உற்பத்தியும் சிருஷ்டியும்…

நேற்று (3.10.2022) அபிலாஷ் சந்திரன் எழுதிய ”ஒரு தலையுடன் வாழ்தல்” என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.  அபிலாஷின் கட்டுரைக்கான என் எதிர்வினைதான் இது.  சொல்லப் போனால் அபிலாஷ் எழுதியிருப்பதும் இப்போது நான் எழுதுவதும் ஒன்றேதான்.  அவர் தன் கட்டுரையை மனம் நொந்த நிலையில் எழுதியிருக்கிறார். புத்திசாலி வாசகர்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆரண்ய காண்டத்தில் வரும் காளையன் சொல்வார் அல்லவா, ”நமக்கு எங்கேடா நல்லது நடக்கப் போகுது?” என்று, அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் அபிலாஷின் கட்டுரை.  அதையேதான் நான் வேறோர் மொழியில் எழுதப் போகிறேன்.

என் காலத்தில் ஒரு எழுத்தாளர் நம்மை விட எத்தனை வயது மூத்தவராக இருந்தாலும் அவரைப் பெயர் சொல்லித்தான் அழைப்பது வழக்கமாக இருந்தது. சார் என்ற வார்த்தை என் செவிகளில் விழுந்ததே கிடையாது.  தி.ஜானகிராமனையே நாங்கள் தி.ஜா. என்றுதான் அழைப்போம்.  சுந்தர ராமசாமியை சு.ரா.  வெங்கட் சாமிநாதனை ஸாம்.  க.நா.சு.வை க.நா.சு.  இந்திரா பார்த்தசாரதியை இ.பா.  அசோகமித்திரனை அசோகமித்திரன்.  முத்துசாமியை முத்துசாமி.  தர்மு சிவராமுவை சிவராமு.  நகுலனை நகுலன்.  இப்போது மனுஷ்ய புத்திரனைக் கூட எல்லோரும் சார் என்று அழைக்கும்போது எனக்கு அது நாராசமாகக் காதில் ஒலிக்கிறது.  அ. மார்க்ஸை பதிப்பாளர்கள் சார் என்று அழைக்கும்போது தகரத்தில் சரளைக் கல்லைத் தேய்ப்பது போல் இருக்கிறது.  மார்க்ஸும் அதைக் கண்டு கொள்ளாமல் போவது ஆச்சரியமாக இருக்கிறது. (நான் இங்கே சொல்வது, ஒருவரை முகத்துக்கு நேராக அழைப்பது பற்றி. அன்னார் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிடுவது அல்ல.)

சொன்னால் என்னைத் திட்டுவீர்கள்.  இதை நான் இன்றைய கலாச்சார சீரழிவின் குறியீடாகப் பார்க்கிறேன்.  எப்படி என்பதுதான் இந்தச் சிறிய கட்டுரையின் நோக்கம். 

இப்போது பிழைப்புதான் எல்லாம் என்று ஆகி விட்டது.  இன்று அதிகாரம்தான் மிகப் பெரிய ஈர்ப்பு சக்தியாக விளங்குகிறது.  புகழ் வெளிச்சத்திற்காக இளம் எழுத்தாளர்கள் சமரசம் செய்து கொள்ளத் தயாராகி விட்டார்கள்.  எழுத்து என்பதே சினிமாவில் நுழைவதற்கான அனுமதிப் பத்திரமாக மாறி விட்டது.  யாரும் யாரையும் விமர்சிப்பதில்லை.  விமர்சனம் இருந்தாலும் அதை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். 

அபிலாஷின் நாவல் “கால்கள்” வந்த போது அபிலாஷும் நானும் மிக நெருக்கமான தோழர்களாக இருந்தோம்.  ஆனால் கால்கள் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னதும் அபிலாஷ் மிகக் கடுமையாகக் கோபப்பட்டார்.  அதை என்னிடம் தெரிவிக்கவும் செய்தார்.  ஆனால் அதிலெல்லாம் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தது.  இருவருமே ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தோம்.  இப்போதைய எழுத்தாளர்களிடம் இதையெல்லாம் துளியும் காண முடிவதில்லை.  எல்லாவற்றிலும் ஒரு போலித்தனம்.  பாசாங்கு.  யார் என்ன நினைக்கிறார்கள் என்றே அறிந்து கொள்ள முடிவதில்லை. 

