பிறந்த நாள் கொண்டாட்டம்

நான் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் பற்றி அராத்து பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

”சாரு நிவேதிதா பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார். சாரு நிவேதிதா பிறந்த நாள் கொண்டாடியதே ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் கவனித்தால் பிரபலங்கள் அனைவரும் சிறு குழந்தை போல தங்கள் பிறந்த நாளை தாங்களே கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்தேன். அனைவரும் அதை மிக முக்கியமாக நினைக்கிறார்கள். என் வயதில் சாரு இருந்திருந்த போது என்னைப்போலவே இப்படித்தான் நினைத்திருப்பார் என அனுமானிக்கிறேன். எனக்கு 60 வயது 70 வயது ஆகும்போது நானும் இதைப்போன்ற லௌகீக மனிதர்கள் மகிழ்ந்து கொண்டாடும் நிகழ்வுகளை விரும்புகிறேனா என்பது தெரிந்து விடும். அப்படி ஆகாமல் இருக்கத்தான் எனக்கு ஆசை ! பார்ப்போம்.”

நான் நாற்பது வயதிலிருந்தே பிறந்த நாள் கொண்டாடுகிறேன். காரணம், குடும்ப வாழ்க்கை எனக்கு சிறை போல் இருக்கிறது. அந்தச் சிறையிலிருந்து ஓரிரண்டு தினங்களாவது பரோல் எடுக்க பிறந்த நாள் என்ற நாள் எனக்கு உதவுகிறது. சிறைக் கைதிகளுக்கு அரசியல்வாதிகளின் பிறந்த நாள் சிறையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க உதவுகிறது. என்னுடைய பிறந்த நாள் ஓரிரண்டு தினங்கள் பரோலில் வெளியே செல்ல உதவுகிறது. அதனால்தான் கொண்டாடுகிறேன்.

அராத்து அவருடைய அறுபது, எழுபது வயதுகளில் பிறந்த நாள் கொண்டாட மாட்டார். ஏனென்றால், அவர் ஒவ்வொரு நாளையுமே பிறந்த நாள் போலத்தான் கொண்டாடுகிறார். அதாவது, கையில் பணம் இருந்தால் அவர் இன்றே தாய்லாந்து செல்லலாம். ஸ்வீடன் செல்லலாம். இமயமலை செல்லலாம். அல்லது, இரவு வீட்டுக்குத் திரும்பாமல் வெளியில் தங்கலாம். பத்து நாட்கள் கூட தொடர்ந்து வெளியில் தங்கலாம். குடும்பத்தில் இருந்தபடியே அவர் சுதந்திரமான வாழ்வை வாழ்பவர். ஆனால் நான் அப்படி இல்லை. காலை நடைப் பயிற்சிக்குச் செல்லும் போது எட்டரைக்கு மேல் நான் வீட்டில் இல்லை என்றாலே எனக்கு ஃபோன் வந்து விடும். விபத்தில் மாட்டினால் கூடப் பரவாயில்லை என்று விழுந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடுவேன். இது பற்றி எப்படியோ கேள்விப்பட்ட ஒரு நண்பர் “ஆறு மணிக்கு வாக்கிங் கிளம்பும் நீங்கள் ஒண்பது மணி வரை என்ன சார் செய்வீர்கள்?” என்று என்னிடம் கேள்வி கேட்டார். அவருக்கும் நான் விளக்கம் சொன்னேன். ”ஆறு மணி அல்ல, ஏழு மணிக்குத்தான் கிளம்புவேன், ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி, பிறகு ராகவனோடு காஃபி குடித்து விட்டு எட்டரைக்கு வீடு. அதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம். செய்தி உங்கள் வரை வந்திருப்பதே எனக்கு வருத்தமாக இருக்கிறது.”

எனவே நீருக்குள் இருப்பவன் வெளியே தலையை நீட்டி காற்றை சுவாசிப்பது போல்தான் நான் பிறந்த நாள் கொண்டாடுகிறேன்.

மற்றபடி, பல பிரபலமான நண்பர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதையும் நான் வரவேற்கவே செய்வேன். இந்த வாழ்க்கையில் ஒரு எழுத்தாளன் எதைப் பெற்றான்? வருடம் பூராவும் வசை தின்று வாழும் ஒரு எழுத்தாளன் பிறந்த நாள் கொண்டாடும் போதாவது நாலு பேர் அவனைப் பாராட்ட ஏதுவாகும் இல்லையா? எந்தக் கொண்டாட்டங்களும் இல்லாமல் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் வருடத்தில் ஒருநாளை பிறந்த நாள் என்று கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. அராத்து பேசுவது, பெரியார் தீபாவளி கொண்டாடாதீர்கள், விநாயகர் சதுர்த்தி கொண்டாடாதீர்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. இதையெல்லாம் கொண்டாடாவிட்டால் அப்புறம் நாங்கள் சுழியத்துக்கும் கொழுக்கட்டைக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் எங்கே போவது? கொண்டாட வேண்டாம் என்று சொல்வது சிறு குழந்தைகளின் கையில் இருக்கும் பொம்மையைப் பிடுங்குவது போன்ற காரியம். மற்றபடி எழுத்தாளர்கள் கடவுளை விடப் பெரியவர்கள்தான். குருவுக்கு தெய்வத்தை விடவும் உயரிய இடத்தைக் கொடுக்கிறது இந்திய மரபு. ஆனால் தெய்வங்களுக்கே பிறந்த நாள் கொண்டாடுகிறோம் அல்லவா? இல்லாவிட்டால் சீடை போய் விடுமே? அதனால் எழுத்தாளர்களும் கலைஞர்களும் பிறந்த நாள் கொண்டாடட்டும்.

365 நாளும் பிறந்த நாள் கொண்டாட்டத்திலேயே திளைக்கும் அராத்து எங்களுடைய ஒரே ஒரு நாள் கொண்டாட்டத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டாம்.