ஹிந்து மதம் (2)

இந்து மத எதிர்ப்பும், இந்துத்துவ வெறியும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன. இதிலிருந்து நோகாமல் தத்துவம், கலை, பண்பாடு போன்ற உயர்ந்தவற்றை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது?ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கும்போது அது மதத்தை பாதிக்கிறது எனும்போதே மதம் ஜாதிகளை காக்கிறது என்றுதான் ஆகிறது. நாங்கள் இந்துக்களாக இருக்கவே விரும்பவில்லை. அது எங்களை ஜாதியை சொல்லி இழிவு செய்கிறது என்று ஒரு சாரார் புகார் எழுப்பும்போது அந்த குறைகளை கேட்க, கலைய இந்துமத அமைப்பிற்குள் என்ன ஏற்பாடு உள்ளது. அது சொல்கிற தீர்வு உனக்கு உன் பகுதியில் நீ கொண்டாடதக்க வழிமுறைகளை உருவாக்கிக் கொள் என்பது மட்டுமே.

ஒரு ஆச்சாரமான ஆலயத்தில், தன்னை தலித் என உணரும் ஒரு இந்து என்ன வகையான வழிபாட்டை செய்ய முடியும்? போலவே பெரியபாளையம் அம்மன் கிடாவெட்டில் ஏன் பிராமணர்கள் பங்களிப்பு இல்லை. இப்படியெல்லாம் நாம் கடும் வேறுபாடுகளை பேணிக் கொண்டு எப்படி மத துவேஷம் இல்லாமல் இருக்க முடியும்.

ஜெயமோகன் ஒரு அணியை திரட்ட முயல்கிறார். ஆனால், மேலோட்டமான எந்த முயற்சியும் ஒரு பழங்கால மதத்தை காக்க போதுமானதில்லை. நேர்மையான, பலமான, அன்புமிக்க ஒரு வழி, முற்போக்காளர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஒரு தூய அரசியல்… இவை தவிர இந்துமதத்தை காக்க வழி எதுவும் இல்லை சாரு.

செல்வகுமார்

டியர் செல்வா,

நம் நண்பர்கள் வட்டத்திலேயே நீங்கள்தான் ஓரளவு உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக யோசிக்கக் கூடியவர் என்பது என்பதை அவதானித்திருக்கிறேன்.

நான் கடந்த நாலைந்து ஆண்டுகளாக
நாட்டு நடப்பு தெரியாமல் குகை மனிதன் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதைய சமூக சீர்திருத்த நடவடிக்கைகளால் ஒரு தலித்தே குருக்களாகவும் ஆக முடியும் என்பதை அறிகிறேன். சென்ற மாதம் கூட ஒரு அரசு விளம்பரம் பார்த்தேன். பதினோரு மாதங்களில் ஒரு சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் இருக்கிறதாம். அதில் தேர்வு அடைந்து விட்டால் குருக்களாக ஆகி விடலாம் என்று அதில் கண்டிருந்தது. ஆஹா, ஆஹா, உண்மையிலேயே ஹிந்து மதத்துக்கு விடிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்த தருணம் அது. கிட்டத்தட்ட ஒரு ஆட்டோ ஓட்டும் பயிற்சிக் காலத்தை விட சற்றே அதிகம்.

ஆனாலும் இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு தலித் விடுதலை சாத்தியமாகி விடவில்லை. அது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.

மேலும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு பழமையான மதத்தை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த சிலைகளை உடைத்து அந்தப்புரத்துப் படிக்கட்டுகளாகவும், சொர்ண விக்ரஹங்களை உருக்கி அந்தப்புர மகளிரின் ஒட்டியாணங்களாகவும் மாற்றிய சுல்தான்களின் காலத்திலேயே ஹிந்து மதம் அழியவில்லை. தஞ்சாவூரில் இருக்கும் என் அன்னை பங்காரு காமாட்சியின் கதையை நான் எக்ஸைலில் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கும்.

அசோகர் காலத்திலும் ஹிந்து மதம் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்டது. அப்போதைய நூல்கள அதை சனாதன மதம் எனவும் பிராமண மதம் எனவும் குறிப்பிடுகின்றன.

நீங்கள் சொல்வது போன்ற நேர்மையான, பலமான, அன்புமிக்க ஒரு வழி, முற்போக்காளர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் தூய அரசியல் எல்லாம் எப்போதுமே நடக்க சாத்தியம் இல்லை. பதஞ்சலியும் ஆதி சங்கரரும் அமைத்த அடித்தளம் இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் காணும். பதஞ்சலி யோகம். சங்கரர் தத்துவம். மற்றபடி ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கு அற்ப மானிடர்கள் தேவையில்லை. விவேகானந்தர் அளவுக்குப் பிரசித்தமாக இல்லாவிட்டாலும் இப்போதும் ரமணர், ராமகிருஷ்ணர் அளவுக்கு ஞானம் அடைந்த மகாத்மாக்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியமும் இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் தொடரும்.

ஒரு ஹிந்துத்துவர் என்னிடம் ஜெயமோகன் பற்றிக் குறிப்பிடும்போது அவரை நக்ஸலைட் என்று சொன்னார். அப்படியானால் அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். ஜெயமோகன் அணி திரட்ட முயல்கிறாரா? அதெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை. இங்கே ஜெயமோகன், எஸ்.ரா. போன்றவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆனால்தான் இலக்கியத்துக்கு நல்லது. அது ஒருபோதும் நடக்காது. மேலும், எத்தனை அணி திரட்டி என்ன பயன்? பணத் தேவைக்கு சினிமாவுக்குத்தானே எழுத வேண்டியிருக்கிறது? அணி திரட்டினால் அதிக பட்சம் பதிப்பகம் நடத்தலாம். நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் சிக்கினால் புக்கர், நோபல் என்று நகரலாம். அவ்வளவுதான். தமிழ்ச் சமூகம் இது பற்றியெல்லாம் கவலையே படாது. தப்பித் தவறி நோபலே கிடைத்து விட்டாலும், சிபாரிசு செய்து வாங்கினதாக எழுதுவார்கள். தமிழ்ச் சமூகத்துக்குத் தேவையானது அடுத்த பொன்னியின் செல்வன். அவ்வளவுதான். அதை மணி ரத்னமோ அல்லது மணியைத் தொடர்ந்து வருபவர்களோ தருவார்கள்…

சாரு