அப்போதைய காலம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்.  அப்போதெல்லாம் கமல் படப்பிடிப்புத் தளத்தில் கோணங்கியின் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுவேன்.  கமலும் தன் பேட்டிகளில் கோணங்கி பற்றி அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.  அப்போது ஒருமுறை தனக்கு மிக நெருக்கமான ஒரு மூத்த கவிஞரிடம் கோணங்கியைச் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார் கமல்.  கவிஞரும் கோணங்கியிடம் செய்தியைச் சொன்னார்.  ஒருக்கணமும் யோசியாமல் கோணங்கி சொன்னது, கமலை கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள். 

இது அந்தக் கவிஞரே என்னிடம் சொன்னது.  எனவே இது உண்மையான சம்பவம்தான்.

இந்த குணத்தை கோணங்கி யாரிடமிருந்து பெற்றார்?  சுந்தர ராமசாமியிடமிருந்து.  சுந்தர ராமசாமி யாரிடமிருந்து பெற்றார்?  க.நா.சு.விடமிருந்தும் புதுமைப்பித்தனிடமிருந்தும்.  க.நா.சு.வும் புதுமைப்பித்தனும் யாரிடமிருந்து பெற்றார்கள்?  பாரதியிடமிருந்து. 

எல்லோரும் ஜெயகாந்தனை சொல்வார்கள்.  சிம்மம் போல் வாழ்ந்தவர்.  சிவாஜியின் கூட்டத்தில் சிவாஜியை விமர்சித்தவர்.  அண்ணாதுரை இறந்து தமிழ்நாடே உணர்ச்சி வெள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த போது யாரை அறிஞர் என்று சொல்கிறீர்கள், மூடர்களே என்று கர்ஜித்தவர் ஜெயகாந்தன்.  பெரியாரையும் அவரது கூட்டத்திலேயே விமர்சித்தார்.  ஆனால் கடைசி காலத்தில் புலி பூனையாக முடங்கி விட்டதையும் நாம் கண்டோம்.  ஆனால் பாரதியின் செருக்கும் வீரமும் அப்படிப்பட்டது அல்ல.  அது க.நா.சு. வழியாக, புதுமைப்பித்தன் வழியாக, சுந்தர ராமசாமி வழியாக, கோணங்கி வழியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இது வெறுமனே செருக்கும் வீரமும் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல.  முந்தின தலைமுறையில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு கெரில்லா வீரனைப் போல் வெகுஜன கலாச்சாரம் என்ற பெருந்தீமையை – அசுரனை – எதிர்த்து யுத்தம் செய்து கொண்டிருந்தான்.  அது என்ன யுத்தம்? 

சி.சு. செல்லப்பாவும் க.நா.சு.வும் செய்ததுதான்.  இருவரும் நன்றாகப் படித்தவர்கள்.  தேர்வு எழுதி கலெக்டர் ஆகியிருக்கலாம்.  ஆனால் இருவரும் வேலைக்கே போகவில்லை.  குடும்பச் சொத்தை விற்று விற்று புத்தகம் போட்டார்கள்.  பத்திரிகை நடத்தினார்கள்.  செல்லப்பா புத்தக மூட்டையைச் சுமந்து கொண்டு கல்லூரி கல்லூரியாக நடந்தார். 

எதற்கு?

