எதற்குமே பதில் சொல்லவில்லை. என்னால் அப்படி இருக்க முடியாது. எல்லா வசைகளுக்கும் அல்ல; சில கருத்துகளுக்காவது எதிர்வினை செய்யலாம் என எழுதிக் கொண்டிருக்கிறேன். முழுமையாக மௌனம் காப்பது எனக்கு சாத்தியம் இல்லை. சரி, அப்படி என் உலகத்துக்கு நேர் எதிர்நிலையில் இயங்கும் ஒரு உலகிலிருந்து விருது என்றால் அது நோபலை விடவும் பேருவகையை ஏற்படுத்தக் கூடிய விஷயம்தான் இல்லையா? உங்கள் கடிதத்தின் தர்க்கப்படி நிஜத் துப்பாக்கி என்று சொல்லக் கூடிய நோபலை விடவும் எனக்கு விஷ்ணுபுரம் விருது பெரிதாகத் தெரிவதற்கான காரணம் இதுதான்.
மேலும், இதுவரை என்னைப் படித்தே இராத ஒரு சிலராவது என் புனைவுகளைப் படிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. வட்டத்தில் ஒரு இளைஞர் மரணம் எய்தி விட்டார். துக்க செய்திகளைக் கண்டு என் மனம் பதற்றம் அடைந்து அவரைப் பற்றிப் படித்தேன். பார்த்தால் என்னைப் பற்றி மிக மட்டமாக அவர் கட்டுரைகளில் எழுதியிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னைப் படிக்கவே இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. படிக்காமலேயே கோபம். தன் ஆசானை விமர்சிப்பவன் என்ற கோபம். எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்த அளவுக்கு எதிரெதிர் நிலைகளில் உள்ளது ஜெ.வின் உலகமும் என் உலகமும். ஆனால் கவனித்துப் பார்த்தால் புரியும், மிக ஆழமான தத்துவார்த்தப் பிரச்சினகளைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் ஜெ.வின் கருத்துதான் என் கருத்தும். அவருடைய பல கட்டுரைகளை நான் என் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ஒரு விருது என்பது அதை யார் யார் பெற்றிருக்கிறார்கள் என்ற காரணத்தினால்தான் பெருமையுறுகிறது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டின் மிக உயரிய விருது விஷ்ணுபுரம் விருதுதான். தமிழில் யார் யாரையெல்லாம் என் ஆசான்களாகவும் சஹ்ருதயராகவும் கருதுகிறேனோ அவர்கள்தான் இதுவரை விஷ்ணுபுரம் விருதைப் பெற்றிருக்கிறார்கள். என்னை விட இந்த விருதைப் பெறுவதற்கு உரியவர்கள் இப்போதே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தால் அவர்களின் எழுத்து இன்னும் பலரைச் சென்றடையும். மிகப் பெரிய அளவில் எழுதி யாராலும் வாசிக்கப்படாமல் இருக்கிறார்கள் அந்த இரண்டு பேரும்.
ஒரு விளையாட்டு வீரர் மரியாதைக்கு உரிய ஒரு பதக்கத்தைப் பெற்று விட்டால் அதற்காக முதல்வர் வாழ்த்து தெரிவிக்கிறார். அப்படி ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை என்று நான் உண்மையாகவேதான் ஆச்சரியப்பட்டு ட்விட்டரில் எழுதியிருந்தேன். முதல்வரிடமே கேட்கவும் செய்தேன்.
ரப்பர் நாவல் வெளிவந்த போது ஜெயமோகன் ஒரு காலத்தில் எனக்கு விருது தருவார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த அதிசயம் நடந்திருக்கிறது என்கிற போது அது கொண்டாட்டத்துக்கு உரிய விஷயம் இல்லையா?
மேலும், புக்கர் விருது அருந்ததி ராய், அரவிந்த் அடிகா போன்ற சராசரிகளுக்கும், லஜ்ஜா போன்ற குப்பைக்குச் சொந்தக்காரரான தஸ்லீமாவுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாம் யாரும் புக்கரை பொம்மைத் துப்பாக்கி என்று சொல்ல மாட்டோம். ஏனென்றால், அந்த விருது வாங்கினால் நம் பெயர் சர்வதேச அளவுக்குச் செல்கிறது. அதை விட்டு விட்டுப் பார்த்தால் புக்கரை விடவும் கௌரவமான விருது விஷ்ணுபுரம் விருது.
