ஒரு தலையுடன் வாழ்வது: அபிலாஷ் சந்திரன்

(என் நண்பர் அபிலாஷ் ஃபேஸ்புக்கில் எழுதியதை அவரிடம் அனுமதி கேட்காமல் இங்கே பிரசுரம் செய்கிறேன். ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். மிக முக்கியமான கட்டுரை. இது பற்றிய என் கருத்தை கொஞ்ச நேரத்தில் தனியாக எழுதுகிறேன். இப்போது பென் ஹர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு பென் ஹர் தான் உதவுகிறது. என்னைப் போல் பொன்னியின் செல்வனால் மன உளைச்சல் அடைந்த சிறுபான்மையினருக்கும் பென் ஹரையே சிபாரிசு செய்கிறேன்…)

சாரு, ஏன் தான் பார்த்த ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என ஒரு ‘விமர்சனம்’ எழுதியிருந்தார். அதைப் படித்த போது எனக்கு இதைச் சொல்லத் தோன்றியது:

சினிமாவுக்கு மட்டுமல்ல, இலக்கிய நூல்களுக்கு விமர்சனம் எழுதுவது கூட ஒரு வீண் வேலையே. இந்த அரிய உண்மையை கடந்த பத்தாண்டுகளில் நம் சமகாலத்து எழுத்தாளர்கள் தம் உள்ளுணர்வால் அறிந்து சுதாரித்து விட்டிருக்கிறார்கள் என்பதை நான் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக விமர்சனக் கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்த போது புரிந்து கொண்டேன். தமிழில் வெளியாகிற பெரும்பாலான நல்ல நூற்களுக்கு ஒரு விமர்சனமாவது வருகிறது, ஆனால் அதை ‘விமர்சகர்கள்’ எழுதுவதில்லை. அதை எழுதுபவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்வரை பிளாகர்கள், இப்போது பேஸ்புக் வாசகர்கள். ஏன் விமர்சகர்கள் எழுதுவதில்லை என்றால் இன்று (ஒரு சிலரைத் தவிர) விமர்சகர்களே இல்லை. இது ஒரு ‘வெட்டி வேலை’ என அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் ‘வெட்டி வேலை’ என்றால் வேலை மெனெக்கெட்டு நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து அறிமுகப்படுத்தி அலசி ஆராய்ந்து விமர்சிப்பதால் எந்த அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்காது, விமர்சன நூல்களை யாரும் படிப்பதும் இல்லை, விமர்சகர்களுக்கு விருதுகளும் கிடைக்காது.

ஆனால் எனக்கு முந்தையை தலைமுறை எழுத்தாளர்கள் – நான் முன்னோடிகளாகக் கருதுபவர்கள் – சற்று வெள்ளந்தியானவர்கள். அவர்கள் படைப்பிலக்கியம் செய்து கொண்டே மதிப்புரை, விமர்சனமும் எழுதினார்கள். இதழ்கள் நடத்தினார்கள். கூட்டங்கள் ஒருங்கிணைத்து அதில் இலக்கியம் பேசினார்கள். க.நா.சு முதல் தமிழவன், சு.ரா., எஸ்.ரா., ஜெயமோகன், சாரு வரை இப்படித்தான் இரண்டு, மூன்று தலைகளை கழுத்துக்கு மேல் சுமந்து கொண்டு போராடினார்கள். பரஸ்பரம் பேசியும் எழுதியுமே அவர்கள் இலக்கியத்துக்கென ஒரு பாய்ச்சலை, வாசிப்புக்கான மொழியை, விவாதம் பண்ணுவதற்கான விழுமியங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கையில் அவர்களுடைய இடமானது அவர்கள் எழுதிய கதைகள் / நாவல்களாலே தீர்மானிக்கப்படுகிறது. (மேற்குலகில் இந்நிலை இல்லை. தமிழுக்கே உரித்தான பிரத்யேக நிலை இது.)