கல்கியும் மற்றும் இன்னோரன்ன வெகுஜன/ஜனரஞ்சக எழுத்தாளர்களும் தமிழ்க் கலாச்சாரத்தையே வேரறுத்துக் கொண்டிருந்தார்கள்.  எல்லா சமூகங்களிலும் கல்கிகள் உண்டு. ஆனால் அங்கேயெல்லாம் வெகுஜன/ஜனரஞ்சக எழுத்தை இலக்கியம் என்று சொல்வதில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் வெகுஜன/ஜனரஞ்சக எழுத்துதான் இலக்கியம்.  வெகுஜன எழுத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்த அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும்தான் இங்கே ஞானபீடப் பரிசு கிடைத்தது.  அபிலாஷின் கல்லூரியில் நடந்ததையே சொல்கிறேன். அபிலாஷ் பெங்களூரில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறார். அவர் வகுப்பில் மலையாளிகள், கன்னடக்காரர்கள், தமிழர்கள் எல்லோரும் உண்டு. தத்தம் மொழியில் வந்துள்ள ஏதோ ஒரு சிறுகதையை அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். கன்னட மாணவன் லங்கேஷ், சதாஷிவா போன்ற எழுத்தாளர்களின் கதைகளையும், மலையாள மாணவர்கள் பஷீர், ஸக்கரியா போன்றவர்களின் கதைகளையும் மொழிபெயர்த்தால் தமிழ் மட்டி முண்டங்கள் மட்டும் குதத்தில் ஈட்டியைக் குத்தியதைப் போல் திருதிருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்களாம் (உதாரணம் அடியேனுடையது).  தமிழ் எருமைகளுக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் பெயர் கூடத் தெரிந்திருக்கவில்லை.  சுஜாதாவின் பெயர் கூடத் தெரியவில்லை என்று எழுதியிருந்தார் அபிலாஷ். 

தமிழ்நாடு இப்படி ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக மாறியதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கல்கி. நான் மட்டும் சொல்லவில்லை.  புதுமைப்பித்தனும் இப்படித்தான் சொல்கிறார். ஒட்டு மொத்தமாகத் தமிழ் இலக்கிய வாசிப்புக் கலாச்சாரத்தையே காலி பண்ணியவர் கல்கி.  புதுமைப்பித்தன் போன்றவர்களையெல்லாம் “நீங்கள் செய்வது வீண் வேலை, நூறு பேருக்கு எழுதுவது பைத்தியக்காரத்தனம்” என்று எழுதி புதுமைப்பித்தனையும் அவனது சகாக்களையும் ஓட ஓட விரட்டியவர்கள் கல்கியும் அவரை ஒத்த வெகுஜன எழுத்தாளர்களும்.  இதனால் புதுமைப்பித்தன் போன்றவர்களைப் படிக்க வாசகக் கூட்டமே இல்லாமல், உணவுக்கும் வழியின்றி வறுமையினால் காச நோய்க்கு மருந்து வாங்கக் கூட காசு இல்லாமல் செத்தவர் புதுமைப்பித்தன்.  

புதுமைப்பித்தன் என்ற மேதைக்கு எப்படி கதை எழுத வேண்டும் என்று பாடம் எடுத்தவர் ராஜாஜி!  இன்னொரு துறையில் பிரமுகராக இருந்தால் எத்தனை திமிர் வந்து விடுகிறது?  அப்போது ராஜாஜியின் மௌடீகத்தை அவருக்குத் தெரியப்படுத்த அரசியலில் யாரும் இல்லாமல் போயிற்று.  ராஜாஜிதான் அவர் காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்! இலக்கியத்துக்கான சாஹித்ய அகாதமி பரிசும் பெற்றவர் ராஜாஜி!

இந்தப் போக்கை எதிர்த்துப் போராடியவர்கள்தான் அக்காலத்திய சிறுபத்திரிகை இலக்கியவாதிகள்.  அப்போது சிறுபத்திரிகை நடத்தாத இலக்கியவாதியே யாரும் இல்லை.  குழு குழுவாகப் பிரிந்து நடத்தினார்கள்.  சிலர் தனியாகவே நடத்தினார்கள்.  பரந்தாமன் அஃ என்ற இதழை நடத்தினார். அந்த நேரத்தில் அஃ போல் இருபது சிறுபத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. இப்படி பத்திரிகை நடத்துவது, கூட்டங்கள் நட்த்துவது, தாங்களே தங்கள் நூல்களை அச்சிட்டு விற்பது, மற்றவர்களின் நூல்களுக்கு மதிப்புரை எழுதுவது – இது எல்லாமே அக்காலத்திய இலக்கிய கெரில்லா செயல்பாடுகள்தான்.  (நான் கூட இரண்டு பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன்!)  எல்லாமே குடும்பத்தை பலி கொடுத்துத்தான் நடக்கும்.  புதுப்பட்டி என்ற பட்டிக்காட்டில் தையல்காரராக இருந்த நடராஜன், இலக்கிய வெளிவட்டம் என்ற பத்திரிகையை நடத்தினார். (ஜெனகப்ரியா என்ற பெயரில் எழுதவும் செய்தார்.)  இப்படியாகத்தான் தமிழ் வெகுஜன கலாச்சாரம் என்ற அசுரனுக்கு எதிராக நடந்து கொண்டிருந்தது இலக்கிய யுத்தம். 

