ஆவணப்படம்

எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைக் குறித்து நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் த அவ்ட்ஸைடர் படம் பற்றியும் அவ்வப்போது எழுதி வருகிறேன். அந்தப் படம் எடுக்கப்படும் கலாச்சார, அரசியல் பின்னணி பற்றியும் தொடர்ந்து நான் தினமும் எழுதி வருகிறேன். ஏன் சீலே? அப்படி ஒரு போராட்ட நிலம் உலகில் எங்கேயும் இருந்தது இல்லை. அப்படி ஒரு கலாச்சார சுரணை உணர்வு கொண்ட மனிதர்கள் உலகில் எங்கேயும் இல்லை. எத்தனை கொடுமையான வறுமையிலும் தன் சுய மரியாதையையும் அறத்தையும் இழக்காத சமூகம் உலகில் எங்கேயும் இல்லை.

ஏன் தாய்லாந்து?

இலக்கியத்தின் பயன் மேன்மையான மனிதர்களை உருவாக்குவது. ஆனால் இலக்கியத்தின் நிழல் கூடப் படிந்திராத தாய்லாந்து மக்கள் நாம் புராணங்களில் படிக்கும் திரேதா யுக மனிதர்களைப் போல் வாழ்கிறார்கள். எழுதப் படிக்கக் கூடத் தெரியாத கிராமத்து மக்கள் குழந்தைகளை விட வெள்ளந்தியாக இருக்கிறார்கள். டிப்ஸ் கொடுத்தால் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். இத்தனைக்கும் தாய்லாந்து முழுக்கவுமே யாருக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியவில்லை. ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை தெரியவில்லை. இத்தனைக்கும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி வாழும் தேசம். சைகை அல்லது கூகிள் மொழிபெயர்ப்பு மூலம்தான் பரிவர்த்தனை நடக்கிறது.

பாங்காக், புக்கட் போன்ற பெருநகரங்களை இதில் சேர்க்கக் கூடாது. அது ஒரு தனி உலகம். நான் சிற்றூர்களையும் கிராமங்களையும் சொல்கிறேன். அதாவது, தாய்லாந்தின் நான்கு நகரங்களையும் தவிர்த்து விட்டால், தாய்லாந்து பூலோக சொர்க்கம். அந்த நகரங்களில் கூட நாம் கனவிலும் நினைக்க முடியாத அறம் பேணப்படுகிறது. ஒரு உதாரணம். ஒருத்தன் ஒரு பாலியல் தொழிலாளியிடம் போனான். புக்கட். ஒரு தடவைக்கு ஆயிரம் பாட். முடிந்தது. பேரழகி. இன்னொரு முறை வேண்டும் என்றான். ஐநூறு என்றாள். சரி என்று ஐநூறை அவள் கையில் கொடுத்தான். வேலைக்கு முன்பே பணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஆசை இருந்த அளவுக்கு உடலில் வலு இல்லை. அவனால் இயலவில்லை. சரி, நீ கிளம்பு என்றான். அவள் அவன் கொடுத்த ஐநூறைத் திருப்பிக் கொடுத்து விட்டாள். நான் இனாம் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள். இதுபோல் உலகில் வேறெங்கும் நடக்க வாய்ப்பு இல்லை.

அதனால்தான் தாய்லாந்து பூலோக சொர்க்கம். எந்த எதேச்சாதிகார சக்தியாலும் தாய்லாந்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது இருந்த அரசர் தன் மக்களைத் தன் குழந்தைகளைப் போல் கவனித்துக் கொண்டார். தாய்லாந்தில் ஐரோப்பியக் காட்டுமிராண்டிகள் கால் வைக்க முடியவில்லை. அதேபோல் தாய்லாந்தும் எந்த நாட்டின் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை.

இன்னமும் ஆச்சரியப்படுகிறேன், நோங்காய் என்ற மாவட்டத் தலைநகர் நம் கடலூரை விடச் சின்ன ஊர். அங்கே ஒரு சிறைச்சாலையைப் பார்த்தோம். அதுதான் எனக்கு உலக அதிசயம். இங்கே என்ன விதமான குற்றவாளிகள் இருக்கக் கூடும் என்றே எங்களுக்குப் புரியவில்லை. கற்பனையே செய்ய முடியவில்லை. குழந்தைகள் என்ன குற்றம் புரிய முடியும்?

இதுதான் த அவ்ட்ஸைடர் ஆவணப்படத்தின் பயணத்துக்கான தேவைகள். 45 நிமிடப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. இன்னும் போஸ்ட் ப்ரடக்‌ஷன் வேலையும் சீலே பயணமும்தான் பாக்கி.

