பொன்னியின் செல்வன் : மதிப்புரை

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு வெப்சீரீஸ் பிரபலமாகப் பேசப்பட்டது.  நான் தமிழ் வெப்சீரீஸே பார்ப்பதில்லை.  தமிழ் வெப்சீரீஸ் இன்னும் மழலைப் பருவத்தில் இருக்கிறது என்பது என் அனுமானம்.  ஆனால் அந்தக் குறிப்பிட்ட வெப்சீரீஸைப் பார்க்கச் சொல்லி என் நண்பர்கள் பலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள்.  என்னால் அதன் ஒரு எபிசோடைக் கூடப் பார்க்க முடியவில்லை.  அப்படி ஒரு குப்பை.  ஆனால் என்னால் அது பற்றி ஒரு வார்த்தை எழுத முடியவில்லை.  என் நெருங்கிய நண்பர்தான் அதற்குத் தயாரிப்பாளர்.  என்ன செய்வது?  வாயையும் கையையும் மூடிக் கொண்டேன்.  அப்படித்தான் பல படங்களுக்கு என்னால் வாயையே திறக்க முடியவில்லை.  அப்படி நான் வாயை மூடிக் கொண்ட படம் வெந்து தணிந்தது காடு. அதன் இயக்குனர் கௌதம் மேனன் என் நண்பர்.  கதை, திரைக்கதை, வசனம் என்று பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஜெயமோகனோ என் சகா.  என்ன செய்வது?  கம்மென்று இருந்து விட்டேன்.  அதிலும் அந்தப் பட்த்தை கௌதம் மேன்ன் வென்றே ஆக வேண்டிய நிலையில் இருந்தார்.  எனவே எக்காரணம் கொண்டும் அவர் மனம் நோக எழுதிவிடக் கூடாது என்று அமைதியாக இருந்தேன்.  ஆனால் அந்தப் படத்தைப் பார்த்து என் மனம் நொந்தது வேறு விஷயம்.  அதை இத்தனை நாள் கழித்துத்தான் சொல்கிறேன். 

இனி கொஞ்ச நாள் எந்தப் படமும் பார்க்க வேண்டாம் என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.  நண்பர்கள் மனம் புண்படாதிருக்க அது ஒன்றுதான் வழி. 

”எறங்கி செஞ்சுருவேன்” என்றெல்லாம் கௌதம் மேனன் போன்றவர்கள் சொல்லலாகாது.  நுகர்வோருக்கு தான் வாங்கிய, தான் நுகர்ந்த பண்டம் பற்றிச் சொல்ல உரிமை இருக்கிறது.

சென்ற மாதம் நான் சாப்பிட்ட பொன்னுசாமி ஓட்டல் சாப்பாடு எத்தனை மட்டமாக இருந்தது என்று கூடத்தான் நான் எழுதியிருந்தேன்.  அதற்காக பொன்னுசாமிக்காரர்கள் என்னை இறங்கி செய்வார்களா என்ன?

இப்போது பொன்னியின் செல்வன்.  ஒரு மாத காலத்துக்கு அதை நான் பார்க்க வேண்டாம் என்று இருந்தேன்.  ஆனால் இன்று அதைக் காண எனக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 

அது பற்றி எழுத எனக்கு மனம் வரவில்லை.  எல்லோரும் நண்பர்கள்.  மட்டுமல்லாமல், மணி ரத்னம், பாரதிராஜா இருவரை மட்டுமே நான் தமிழ் சினிமாவில் Auteur என்ற சொல்லுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என்று கருதுகிறேன்.  மணி ரத்னத்தின் குரு ஒரு மைல் கல் என்று எழுதியிருந்தேன்.  தமக்கென்று பிரத்தியேகமானதொரு திரை மொழியைக் கண்டடைபவரே Auteur என்ற பதத்துக்கு உரியவர்.  அப்படிப்பட்டவர்தான் மணி ரத்னம். 