இதைத்தான் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் அபிலாஷ்.

இப்போது காலம் மாறி விட்டது.  ’சினிமாவில் வசனம் எழுதி விட்டால் போதும்,  வாழ்நாள் சாதனையை அடைந்தாயிற்று’ என்று நினைக்கிறார்கள் பல இளம் எழுத்தாளர்கள்.

பாரதியிலிருந்து தொடங்கிய கலாச்சார கெரில்லா யுத்தம் எங்கள் மூவரின் காலத்தோடு முடிவுக்கு வருகிறது.  மூவர் என்றால் உங்களுக்குத் தெரியும். 

அசோகமித்திரன் என்ன செய்தார் என்று அபிலாஷ் குறிப்பிடுகிறார்.  கதை எழுதுவது தவிர அசோகமித்திரன் வேறு எதுவுமே செய்ய மாட்டார்.  எல்லோருக்கும் நல்ல பிள்ளை.  அப்படிப்பட்டவரைப் போய் “இவர் எழுத்தாளரே இல்லை, போலி” என்று தன் வாழ்நாள் முழுவதும் கத்திக் கொண்டிருந்தார் வெங்கட் சாமிநாதன்.  பாவம்.  ஆனால் சுந்தர ராமசாமி எப்படி வாழ்ந்தார்?  அசோகமித்திரனின் எதிர்த் துருவம்.  அகிலனுக்கு ஞானபீடப் பரிசு என்றதும், அகிலன் ஒரு மலக்கிடங்கு என்று எழுதினார் சு.ரா. 

பிறகு நான் அசோகமித்திரனை சந்தித்தபோது, ”ராமசாமி அப்படியெல்லாம் எழுதியிருக்கக் கூடாது, எழுத்து என்றால் அதில் பல வகைகள் இருக்கும்தான், ஏன் அகிலன், மு.வ. எல்லாம் எழுதியதில் என்ன தப்பு?” என்று கேட்டார்.

”ஒரு தப்பும் இல்லை, அந்தக் குப்பைக்கெல்லாம் ஞானபீடம் கொடுத்ததுதான் தப்பு” என்றேன். 

ம்ச்ச என்ற ஒரு சலிப்புடன் அதைத் தட்டி விட்டு விட்டார் அசோகமித்திரன்.

கன்னடத்தில் ஒருபோதும் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்காது.  நடக்க விட மாட்டார்கள்.  ஏனென்றால், ஞானபீடம் என்பது தில்லியில் அமர்ந்திருக்கும் குழு தேர்ந்தெடுப்பது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புத்திஜீவிகள் எல்லோரும் தேர்ந்தெடுத்து அளிக்கும் பெயர்.  ஆக, தமிழ்நாடு அகிலனின் பெயரைத் தேர்ந்தெடுத்து அளித்திருக்கிறது என்றால், அதுதான் தமிழ்நாட்டின் லெட்சணம்.  அதை சாதித்தவர்கள்தான் கல்கியும் அவரை ஒத்த மற்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களும். 

கலாச்சார கெரில்லா யுத்தம் என்று குறிப்பிட்டேன். பத்திரிகை நட்த்துவது, புத்தகங்கள் பிரசுரிப்பது மட்டும் அல்ல, கூட்டம் நடத்துவதும் அதில் ஒன்று.  எனக்குத் தெரிந்து அழகிய சிங்கர் திருவல்லிக்கேணியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாதம் ஒரு கூட்டம் என்று நடத்திக் கொண்டிருக்கிறார்.  அழகிய சிங்கர் கவிஞர், விருட்சம் பத்திரிகையின் ஆசிரியர், சிறுகதைகளும் குறுநாவல்களும் எழுதியிருக்கிறார்.  விருட்சம் பத்திரிகையை அவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்திக் கொண்டிருக்கிறார்.  ஆக, அழகிய சிங்கரும் ஒரு கெரில்லாப் போராளியே ஆவார்.

தென்காசியில் வசிக்கும் கலாப்ரியா குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்துவார். அதற்கு இணையான இலக்கிய சந்திப்புகள் எதுவும் இல்லை.