இத்தனை எழுதியும் கொஞ்சம் மீதி இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான சமூகம் என்றால், அது ஜப்பானிய சமூகத்தைப் போல் இருக்க வேண்டும். ஹாருகி முராகாமிக்கு புக்கரும் கிடைக்கவில்லை, நோபலும் இல்லை. ஆனாலும் அவர் நோபல் வாங்கியவர்களை விடப் பிரபலமாக இருக்கிறார். அதுதான் எழுத்தாளனுக்கு சமூகம் செய்ய வேண்டிய காரியம். அந்த அளவுக்குப் படிக்கிறார்கள். “என்னால் சுதந்திரமாகப் பார்க்குக்குப் போய் முன்னைப் போல் ஓட முடியவில்லை” என்று அங்கலாய்க்கிறார் முராகாமி. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், விஷ்ணுபுரம் விருது என்ற ஒன்றை நடத்த வேண்டிய அவசியமே ஜெயமோகனுக்கு இருக்காது. எனக்குமே புக்கரோ மற்ற எதுவோ தேவையாய் இருக்காது. அருந்ததி ராய், அர்விந்த் அடிகா போன்ற சராசரிகளுக்குக் கொடுக்கப்பட்ட விருது எனக்கு வேண்டாம் என்று மறுதலித்தும் காட்டுவேன். ஆனால் இருநூறு பேர் படிக்கும் தமிழ் எழுத்தாளன் இப்படியெல்லாம் யோசிக்கலாமா? தகுமா?
மற்றபடி உங்கள் கடிதம் கண்டு பேருவகை கொண்டேன். இப்படித்தான் உங்களைப் போல் எங்கெங்கோ இருந்து மௌனமாக என்னை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்கள் கடிதத்தின் மூலமாகத் தெரிந்து கொள்கிறேன்.
எனக்கு எப்போதுமே உற்சாகம்தான். டிசம்பர் 18 அன்று ஒரு பெண், “உங்களுக்கு என் ஆயுளில் பாதியைத் தருகிறேன்” என்றாள். இப்போது சமீபத்தில் ஒரு பெண் “பகவதி அம்மனிடம் வேண்டுதல் செய்தேன்” என்கிறார். இதை விட வேறென்ன வேண்டும்?
”என்னைப் பொருத்தவரை எழுத்தாளன் தன் வாசக வாசகிகளைச் சந்திக்கவே கூடாது. வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் தன் வாசகரை பல வருடங்களுக்கு ஒரு முறைதான் சந்திக்கிறார்கள். அதுவும் எல்லோரும் அல்ல. ஏதாவது ஒருத்தர், எப்போதாவது ஒரு தடவை. அந்த சந்திப்பு அபூர்வமாக நடக்க வேண்டும். திருமணம், காதுகுத்து மாதிரி ஆகிவிடக்கூடாது.” உங்களுடைய இந்தக் கருத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை சாதனா.
வெளிநாட்டு எழுத்தாளர்களின் நிலைமையே வேறு. நம்மூர் நிலை அதற்கு நேர் எதிரானது. இங்கேயெல்லாம் வாசகர்களைச் சந்திக்காவிட்டால் எழுத்தாளன் பைத்தியம் பிடித்துச் சாக வேண்டியதுதான். இங்கே எழுத்து என்பது ஒரு கெரில்லா நடவடிக்கை மாதிரி. அதற்கு ஆட்கள் தேவை, நண்பர்கள் தேவை. என் புத்தகங்களை வாங்கி நூலகங்களில் வைக்க வேண்டும். நண்பர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். இது ஒரு கூட்டுச் செயல்பாடு. ஜப்பான் போன்ற நாடுகளில்தான் எழுத்தாளன் வாசகர்களை சந்திக்கக் கூடாது. சந்தித்தால் அப்புறம் எழுதவே முடியாமல் போய் விடும்.
வாசகர் எழுத்தாளரைச் சந்திக்கக் கூடாது என்ற கருத்து இடைப்பட்ட காலத்தில் வந்தது என்று நினைக்கிறேன். சாக்ரடீஸ் போன்றவர்கள் காலம் பூராவும் தன் மாணவர்களிடம் உரையாடிக் கொண்டே இருந்தவர்தானே? இங்கே இருந்த மஹா பெரியவர், ரமணர் போன்ற ஞானிகள் தினந்தோறும் மக்களோடு பேசிக் கொண்டே இருந்தவர்கள்தானே? ஜே. கிருஷ்ணமூர்த்தியும், யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் தம் வாழ்நாள் பூராவுமே தம் சீடர்களிடம் பேசிக் கொண்டே இருந்தவர்கள்தாமே? ஏன் எழுத்தாளன் மட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும்?
இறுதியாக, உங்கள் கடிதம் எனக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. காரணம், ஒரு எழுத்தாளனுக்கு இப்படிப்பட்ட கடிதங்களே பிராணவாயு.
சாரு
12.9.2022.