ஆனால் பொன்னியின் செல்வனில் எனக்கு மணி ரத்னம் தெரியவில்லை.  பிரம்மாண்ட காட்சிகளைத் தவிர்த்து ஏதோ குழந்தைகள் போடும் ஒரு பள்ளி நாடகத்தைப் போல்தான் இருந்தது பொன்னியின் செல்வன்.  பிரம்மாண்ட காட்சிகளும் படத்தோடு ஒட்டவில்லை.  கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே விதிவிலக்கு.  மற்றபடி படத்தில் எதுவுமே எதோடுமே ஒட்டவில்லை.  யார் யாரோ வருகிறார்கள், பேசுகிறார்கள், போகிறார்கள்.  ஒரு பக்கம் சண்டையும் நடக்கிறது.  எல்லா காட்சிகளும் எல்லா பாத்திரங்களும் துண்டு துண்டாக ஒன்றுக்கொன்று இணையாமல் நின்று கொண்டிருக்கின்றன.  எந்தப் பாத்திரத்திலும் உயிர் இல்லை.  ஒரே ஒரு விதிவிலக்கு, ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம்.  அந்தப் பாத்திரம் மட்டுமே ரத்தமும் சதையுமாக உருவாக்கப்பட்டுள்ளது.  மற்றபடி ஆழ்வார்க்கடியான் ஒரு ஜோக்கர், அதை விடக் கொடுமை ஹீரோ வந்தியத் தேவன் (கார்த்தி) ஒரு ஜோக்கர், குந்தவை த்ரிஷா ஒரு மெழுகு பொம்மை, நந்தினி ஐஸ்வர்யா ராய் இன்னொரு மெழுகு பொம்மை, பிரகாஷ் ராஜ் பாவம், பிரபு பாவம், நாஸர் பாவம், பார்த்திபன் பாவமோ பாவம், சரத்குமார் பாவமோ பாவமோ பாவம், விக்ரம் பிரபு – சிவாஜியின் பேரனாம், பாவம், அவருக்குத் தமிழே பேசத் தெரியவில்லை, அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை விமர்சனம் செய்யும் ஆட்கள் மாணி ராட்னம் என்று சொல்கிறார்கள் அல்லவா, அதைப் போலவேதான் விக்ரம் பிரபு தமிழ் பேசுகிறார் – இப்படி எல்லோருமே பாவம்தான்.

ஆள் ஆளுக்கு வந்து நம் மூஞ்சியில் ஒரு குத்து விட்டு விட்டுப் போவது போலவே உணர்ந்தேன்.  நாமெல்லாம் எப்பேர்ப்பட்ட மஸாக்கிஸ்ட் கும்பலாக இருந்தால் இம்மாதிரி ஒரு படத்தை ஏதோ தேர்த் திருவிழாவைப் போல் ஓடி ஓடிப் போய் பார்ப்போம்?  உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பாவம் செய்தவர்கள்தான். 

ஒரு திரைப்படம் என்றால், அதில் ஒரே ஒரு ”உணர்வுத் தருண”மாவது இருக்க வேண்டாமா?  நாயகன், தளபதி, குரு போன்ற படங்களில் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு வசியம் செய்த அந்த மணி ரத்னம் பொன்னியின் செல்வனில் எங்கே போனார்?  

படத்தில் எதுவுமே நிகழவில்லை.  ஸ்டில் போட்டோக்ராஃப் மாதிரி எல்லாமே ஸ்தம்பித்து நின்று கொண்டிருக்கிறது.  பார்வையாளர்களிடமிருந்து ஒரு சத்தம் இல்லை.  அப்படியே கம்மென்று அமர்ந்திருக்கிறார்கள்.  பரிதாபமாக இருந்தது. 

இல்லை, சாரு பொய் சொல்கிறார், இது ஒரு மகத்தான வெற்றிப் படம் என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய வெற்றிகரமான எதிர்காலத்துக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

பொன்னியின் செல்வனில் விக்ரம் தவிர நான் ரசித்த விஷயம், அருண்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி.  குரலிலேயே அத்தனை பாவத்தையும் கொண்டு வந்து, உணர்ச்சியற்ற பொம்மைகளின் உலகில் மாட்டிக் கொண்ட நமக்கு ஒரு ஆசுவாசத்தை அளிக்கிறார். 

பட்த்தில் பாராட்டத்தக்க இன்னொரு அம்சம், இசை.  ஹாலிவுட் படத்தின் தரத்துக்கு இருந்தது இசை.  ரஹ்மானின் இசை மட்டும் இல்லாவிட்டால் நான் பாதியிலேயே எழுந்து வந்திருப்பேன்.