எல்லாமே சொந்தப் பணத்தில் நடத்தப்பட்டவை.  

இப்படித்தான் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்தார்கள் அக்காலத்திய எழுத்தாளர்கள்.

அசோகமித்திரனையும் சுந்தர ராமசாமியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.  கதை மட்டும் எழுதுபவர்கள் அசோகமித்திரனைப் போன்றவர்கள்.  எழுத்தாளர்கள்.  ஆனால் சு.ரா. ஒரு சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர்.  அந்த மரபில் வந்தவர்களே சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும். 

இதை எப்படி நிகழ்த்துவது?

ஒரு அபிப்பிராயத்தை, ஒரு கருத்தை எப்படி பொதுச் சமூகத்தில் உலவச் செய்வது?

கதை எழுதினால் போதாது.  என்னை விட நன்றாக எழுதக் கூடியவர்கள் தமிழில் உண்டு.  இந்தியத் தத்துவமும் மேலைத் தத்துவமும் அறிந்திருக்க வேண்டும்.  தேவி பிரஸாத் சட்டோபாத்யாய, கோஸம்பி, ரணஜித் குஹா போன்ற வரலாற்றாசிரியர்களைப் பயின்றிருக்க வேண்டும். 

உலக இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும்.  உலக சினிமா, உலக இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம், நாடகம் எல்லாமே அறிந்திருக்க வேண்டும்.  சமூகவியல், மானுடவியல் தெரிந்திருக்க வேண்டும்.  உறக்கத்திலிருந்து எழுப்பி ஹென்றி பெர்க்ஸன் காலம் பற்றி என்ன சொன்னார் என்று கேட்டால் சொல்ல வேண்டும்.  இது வெறும் அறிவு சார்ந்தது அல்ல. எனக்கு ஹென்றி பெர்க்ஸனைத் தெரியும், மிஷல் ஃபூக்கோவைத் தெரியும் என்ற அறிவு அல்ல இது.  இது நம் வாழ்வோடும், தத்துவத்தோடும், அரசியலோடும் சம்பந்தப்பட்டது.  எப்படி?  தொடர்ந்து வாசியுங்கள்.

இங்கேதான் நான் குறிப்பிட்ட மூவரும் வருகிறார்கள்.  எஸ்.ரா. என்ன செய்தார், செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்.  ஜெயமோகனும் சாருவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.  இவர்கள் மூவருமே ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைச் செய்தார்கள்.  செய்து கொண்டிருக்கிறார்கள்.  சினிமா பற்றியும் இசை பற்றியும் தெரிய வேண்டுமா, சாருவைப் படி.  தத்துவமும், இலக்கிய வரலாறும் தெரிய வேண்டுமா, ஜெயமோகனைப் படி.  உலக சினிமா, ஓவியம், இந்திய வரலாறு, இலக்கியம், பொது அறிவு தெரிய வேண்டுமா, எஸ்.ரா.வைப் படி.  (கார்ல் மார்க்ஸ் பற்றிய எஸ்.ரா.வின் ஒரு உரை நான்கு மணி நேரம் நீளக் கூடியது!) இந்த மூவரையும் அடியொற்றித்தான் இன்று ஊருக்கு நூறு பேர் உருவாகி வருகிறார்கள்.

இன்னொரு முக்கியமான அவதானம்.  எங்கள் மூவருக்கும் பிறகு இந்த சங்கிலித் தொடர் தொடரும் என்பதற்கான எந்த அறிகுறியும் எனக்குத் தெரியவில்லை.  அபிலாஷைப் போல் நன்கு படித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு இயக்கமாகத் திரளும் அளவுக்கு அவர்களுக்குப் பக்க பலம் இல்லை.  அதுதான் எதார்த்தம்.   

இந்த நிலையில் எஸ்.ரா.வுக்கும் ஜெயமோகனுக்கும் இல்லாத மண்டையிடி எனக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. இளம் பிராயத்திலேயே ஐரோப்பிய இலக்கியம், ஐரோப்பிய இசை, ஐரோப்பிய சினிமா என்ற பின்னணியில் களம் இறங்கியவன் என்ற காரணத்தால் இந்தச் சூழலில் நான் ஒரு அந்நியனாகத்தான் இருக்க முடிந்தது.  (சினிமாவில் எம்.ஆர். ராதா இருந்ததைப் போல என்று சொல்லலாம்.)  அதனால்தான் 1981இலேயே ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை “போலி” என்று என்னால் சொல்ல முடிந்த்து.  அதனால்தான் இன்று வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை நிராகரிக்க முடிகிறது.

