சூஃபித்துவமும் எழுத்தும்…

பாரசீகக் கவிகள் ஹஃபீஸ், ரூமி மற்றும் இந்தியக் கவி மீர்ஸா காலிப் போன்றவர்களின் கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.  அவற்றைப் படிக்காத, அவற்றைக் கடந்து வராத – அதிலும் குறிப்பாக மீர்ஸா காலிபை அறியாதவர் இருக்க சாத்தியம் இல்லை.  இந்த மூவரின் கவிதைகளிலும் வைன் ஒரு படிமம். அடிக்கடி தென்படும் படிமம்.  இந்த மூவரில் காலிப் மதுவிலேயே தோய்ந்தவர்.  மதுவிலேயே வாழ்ந்தவர்.

என் எழுத்தை நண்பர்கள் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் எழுத்தோடு ஒப்பிடுவது வழக்கம்.  ஆனால் இரண்டு பேருக்கும் அடிப்படையான வேறுபாடு ஒன்று உண்டு.  ப்யூக்கிடம் ஒருவித கைப்பு உணர்வும் அவநம்பிக்கையும் வெளிப்படும்.  ஊரின் மிக அழகான பெண் சிறுகதை அதற்கு உதாரணம்.  ஆனால் என் கதைகள் கொண்டாட்டத்தை மட்டுமே பேசுபவை.  இந்திய மண்ணில் அவநம்பிக்கைக்கு வாய்ப்பே இல்லை.  என் எழுத்தின் அடியோட்டமாக இந்திய ஆன்மீகத்தின் சாரமான தன்மைகளையும் காண முடியும்.  எனக்குத் தெரிந்து முதல் முறையாக செல்வேந்திரன் இதைச் சுட்டிக் காண்பித்து எழுதியிருக்கிறார்.  அவர் எழுதிய இந்த முன்னுரையை நேற்றுதான் படித்தேன்.  நான் எனக்குள் ஒரு சூஃபி போல் உணர்பவன்.  அதனால்தான் திரும்பத் திரும்ப நான் ஒரு ஞானியின் மனநிலையைக் கொண்டவன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். 

ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் ஆவணப்படத்தைச் சொல்லலாம். பூனை உணவுக்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நான் முப்பது லட்சம் ரூபாயை இந்த ஆவணப்படத்துக்காக செலவு செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு பணம் என்பது ஒரு காகிதம். அவ்வளவுதான். ஆவணப்படம் வர வேண்டும். அதுவே முக்கியம். அதுவே குறி.

பொதுவாக என்னைப் பற்றிப் பாராட்டாக எழுதப்படுபவைகளை என் ப்ளாகில் பகிர்வதற்கு எனக்கு மிகுந்த கூச்சமாக இருக்கும்.  ஆனால் நான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறேனோ, இதுவரை யாராலும் எது அடையாளம் காணப்படாமல் இருந்ததோ, அதைக் குறிப்பிட்டு செல்வேந்திரன் எழுதியிருப்பதால் இதைப் பகிர்கிறேன். 

http://selventhiran.blogspot.com/2020/04/blog-post_6.html?m=1