பணம் தண்ணீர் மாதிரி செலவாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை இருபது லட்சம் ஆகியிருக்கலாம். ஒளிப்பதிவாளர்களுக்கே இரண்டு லட்சம் ஆகி விட்டது. பயணச் செலவுதான் பெரும் பணத்தை அள்ளுகிறது.

நிதி உதவி தேவை. பணக்கார நண்பர்கள் எனக்கு யாருமே இல்லை. இருந்த ஒன்றிரண்டு நண்பர்களும் விலகி விட்டார்கள். காரணம் தெரியவில்லை. படத்துக்காகத்தானே கேட்கிறோம் என்று என் சுயமரியாதையை விட்டு இரண்டு நண்பர்களுக்கு போன் போட்டேன். ஒருத்தர் எடுக்கவே இல்லை. ஒருத்தர் தேனொழுகப் பேசினார். அத்தோடு சரி. அதற்குப் பிறகு பேச்சே இல்லை. நானும் விட்டு விட்டேன்.

சீலேவுக்கு இன்னும் வீசா கொடுக்க ஆரம்பிக்கவில்லை. ஜனவரியில் செல்வோம் என நினைக்கிறேன்.

ஆவணப்படம் பற்றிப் பெரிதாக எழுதி எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு விடாதீர்கள் என்று சீனி சொன்னார். அதனாலேயே மௌனமாக இருந்தேன். இப்போது எடிட்டர் லெனினும் நானும் இதுவரையில் எடுத்து, தொகுக்கப்பட்ட இறுதி வடிவத்தைப் பார்த்தோம். உலகத் தரம் என்றார் லெனின். என் கருத்தும் அதுவே.

த அவ்ட்ஸைடர் – எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்களில் உலக அளவிலேயே ஒரு மைல்கல்லாக இருக்கும். அதாவது, எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பற்றி எடுக்கப்பட்ட உலகின் மிகச் சிறந்த ஏழெட்டு படங்களையும் பார்த்து விட்டே இதை எழுதுகிறேன். இரண்டு மூன்று கோடி செலவு செய்திருந்தால் கூட இப்படி வந்திருக்காது. அது போல் தானாகவே அமைந்தது. திட்டமிடவில்லை. ஏதோ ஒரு சக்தி இதை நடத்தி வைக்கிறது.

நோங்காயிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தா போ என்ற சிற்றூருக்கு பைக்கில் செல்கிறோம். சீனியின் பின்னே நான். மனோவின் பின்னே பெரிய ஒரு கேமராவைத் தூக்கிக் கொண்டு ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள். எங்கள் இடது பக்கம் மேக்காங் நதி வந்து கொண்டே இருக்கிறது. சரியாகச் சொன்னால், அதன் போக்குக்கு எதிர்த்திசையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் குறி தா போவுக்கு அருகில் உள்ள புத்தர் கோவில். மழைக்காலம் என்பதால் எதிர்க்காற்று தூக்கிக் கொண்டு போகிறது. சீனி 120 கி.மீ. வேகத்தில் போவது போல் தோன்றுகிறது எனக்கு. எங்கள் பக்கத்தில் வந்து கொண்டிருக்கும் ஒளி கேமராவில் படம் எடுத்துக் கொண்டே வருகிறார். ஸ்கூட்டரின் வேகத்தைப் பார்த்து விட்டு, நான் திரும்பி விடலாம் என்கிறேன். ஐந்து கிலோமீட்டர்தான் வந்திருக்கிறோம், நான் ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில்தான் ஓட்டுகிறேன் என்கிறார் சீனி. வேகத்தை வேக முள்ளில் பார்த்த பிறகுதான் நான் தைரியம் ஆகிறேன்.

மைலாப்பூரில் ராகவனின் ஸ்கூட்டரில் பத்து கி.மீ. வேகத்தில் மட்டுமே போய் பழக்கமானவன் நான். நடந்து செல்பவர்களே எங்களைத் தாண்டிப் போய் விடுவார்கள்.

எப்படியோ முப்பதும் முப்பதும் அறுபது கி.மீ. தூரத்தை ஸ்கூட்டரில் சென்று வந்தேன். மேக்காங் நதிக்கரைப் பயணம்தான் நோக்கம். ஒளியின் கைகள் வெலவெலத்துப் போயிருக்கும்.

நிதி உதவி தேவை. ஒரு மகத்தான வரலாற்றுப் பதிவுக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. ரேஸர் பே மூலம் அனுப்பலாம். அல்லது, என் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்.

Axis Bank Account Number 911010057338057

Name: K. ARIVAZHAGAN

Branch: Radhakrishnan Road, Mylapore, Chennai 4

IFSC Code UTIB0000006