யோசித்துப் பார்க்கிறேன்.  தளபதி, நாயகன், திருடா திருடா, குரு, இருவர் போன்ற படங்களைப் பாராட்டி எழுதினேன்.  தமிழில் இன்று நான் மதிக்கும் ஒரே இயக்குனர் மணி ரத்னம்.  ஆனாலும் பொன்னியின் செல்வன் எனக்கு மன உளைச்சல் தந்தது என்று எழுதியதுதான் அவர் மனதில் நிற்கும்.  இப்படி என்னுடைய ஒவ்வொரு சினிமா விமர்சனத்திலும் நான் ஒவ்வொரு இயக்குனரிடமிருந்தும் விலகிக் கொண்டிருக்கிறேன்.  எனக்கு வெற்றிமாறனின் ஒவ்வொரு படமும் பிடிக்கும்.  ஆனால் விசாரணை ஒரு விஜய் படம் என்று மேடையிலேயே – அவர் எதிரிலேயே – கிழித்துத் தோரணம் கட்டி விட்டேன்.  அப்போது வெற்றிமாறன் என்னிடமிருந்து விலகினார்.  இதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.  கமலுக்கு ஏன் என் மீது அத்தனை துவேஷம் என்றால், குருதிப் புனலை சாக்கடைப் புனல் என்று எழுதி, அதை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்காததால் தனிப் பிரசுரமாகவே வெளியிட்டு, ஃபில்ம் சேம்பரில் வைத்து, வாசலில் நின்று எல்லோரிடமும் கொடுத்தேன். அந்தப் பிரசுரத்தைக் கொண்டு வருவதற்காக எனக்கு ஆயிரம் ரூபாய் செலவாயிற்று.  அப்போது என் சம்பளம் நாலாயிரம் ரூபாய்.  கமலுக்கு என் மீது கடும் கோபம் ஏற்பட்டிருக்கும்.  ஆனால் நக்ஸல் தீவிரவாதிகள் பதின்மூன்று வயது சிறுமியின் புட்டத்தை ரசிப்பது போலவும், தீவிரவாதியின் மனைவியை ஏதோ விபச்சாரி போலவும் காண்பித்தது எனக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.  பிறகு நடந்தது தசாவதாரம்.  அதைப் பற்றித்தான் அபிலாஷ் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  ஷங்கரிடம் வசனம் குறித்து என் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்ட போது ’கண்ணிமைக்கும் நேரத்தில்’ ”அவர்” வேண்டாம் என்று ஷங்கர் குறிப்பிட்டது எதனால் என்று நினைக்கிறீர்கள்? இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா பற்றி என்னுடைய மதிப்பீடுகளை பாசாங்கு இல்லாமல் முன்வைத்துக் கொண்டிருப்பதால்தான்.

என்னுடைய ஒவ்வொரு சினிமா விமர்சனத்தின் மூலமாகவும் என்னுடைய பண வருவாய்க்கான ஒவ்வொரு திறப்பையும் நானே மூடிக் கொண்டிருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் பற்றி என் சினிமா நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவருக்கும் என் அபிப்பிராயம்தான்.  எழுதி விடாதீர்கள் என்று பதற்றத்துடன் சொன்னார்.  ஏன் என்று கேட்டேன். 

எதற்கு மற்றவர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்?

அப்படியா?  இதில் என்ன விரோதம் இருக்கிறது?  எனக்குத் தமிழில் மிகப் பிடித்த இயக்குனர் ஆயிற்றே மணி ரத்னம்?

இருந்தாலும் அதெல்லாம் தெரியாது.  பொன்னியின் செல்வனுக்கு நீங்கள் எழுதியதுதான் நிற்கும்.

சரி, நின்றால் என்ன?