எத்தனை பேர் இன்று சு.ராவின் விமர்சனக் கட்டுரைகளைப் படிக்கிறார்கள்? ஜெயமோகன் நவீனத் தமிழிலக்கிய வரலாறு, தேவதேவனை முன்வைத்து, நாவல் போன்ற விமர்சன நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றை யாரும் படித்து அவரைப் பாராட்டி நான் பார்த்ததில்லை. ஆனால் அவர் எழுதிய கதைகளுக்காக பாராட்டுகிறார்கள். ஆனால் மேற்சொன்ன விமர்சன நூல்களை எழுத அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். எஸ்.ரா முன்பு உலக சினிமாவை நம் வாசகர்களுக்கும் சினிமா ஆர்வலகர்களுக்கும் அறிமுகப்படுத்த ஏராளமான கட்டுரைகளை எழுதினார். உலக சினிமா அறிமுக நூல் என்று ஒரு பெருந்தொகுப்பையும் கொண்டு வந்தார். ஆனால் அவர் அனுபவக் கதை வடிவில் எழுதிய கதாவிலாசம் போல இந்த எழுத்துக்கள் கவனிக்கப்படவில்லை. புனைவெழுத்துக்காகவே அவருக்கு வாசகப் பரப்பும், இலக்கிய அங்கீகாரமும், சாகித்ய அகாடெமி விருதும் அளிக்கப்பட்டது.

சாரு அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட இலக்கியங்களை, இசையை, சினிமாவை அறிமுகப்படுத்தினர் இல்லை, ஆனால் அவருக்கும் இதே கதி தான். சிலநேரம் ஒரு புனைவெழுத்தாளருக்கு ஒரு கட்டுரை நூலை வைத்து அகாடெமி விருதளிப்பார்கள் என்றாலும் அது உண்மையில் அவரது புனைவுகளுக்காகத் தான் என்பதை அனைவரும் அறிவர். அ. மார்க்ஸ், எஸ்.வி ஆர் போன்றோரால் பயன்பெற்ற அவரது தலைமுறைப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். எஸ்.வி.ஆரின் சீடர்கள் இன்றும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர் புனைவு பக்கம் சென்றிருந்தால் அவரை தலைமேல் தூக்கி வைத்திருப்பார்கள். அ. மார்க்ஸை இன்றும் ஒரு அரசியல் போராளி, கருத்தாளர் என்பதைத் தாண்டி அவரது கருத்தியல் பங்களிப்புக்காக நாம் அங்கீகரிப்பதில்லை. இதையே நான் அ. ராமசாமிக்கும், ஜமாலனுக்கும் சொல்வேன். இந்த விமர்சகர்களின் அவல நிலை என்னவென்றால் அவர்கள் எழுதுவதை நிறுத்திய சில ஆண்டுகளில் மொத்த உலகமும் அவர்களை மறந்து விடும். எத்தனை ஆயிரம் பக்கங்கள்! யாருமே பொருட்படுத்த மாட்டார்கள்.

இன்று ஓரளவுக்கு வாசிக்கப்படும் வரலாற்று, பண்பாட்டு ஆய்வாளர்களுக்கும் இதையே சொல்வேன். (இது அவர்களுடைய தவறல்ல, இது நம் சூழலின் அவலம்.)அசோகமித்திரனைப் பாருங்கள் – அவர் நூல் விமர்சனத்தை தீவிரமாக செய்ததில்லை, கருத்துக்கள் கூறியதில்லை, இதழ் நடத்தியதில்லை, சில குறிப்புகளை மட்டுமே எழுதியிருக்கிறார், ஆனால் ஏராளமான கதைகளை எழுதினார், அவரை இன்றும் திரும்பத் திரும்ப படிக்கிறோம். நம் நவீன இலக்கியப் பரப்பில் அவர் மட்டுமே ரொம்பவே சமர்த்து என எனக்குத் தோன்றுகிறது. அவர் ஆயிரக்கணக்கான நூல்களை விமர்சித்து எழுதியிருந்தால் எவ்வளவு நேரத்தை விரயம் பண்ணி இருப்பார் யோசித்துப் பாருங்கள். அவரை நீங்கள் நேரில் சந்திக்கையில் துருவித் துருவிக் கேட்டால் தன் சக படைப்பாளிகள் பற்றி நாசூக்காக சில கருத்துகளை சொல்வார். ஆனால் வெளிப்படையாக கராறாக விமர்சிக்க மாட்டார். அவருக்கு என்று இலக்கிய பள்ளிகளோ எதிரிகளோ இல்லை. சொல்லப் போனால் அவர் தான் நம் தலைமுறைக்கான சரியான வழிகாட்டி என நினைக்கிறேன்.

