மீள் பிரசுரம்
தி சண்டே இந்தியன்
அக்டோபர் 30, 2011
பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின. அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம். காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்? “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.” இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, “அவர்கள் அனுபவிக்க நினைத்தது, ரத்தமும் சதையுமாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த ஜமீலாவுடன் அல்ல; தொலைக்காட்சியில் தெரியும் ஜமீலாவின் நிழலுடன்” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், ஜமீலா அனுபவரீதியாக உணர்ந்து கூறியதைத்தான் ஃபிரான்ஸைச் சேர்ந்த பிரபலமான பின்நவீனத்துவ சிந்தனாவாதியான ஜான் பொத்ரியார் (Jean Baudrillard) தன்னுடைய Simulacra and Simulation என்ற நூலில் Hyperreality என்ற கருத்தாக்கமாக முன்வைக்கிறார். சுருக்கமாகக் கூறினால், எதார்த்தத்துக்குப் பதிலாக, அதன் இடத்தை பிம்பங்கள் எடுத்துக் கொள்வதே ஹைப்பர் ரியாலிட்டி.
தமிழ்க் கலாச்சாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளில் பிரதானமாக இருப்பது சினிமா என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அந்த சினிமாதான் தமிழர்களுக்கான பிம்பங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிம்பங்களில் மிக முக்கியமானவர் சில்க் ஸ்மிதா (1960-96). ஆந்திராவின் ஏழ்மையான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வசதியில்லை. அதனால் மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, ஆந்திராவிலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்து, கோடம்பாக்கத்தின் சினிமா ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வயது 16. இதேபோல், கிராமத்தில் சிறுவயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, அது தோல்வியில் முடிந்து, பிறகு சினிமாவில் சேர்ந்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ராக்கி, ஜெயா பாதுரி. இதை இங்கே குறிப்பிடக் காரணம், அந்தக் காலகட்டத்தில் பல நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.
ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் எதிரே இருந்த மாவு மில்லில் வேலை செய்துகொண்டிருந்த விஜயா, நடிகர் வினு சக்ரவர்த்தியின் பார்வையில் பட விஜயாவின் வாழ்க்கையில் அதிரடித் திருப்பம் ஏற்படுகிறது. வண்டிச் சக்கரம் என்ற படத்தில் விஜயா சாராயம் விற்கும் பெண். பெயர் சிலுக்கு. பிறகு அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடுகிறது.
அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருக்கும்போது தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று இன்றளவும் நம்புகிறவர்கள் உண்டு. புகழின் உச்சாணியில் இருந்த சிலுக்குவின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தபோது அந்த சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட யாரும் இல்லை என்பது இன்னொரு துயரமான விசித்திரம். இதிலும் பல நடிகைகளின் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. பர்வீன் பாபி, இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை. பாலிவுட்டின் செக்ஸ் ஸிம்பலாகக் கருதப்பட்டவர். தத்துவ ஞானி யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் சிநேகிதி. என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலுக்கு டெபொனேர் பத்திரிகையில் வெளிவந்த பர்வீன் பாபியின் ஒரு பேட்டிதான் அடிப்படையாக இருந்தது. அந்தப் பேட்டி வந்த ஆண்டு 1972. அப்படிப்பட்ட பர்வீன் பாபி 2005-இல் இறந்தபோது அவரது சடலமும் Unclaimed body (Token No. 62) -ஆகத்தான் கிடந்தது. மேலும், சிலுக்கு பிரபலமான பிறகு தன் சொந்த பந்தங்கள் யாரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை. அவருடைய மூத்த சகோதரர், சிலுக்கு சாகும்போதுகூட லாரி டிரைவராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்க் ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில் இன்றளவுக்கும் வேறு யாரும் இல்லை. ஒருமுறை இந்திரா காந்தி “யார் இந்த சில்க்?” என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது. இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக்கூடத் தொட முடியவில்லை. அன்றைய கதாநாயக நடிகர்கள்கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள். 17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க். இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்தால், தமிழ்ச் சமூகத்தை மிகச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும்.
ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அங்கே முக்கால்வாசிப் பெண்கள் சில்க் ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள். அவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு மாநிலம் தனது கனவுக் கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?
உலகில் பாலியல் வறட்சி மிகுந்த பிரதேசங்களில் தமிழ்நாடு முன்னணியில் வரும் என்று நினைக்கிறேன். என் வாசகர் ஒருவர் இருந்தார். வயது 60. அவர் நீண்ட நாட்களாக யோசித்து, தயங்கி, பிறகு சற்றே துணிச்சல் பெற்று ஒருநாள் தன் மனைவி தனியாக இருக்கும்போது முத்தமிட்டார். உடனே அந்தப் பெண்மணியும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். “உங்கள் புத்தகங்களைப் படித்ததால் எனக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்” என்று பிறகு அவர் என்னிடம் வருத்தப்பட்டார்.
அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள் கிடையாது. அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு. அப்படி ஒரு சமயத்தில் ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க். முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சுவரிலும், பக்கத்திலிருந்த மரக் கிளைகளிலும் பல ஆண் உருவங்கள். இதை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் necrophilia செயலுக்கு ஆட்பட்டதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு பேச்சு உண்டு.
ஒரு பிரபலமான நடிகை பல நாட்கள் கோமாவில் இருந்த போது, அந்த மருத்துவமனையின் வார்ட்பாயிலிருந்து மூத்த டாக்டர் வரை அந்த நடிகையின் ஜனனேந்திரியத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்கள் என்று அங்கே பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
ஹைப்பர்ரியாலிட்டி என்பது எதார்த்தம் அல்ல; ஆனால் எதார்த்தத்திலிருந்து முழுதும் அந்நியமானதும் அல்ல. அதே சமயம், அதில் எதார்த்தத்தின் சாயலும் உண்டு. Hallucinatory resemblance என்கிறார் பொத்ரியார். தமிழ்நாட்டை சுமார் 20 ஆண்டுகள் இந்த மாயத்தன்மையினால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கதையை ஆராய்ந்தால் ஒருவேளை அது தமிழர்களின் கதையையே சொல்லக்கூடும்.
***