அந்நியன் (15)

கான்ஸெப்ஸியோன் செல்வதற்காக லித்தினும் அவரது ஒளிப்பதிவாளரும் சாந்த்தியாகோவின் எஸ்தாஸியோன் செந்த்ராலிலிருந்து (Estación Central) இரவு பதினோரு மணி ரயிலைப் பிடிக்கிறார்கள்.  இந்த ரயில்  நிலையம் எஃபெல் டவரை உருவாக்கிய குஸ்தாவ் எஃபெல் நிர்மாணித்தது என்பதால் இந்த ரயில் நிலையத்தில் யாருமே இனிமேல் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற அளவில் இது ஒரு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சீலேயில் பினோசெத்தின் ஆட்சியில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது.  யார் நடமாடினாலும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, ஆள் காணாமல் ஆக்கப்படுவார்.  உடல் கூடக் கிடைக்காது.  அதனால் ஊரடங்கு உத்தரவின் போது தெருக்களில் ஒரு ஈ காக்காயைக் கூடப் பார்க்க முடியாது.  ரயில்கள் ஓடும்.  ஆனால் ரயிலில் யாருமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள்.  லித்தினும் உதவியாளரும் காலையில் இளம் மொஸார்ட் ஆஸ்திரியாவின் பேரரசரின் முன்னால் ரகளை பண்ணிக் கொண்டிருந்த போது ரெண்டு துண்டு சாக்லெட் சாப்பிட்டதுதான்.  அதிலிருந்து இந்தப் பதினோரு மணி வரை கொலைப் பட்டினி.  ரயிலில் கேண்டீன் இருக்கிறது.  ஆனால் இருக்கையை விட்டு நகர முடியாது.  ஊரடங்கு உத்தரவு.  குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு மயான அமைதி.  பிறகு அந்தப் பெட்டியில் கண்காணிப்புக்காக இருந்த போலீஸ்காரர்களை கெஞ்சிக் கூத்தாடி கேண்டீனுக்குச் செல்கிறார்கள்.  திரும்பி வந்து பார்க்கும்போது போலீஸ்காரர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் மயான அமைதி.  ஒரு மனித உருவத்தைக் கூட பார்க்க முடியவில்லை.  ஊர்கள் முழுவதுமே நாஜிகளின் ஜெர்மனியைப் போன்ற தோற்றம் தருகின்றன.  500 கிலோ மீட்டர் தூரத்திலும் லித்தினும் உதவியாளரும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை.  மற்ற பயணிகளும் கூட வாயையே திறக்கவில்லை.  ரயிலில் ஒரு சப்தம் இல்லை.  ஊரடங்கு உத்தரவு மனிதர்களுக்கு மட்டும் அல்ல, மற்ற ஜீவராசிகளுக்கும்தான் என்று தோன்றுகிறது லித்தினுக்கு.  எந்த இடத்திலும் ஒரு அசைவு இல்லை.  கடும் குளிர் காலம் என்பதால் இலைகள் கூட அசையவில்லை.  மனித நடமாட்டமே இல்லாத நிலப்பகுதிகளைக் கடந்தபடியே சென்று கொண்டிருக்கிறது ரயில்.  மனிதர்கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரே சாட்சியாக இருந்தது ரயிலோடு கூடவே வந்து கொண்டிருந்த கம்பி வேலிதான்.  நெரூதாவின் கவிதை வரிகள் லித்தினுக்கு ஞாபகம் வருகின்றன.  மற்ற நாடுகளில் ரொட்டியையும் ஆப்பிளையும் அரிசியையும் பார்க்கலாம்; ஆனால் சீலேயில் எங்கு பார்த்தாலும் கம்பி வேலி, கம்பி வேலி, கம்பி வேலிதான். 

சீலேயின் கம்பி வேலி பினோசெத்தின் ஆட்சியின் போது மட்டுமே அமைக்கப்படவில்லை.  முதல் கம்பி வேலி ராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த ஜெனரல் கார்லோஸ் இபான்யேஸின் (Carlos Ibañes) சர்வாதிகார ஆட்சியில் அறிமுகம் ஆனது.  அவர் ஆட்சிக் காலம் 1927 – 1931.  அப்போதுதான் சீலேயின் வடக்கில் உள்ள பிஸாகுவா என்ற இடத்தில் ஒரு வதைமுகாம் உருவாக்கப்பட்டது.  காப்ரியல் கொன்ஸாலஸ் விதேலாவின் சர்வாதிகார ஆட்சியில் (1946 – 1952) பிஸாகுவா வதைமுகாம் கம்யூனிஸ்டுகளையும் இடதுசாரிகளையும் சித்ரவதை செய்யப் பயன்பட்டது.  அப்போது பிஸாகுவாவின் நிர்வாக அதிகாரியாக இருந்து மனிதர்களை வதைக்கும் பணியில் பயிற்சி எடுத்தவர்தான் பிற்காலத்தில் சீலேயின் பிரபலமான சர்வாதிகாரியாக விளங்கிய பினோசெத். 