இந்த உண்மையை நன்குணர்ந்தவர்கள் என்று என் அடுத்த தலைமுறை படைப்பாளிகளை சொல்லலாம். அவர்கள் தாம் அ.மியின் சரியான வாரிசுகள். அவர்கள் படைப்பிலக்கியத்திலே அதிக கவனம் செலுத்துகிறார்கள். கதை / கவிதை எழுதாத நேரத்தில் சமூகவலைதளங்களிலோ அலுவலக வேலையிலோ நட்பாக்கத்திலோ கவனம் செலுத்துகிறார்கள். ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லாரும் நண்பர்கள், எல்லாரும் அன்பர்கள். இவனைப் பாராட்டினாயே அவனை மதித்தாயா, அவனைப் பற்றி எழுதினாயே என்னைப் பற்றி ஒரு சொல் எழுதினாயா என்றவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். தூற்ற மாட்டார்கள். “நான் தான் யாரைப் பற்றியும் எழுதுறது இல்லையே பாஸ்” என்று விடலாம். “எங்கள் வாழ்வில் இல்லை தொல்லை, நாங்கள் எல்லாருக்கும் செல்லப்பிள்ளை, லா லா லா லா…”

இன்று ஒரு மூத்த படைப்பாளியைப் பற்றி எழுதக் கேட்டாலும் அவருடனான இனிய நினைவுகளை எழுதலாம், அவருடைய கதைகளில் நாம் ரசித்த பகுதியைப் பற்றி எழுதலாம், ஆழமாக விமர்சனம் எழுதினால் மாட்டிக் கொள்வோம்.

அச்சிதழ்கள் தோய்வுற்று, சமூகவலைதளங்களும் வந்து விட்ட பின்னர் இப்புதிய சூழலில் தோன்றிய படைப்பாளிகளுக்கு சமயோஜிதம், புத்திசாலித்தனம், நேர மேலாண்மை அறிவு அதிகமாக இருக்கிறது. தமக்கும் தம்மவர்களுக்கும் பயனில்லாத காரியத்தை அவர்கள் செய்வதே இல்லை. அவர்களும் நம்மளவே படிக்கிறார்கள். ஆனால் படித்ததைப் பற்றி பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள், நேரத்தை வீணாக்க மாட்டார்கள். யாரைப் பார்த்தாலும் போய் பாராட்டி விடுவார்கள், தலைநரைத்தவர்களைக் கண்டால் ஆசீர்வாதம் வாங்குவார்கள். எல்லா அதிகார மையங்களிலும் துண்டு போட்டு வைப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் நூறு மதிப்புரைகள் எழுதுகிற இடத்தில் 10 நெஞ்சை நக்குகிற கதைகள் எழுதினால் உலகமே அவர்களைக் கொண்டாடும், வருடத்திற்கு நான்கைந்து விருதுகளும் கிடைக்கும் என.

நான் இங்கு இதைப் படிக்கும் அத்தனை அன்பர்களுக்கும் இந்த நடைமுறையையே பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். இன்றும் நமது முன்னோடிகளின் தாக்கத்தினால் எழுதுவோரும் சிறுபத்திரிகை மரபின் தொடர்ச்சியாக தம்மைக் கருதுவோரும் அதே பழைய தவறை செய்கிறார்கள். ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து பத்திரிகை நடத்துவது, விமர்சனம் எழுதுவது என தம்மை எரித்து உலகுக்கு வெளிச்சம் அளிக்க விரும்புவோர் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடமும் நான் கேட்டுக் கொள்வது வெறுமனே கதை, கவிதைகளில் மட்டும் உங்கள் ஆற்றலை செலுத்தி முன்னேறுங்கள் என்றே. லட்சியவாதத்தின், இலக்கிய கூட்டியக்கத்தின், தியாகத்தின் காலம் முடிந்து விட்டது. இன்று பத்திரிகை நடத்துவது, விமர்சனம் எழுதுவதன் ஒரே பலன் இலக்கிய அதிகாரத்தை அடைவது மட்டுமே. அது ஒருவித அரசியல் நடவடிக்கை. ஆனால் உங்களை வெகுவிரைவில் மறந்து விடுவார்கள். என்றோ ஒருநாள் நம்மை யாரும் மதிப்பதில்லையே என உங்களுக்குத் தோன்றும். உஷார்!சாருவைப் போல நானும் நினைத்ததுண்டு – நான் எத்தனையோ பேரின் புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன், இவர்கள் என் படைப்புகளைப் பற்றி எழுதுவதில்லையே என்று. நான் மதிப்பிடாத, பாராட்டாத எழுத்தாளர்களே என்னைப் பொருட்படுத்தி மதிப்புரை எழுதுகிறார்கள். ஆனால் இதைப் பற்றி எனக்கு வருத்தங்கள் இல்லை. மாறாக நான் இவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு புத்திசாலியாக விரும்புகிறேன்.