மேலும் மேலும் அவர் ததும்பிக் கொண்டேயிருந்தார்.  நான் வெளிப்படையாகச் சொன்னேன். “என் வயது இப்போது எழுபது.  இந்த வயதில் போய் சினிமாவில் வசனகர்த்தாவாக நுழைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மட்டுமல்லாமல், இருபது ஆண்டுகளுக்கு முன்பே நான் சினிமாவின் கதவை அடைத்தவன்.  இப்போது போயா இதற்கெல்லாம் பயந்து கொண்டு நாம் நினைத்ததை சொல்லாமல் இருக்க வேண்டும்?”

சினிமாவைப் போலவேதான் அரசியலையும் நிராகரித்தேன்.  நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்.  என் சின்ன நைனா ராகவன் பொன்மலையின் திமுக செயலாளராக உருவானார்.  திருச்சி அன்பில் தர்மலிங்கத்தின் வலது கரமாக உயர்ந்தார்.  நன்னிலம் நடராசன் குடும்ப நண்பர்.  நானோ இதையெல்லாம் நிராகரித்து சம்ஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்தேன்.  அதன் பிறகும் –  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் – திமுக தலைவரிடமிருந்து நட்புக்கரம் நீண்ட போதும் சத்தமில்லாமல் பதுங்கி விட்டேன். 

காரணம், ”என்னுடைய சக்தி, புத்தி எல்லாமும் இலக்கியம் ஒன்றிலே மட்டும்தான் குவிய வேண்டும், நாம் ஒரு பிறவி எழுத்தாளன்” என்று நான் நம்பினேன்.    

சரி, ஒரு எழுத்தாளனுக்கு ஏன் உலக சினிமா, தத்துவம், மானுடவியல், வரலாறு, சர்வதேச இலக்கியம் எல்லாம் தெரிய வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம்.  சொல்கிறேன். 

அபிலாஷும், நானும் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை ஆல்பெர் கம்யு தன்னுடைய ரெபல் என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.  இன்றைய (கம்யு காலத்திலேயே சொல்கிறார் என்றால் இப்போதைய நிலையை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்!) சமூகம் உற்பத்தியைப் (productivity) பிரதானமாகக் கொண்டிருக்கிறது; அதற்குப் பதிலாக சமூகம் creativityயைத் தன் உந்துவிசையாகக் கொண்டால் இன்றைய சமூக நோய்மைகளிலிருந்து நாம் விடுபடலாம் என்கிறார் கம்யு. 

உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் ஹென்றி பெர்க்ஸன் பற்றிச் சொல்ல வேண்டும், அது வெறுமனே அறிவு சார்ந்த விஷயம் அல்ல என்று குறிப்பிட்டேன் அல்லவா?  அந்த ஹென்றி பெர்க்ஸன்தான் கிரியேட்டிவிட்டியை எப்படி நிகழ்த்துவது என்பதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார்.  அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் அரசியலையும் ஒதுக்கி விடாமல் அவற்றையும் உள்ளடக்கிய ஒரு தீர்வைத் தருகிறார் பெர்க்ஸன். 

அதற்கான முதல் படி என்ன?  கல்கி போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களை அவர்களுக்கான இடத்திலேயே வைத்திருப்பது.  நிராகரிப்பது என்று நான் சொல்லவில்லை.  எந்த சமூகமும் தனது ஜனரஞ்சகத்தன்மையை விட்டுக் கொடுக்க முடியாது.  எல்லோராலும் நகுலனைப் படிக்க முடியாது.  ஆனால் கல்கியே ஒட்டு மொத்த சமூகத்தின் கலாச்சார அடையாளமாக மாற முடியாது.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக க.நா.சு., புதுமைப்பித்தன் காலத்திலிருந்து இன்று வரை கல்கிதான் தமிழின் கலாச்சார அடையாளமாக இருந்து வருகிறார்.  இதைத்தான் மாற்ற வேண்டும் என்கிறேன்.  மாறாத வரை ஆல்பெர் கம்யு தன் ரெபல் நூலில் சொன்னபடி சமூகம் உற்பத்தி என்ற விஷயத்தைத்தான் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்டிருக்கும்.  அங்கே கிரியேட்டிவிட்டி என்பது நிகழவே நிகழாது.  நிகழாவிட்டால் அந்த சமூகம் தமிழ்ச் சமூகம் மாதிரிதான் இருக்கும்.