சீலேயின் அரசியல் வரலாற்றில் படுகொலைகளும் வதைமுகாம்களும் தனி இடத்தைப் பிடித்திருக்கின்றன.  1907இல் ஸாந்த்தா மரியா படுகொலை.  1921இல் ஸான் க்ரிகோரியோ படுகொலை.  இது ஒவ்வொன்றுமே ஒரு நாவலுக்குரிய கதைக் களனைக் கொண்டவை. 

1925 ஜூன் மூன்றாம் தேதி இரவு தாராபாக்கா மாநிலத்தில் உள்ள ஆல்த்தோ ஸான் அந்த்தோனியோ என்ற ஊரில் சில தொழிலாளர்கள் ஒன்று கூடி, மறுநாள் தேசம் பூராவும் நடக்க இருந்த வேலை நிறுத்தத்தில் தாங்களும் கலந்து கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே அந்தத் தாராபாக்கா மாநிலத்தில் இருந்த நைட்ரேட் தொழிற்சாலைகளில் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது.  சீலேயின் தேசிய வருமானத்தில் பாதி இந்த நைட்ரேட் தொழிற்சாலைகளிலிருந்துதான் கிடைத்துக் கொண்டிருந்தது என்றாலும் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது.  வேலை நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.  தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி கிடந்தன.  ஸ்பெய்னைச் சேர்ந்த முதலாளி லூயிஸ் கோமஸ் ராணுவத்தின் உதவியுடன் வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டார். 

இந்தப் பின்னணியில்தான் ஆல்த்தோ ஸான் அந்த்தோனியோவில் நடந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கூட்டத்தை வன்முறையால் கலைக்க முயன்றார்கள் போலீஸார்.  அப்போது நடந்த கைகலப்பில் இரண்டு போலீஸார் உயிரிழந்தனர்.

அந்தச் சமயத்தில் தொழிலாளர்களிடையே பிரபலமாக இருந்தார் கார்லோஸ் கார்ரிதோ (Carlos Garrido) என்ற தொழிலாளர் தலைவர்.  ”வன்முறையை வன்முறையால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் நாம் காலம் காலமாக சுரண்டப்பட்டுக் கொண்டேதான் இருப்போம்.  நம்முடைய வார்த்தைகள் ஒருபோதும் முதலாளிகளின் செவிகளை எட்டாது.  அவர்களிடம் போலீஸும் ராணுவமும் இருக்கிறது.  அதைக் கொண்டு அவர்கள் நம்மை நசுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.  நாமும் திருப்பி அடிப்போம்.  இப்போது இரண்டு போலீஸ்கார்ர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.  இன்னும் பல ஆதிக்கவாதிகளை நாம் ரத்தம் சிந்த வைப்போம்.”

கார்லோஸ் காரிதோவின் இப்படிப்பட்ட ஆவேசமான பேச்சுக்கள் இளைஞர்கள் பலரையும் கவர்ந்தன.  கார்லோஸின் லெனின் தொப்பியும் சிவப்புச் சட்டையும் அவரை ஒரு புரட்சி வீரனாகக் காட்டியது.  தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு விடிவெள்ளி கிடைத்து விட்டதாகவே அவர்கள் நம்பினார்கள்.  ஆனால் இரண்டே நாட்களில் தொழிலாளர்களின் நம்பிக்கை பொய்த்தது.

1925 ஜூன் 5 அன்று லா கொருன்யா என்ற ஊரில் கற்பனைக்கும் எட்டாத வகையில் ராணுவத்தினரால் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டது.  நிராயுதபாணிகளாக கோஷம் போட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  துப்பாக்கிச் சூட்டில் – ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பல நூறு பேர் கொல்லப்பட்டார்கள். பழிக்குப் பழியாக கார்லோஸ் கார்ரிதோ நைட்ரேட் தொழிற்சாலையின் ஸ்பானிய முதலாளியான லூயிஸ் கோமஸைக் கொன்றார்.  