இதனாலே நான் படிக்கிற பெரும்பாலான நூல்களை அறிமுகப்படுத்தி எழுதுவதே இல்லை. ஏனென்றால் என்னால் அட்டையை மட்டும் போட்டு, ஒரு வரியில் முன்னிலைப்படுத்த இயலாது. சொல்ல நிறைய இருக்கும். குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுத வேண்டி இருக்கும். அத்தனையும் வீண். எப்போதாவது மிகவும் தூண்டப்பட்டால், நிறைய நேரம் இருந்தால் மட்டும் இலக்கிய விமர்சனம் எழுதுவேன். அதன் பிறகு என்னையே நான் நொந்து கொள்வேன் – “ஏண்டா அரை மெண்டல், உங்கிட்ட தான் சொல்லி இருக்கேனே விமர்சனம் எழுதாதேன்னு, அதுக்குப் பதிலா உன் நாவலுக்கு ஒரு அத்தியாயம் எழுது, உன் படைப்புகளை நீயே புரொமோட் பண்ணு” என்று என்னை நானே அறைந்து கொள்வேன். நான் வாரத்திற்கு மூன்று நான்கு படங்களாவது பார்த்து விடுகிறேன். அவற்றையெல்லாம் பார்த்தவுடனே மறந்து விடுகிறேன். முக்கியமான படம், ஒரு வரியாவது எழுத வேண்டும் என நினைத்து மறந்து விடுகிறேன். இதை மட்டுமே நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இதையே எதிர்காலத்தில் இலக்கிய நூல்களுக்கும் பின்பற்ற வேண்டும். வாயே திறக்கக் கூடாது.இப்படி ஆளாளுக்கு சமர்த்து அம்பிகளாக மாறுவதன் தீய விளைவு என்ன?

இதைப் பற்றி அண்மையில் ஒரு முக்கிய கவிஞரும் பதிப்பாளரும் என்னிடம் பேசும் போது “விமர்சன மரபுடன் தொடர்ச்சி அறுந்து விட்டது. வாசிப்புக்கான முறைமை, தான் வாசித்ததைப் பற்றி பேசும் தர்க்க அறிவை இன்றைய வாசகர்கள் இழந்து விட்டார்கள். எல்லா எழுத்தாளர்களும், எல்லா படைப்புகளும் ஒன்றே என நினைக்கிறார்கள், ஒரு படைப்பாளியை மதிப்பிட்டு வரையறுக்கும் திறனோ கருவிகளோ அவர்களிடம் இல்லை, இடதுசாரி வலதுசாரியுடன் கைகுலுக்கலாம், வெகுஜன படைப்பாளி இலக்கிய படைப்பாளியாக மதிக்கப்படலாம், கொள்கை முரண் கொண்டவர்கள் சேர்ந்து மேடையில் முழங்கலாம், எல்லாமே சாக்கடையாகி விட்டது” என்றார்.

நான் அவரிடம் சொன்னேன், “நாம் இந்த காலத்தின் பிரதிநிதிகள். சுயநலமே ஒரே நலன். நாம் இனி ரெண்டு, மூன்று தலைகளுடன் வாழ வேண்டியதில்லை. இனி நமக்கு ஒரு தலை போதும், அதை ஒழுங்காக பராமரித்து சந்தோசமாக இருப்போம்.”நானும் இனி ஒரு தலையுடன் வாழவே விரும்புகிறேன். கழுத்து வலிக்கிறது. தினமும் ரெண்டு மூன்று வாய்களுக்கு சோறு கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த உபரி தலைகளுக்கும் மதிப்பில்லை. அவற்றால் பிரச்சனைகளே அதிகம் ஏற்படும்.

சாரு கூட விமர்சனமே எழுதாமல் இருந்திருந்தால் அவரை மேலும் பலர் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவர் ஒருமுறை எழுதிய சினிமா விமர்சனத்தின் பெயரில் அந்த இதழை நடத்தியவரை ஒரு சினிமா பிரபலம் தன் வீட்டுக்கு அழைத்து ஒரு மணி நேரம் திட்டியதுடன் உறவையும் முறித்துக் கொள்ள, அவர் ஒரு திரைப்பாடலாசிரியாக மலரும் வாய்ப்பு பறிபோனது. ஆக சாருவினால் சாருவுக்கு மட்டுமல்ல அவரைச் சுற்றி இருப்போருக்கும் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஏனென்றால் அவர் உண்மையை எழுதுகிறார். உண்மை எப்போதும் கோபத்தை, கசப்பை, வெறுப்பையே பிரதிபலனாகத் தரும். உண்மையை சொல்லாமல் நா காத்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.