அதைத் தொடர்ந்து அதிகப்படியான ராணுவம் வரவழைக்கப்பட்டது.  மீண்டும் தொழிலாளர் குடும்பங்கள் கொல்லப்பட்டன.  அதற்கும் மேல் கார்லோஸினால் தன்னுடைய வன்முறைப் போராட்டத்தை நீட்டிக்க முடியவில்லை.  ராணுவத்துக்குத் தூது அனுப்பினார்.  ”வேலைநிறுத்தத்தை நிறுத்தி விடுகிறோம், ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.”  கார்லோஸின் கோரிக்கை ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்களின் குடும்பங்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிக் கொண்டே இருந்தன. 

ஜூன் ஐந்தாம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது.  இத்தனை கலவரத்துக்கும் நானே காரணம், தொழிலாளர்களை விட்டு விடுங்கள் என்று சொல்லி சரணடைந்த கார்லோஸ் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டார். வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்ட அத்தனை தொழிலாளர்களும் அன்று இரவே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அனைத்தும் பெரும் பள்ளத்தில் போட்டு மூடப்பட்டன.     

இப்படியாக முடிவுக்கு வந்த லா கொருன்யா கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல்.  தப்பிச் சென்ற தொழிலாளர்களும் பிடித்து வரப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். 

சீலேயின் வடக்கு எல்லை அரிக்கா மாநிலம்.  அதற்கு மேலே பெரூ.  அரிக்கா மாநிலத்துக்குக் கீழே உள்ளது தரப்பக்கா.  இந்தத் தாராபாக்கா மாநிலத்திலிருந்துதான் பாப்லோ நெரூதா செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.  இந்தத் தாராபாக்கா மாநிலத்தில் இருப்பதுதான் லா கொருன்யா. 

ஜூன் மத்தியில் சீலே அதிபர் தாராபாக்கா மாநிலத்தை ராணுவத்தைக் கொண்டு முற்றுகையிட்டார்.  அதாவது, தன் சொந்த நாட்டையே முற்றுகையிட்டது சீலே ராணுவம். கேட்டதற்கு தாராபாக்காவை சுத்திகரிக்கப் போகிறேன் என்றார் அதிபர்.

படுகொலைகள் என்ற தலைப்பில் நெரூதா பல நெடுங்கவிதைகளை எழுதியிருக்கிறார்.  அதில் ஒரு பகுதி இது:

They’re tiny captains,

my nephews, my children,

and when they pour the ingots

toward the seas, wipe

their brows and return shuddering

to the uttermost chill,

the great serpent eats them up,

reduces them, crushes them,

covers them with malignant spittle,

casts them out to the roads,

murders them with police,

sets them to rot in Pisagua,

imprisons them, spits on them,

buys a trecherous president

who insults and persecutes them,

kills them with hunger on the plains

of the sandy immensity.

And on the infernal slopes

there’s cross after twisted cross,

the only kindling scattered

by the tree of mining.

மற்றொரு பகுதி

Meanwhile the Indians fall

into the sugared depths of the

harbors and are buried in the

morning mists;

a corpse rolls, a thing without

name, a discarded number,

a bunch of rotten fruit

thrown on the garbage heap

***

they were buried in darkness

or burned at night in silence,

heaped in mine shafts,

or their bones spit into the sea:

. . .

their executed hearts:

the Chileans smile:

the pampas valiant:

the captains of silence.

ஏன் நான் திரும்பத் திரும்ப சீலே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்?  காரணம், வரலாற்றின் மணற்படுகைகளிலே மறைந்து போன நமது ஞாபகங்களை இப்படியாவது மீட்டெடுக்க முடியுமா என்ற என் சிறு முயற்சிதான் இந்தப் பயணங்களும், இந்த ஆவணப் படமும், இந்த ஆவணப் படத்தை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற இந்தக் கட்டுரைத் தொடரும் ஆகும்.  ஞாபகங்களை மீட்டெடுத்தல் என்பது துயரங்களை மீண்டும் தோளில் போட்டுக் கொண்டு சோகப் பாடல்களைப் பாடுவதல்ல.  வரலாற்றில் தொலைந்து போன ஞாபகங்களை மீண்டும் எழுதிப் பார்த்தல் என்பது ஒருவகை catharsis.  தூய்மைப்படுத்திக் கொள்ளுதல்.  வரலாற்றுத் துயரங்களை கலையின் மூலம் சொஸ்தப்படுத்திக் கொள்ளுதல்.  விக்தர் ஹாரா கொல்லப்பட்ட ஸ்டேடியத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த போது நான் விட்ட கண்ணீர்தான் catharsis. 

டாக்டர் அயெந்தே வசித்த, தற்கொலை செய்து கொண்ட மொனேதா அரண்மனை

இன்னொரு உதாரணமாக, சீலே அதிபர் தாராபாக்காவில் தன் ராணுவத்தைக் கொண்டு முற்றுகையிட்ட போது எல் நாசியொனால் (El Nacional) என்ற பத்திரிகை இப்படி எழுதியது:

”கிரிமினல்களான கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கு சீலேயில் ஃபாஸிஸம்தான் வர வேண்டும்.  ஃபாஸிஸத்தால் மட்டுமே கம்யூனிஸத்தை ஒழிக்க முடியும்.  இத்தாலியில் ஃபாஸிஸத்தால்தான் அமைதி நிலவுகிறது.  ஃபாஸிஸமே வருக, உன்னை சீலே வரவேற்கிறது.”

இவர்கள் போலீஸார். போலீஸ் கூட்டம் என்றாலே இது ஒரு பல்கலைக்கழகம்தான் என்று பொருள். அமைதியாகவே இருந்தாலும் உயர்நிலைக் கல்விக்கூடம் என்றால் அங்கே ஒரு பெரிய போலீஸ் கூட்டம் நிற்பதைக் காணலாம். இடம் ஸாந்த்தியாகோ தெ சீலே.

அதிபர் அலெஸாந்த்ரி தொழிலாளர்களைப் பார்த்து மிரட்டினார்.

“நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகளை இத்தோடு மறந்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் அரசாங்கம் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்காது.   சமூக ஒழுங்கைக் குலைக்கும் உங்களின் எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்காது.  புதிய சட்டத்தின் மூலம் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.”

கிட்டத்தட்ட பிச்சைக்காரர்களின் நிலையில் தொழிலாளர்களைத் தள்ளியது அரசு. 

97 ஆண்டுகளுக்கு முன்னால் சீலேயின் தேசியப் பத்திரிகை எழுதிய தலையங்கத்தையும், அப்போதைய சீலே அதிபர் பேசிய பேச்சையும் இப்போது நினைவு கூருவோம்.  ஏனென்றால், இன்றைய இந்தியாவிலும் இத்தகைய போக்குகள்தான் வளர்ந்து கொண்டு வருகின்றன என்பதை நாம் சீலேயின் வரலாற்று ஞாபகத்தை மீட்டெடுப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.  அப்படி மீட்டெடுப்பதுதான் இந்தியாவில் ஒவ்வொரு புத்திஜீவியின் கடமையாகவும் இருக்க வேண்டும்.  ஏனென்றால், மறதி என்பதை அரசு தன்னுடைய சர்வ அதிகாரத்துக்கான யுக்தியாக்க் கையாளுகிறது.  மக்களின் மறதியின் மூலமாக மட்டுமே அரசு எந்திரம் தன்னைத் திரும்பத் திரும்ப வலுப்படுத்திக் கொள்கிறது.  மக்களின் மறதியின் மூலமாக மட்டுமே அது மக்களை தூக்கத்தில் நடப்பவர்களைப் போல் இயங்க வைக்கிறது.  பினோசெத்தின் ஆட்சியில் இளைஞர்களால் நீளமான முடி கூட வைத்துக் கொள்ள முடியவில்லை.  நீளமுடி வைத்திருந்தவர்களையெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி ராணுவம் பிடித்துக் கொண்டு போனது.  பிடித்துக் கொண்டு போனால் அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு அவர்களின் உடல் கூடக் கிடைத்ததில்லை.  அப்படி ஆள் பிடிக்கும் ராணுவ வண்டிகளில் நம்பர் ப்ளேட் இருக்காது.  பினோசெத் காலத்தில் நம்பர் ப்ளேட் இல்லாத கார்களை யாராவது தன் வீட்டுக்கு முன்னால் பார்த்தால் அந்த வீடு மரண வீடு போல் ஆகி விடும்.  அதிலும் அம்மாதிரி கார்களில் வருபவர்கள் உடனடியாக அந்த வீட்டுக்குள் வந்து விட மாட்டார்கள்.  தொடர்ச்சியாக மூன்று நாட்களாவது – இரவும் பகலும் – குறிப்பிட்ட வீட்டின் முன்னாலேயே சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருப்பார்கள்.  அந்த வீட்டுக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.  மூன்றாம் நாள் வந்து அந்த வீட்டின் தந்தையையோ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளையையோ அழைத்துக் கொண்டு போவார்கள்.  அதோடு அந்த மனிதரைப் பற்றிய அத்தனை அடையாளங்களும் அழிந்து போகும்.  உடல் கூடத் திரும்பாது.  எங்கே போனார் என்பதற்கான எந்த சாட்சியமும் இருக்காது.  நம்பர் ப்ளேட் இல்லாத கார் மட்டும் அந்தத் தெருவின் இன்னொரு வீட்டின் முன்னே போய் நிற்கும்.