என்னைச் சந்திக்கும் நண்பர்கள் என்னோடு உடன்படாத விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள். ஜெயமோகனின் வாசகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து என்னிடம் அப்துல் கலாம் எவ்வளவு சிறந்த சிந்தனையாளர் என்று வாதிட்டு எனக்குக் கடுமையான நெஞ்சுவலியை உண்டாக்கி விட்டார். இரண்டு மணி நேரம் வலியால் துடித்தேன். அந்த வலியில் நான் இறந்தும் போக வாய்ப்பு இருக்கிறது. தர்மு சிவராமு மாதிரி வெளியே போடா நாயே என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பண்ணை வீடு என்னோடு வாதிட்ட நண்பரின் நண்பருடையது. அவர்களின் இடம். என்னோடு இருந்த ஆடிட்டர் ஸ்ரீதரோ ஒரு தேர்ந்தெடுத்த சோப்ளாங்கி. சீனியாக இருந்திருந்தால் அங்கேயே அந்தப் பையனுக்கு ஒரு அறை கொடுத்து அனுப்பியிருப்பார்.
அதேபோல் தாய்லாந்தில் ஒரு முறை ஒரு நண்பரோடு இப்படித்தான் ஒரு லௌகீக விஷயத்தில் வாய்ச் சண்டை வந்து நாற்காலிகளை எடுத்துப் போட்டு உடைத்து விட்டேன். இப்போது அப்படிச் செய்தால் எனக்கு உயிராபத்து ஏற்படும்.
நண்பர்களே, நான் யாரையும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. என்னோடு விவாதிக்காதீர்கள். விவாதம் செய்ய உங்களுக்குத் தகுதி இல்லை. விவாதம் செய்ய வேண்டுமானால் நான் முன்பு எழுதியிருந்த புத்தகங்களையெல்லாம் படித்து விட்டு வாருங்கள். அதற்கு உங்களுக்கு ஐம்பது ஆண்டுகள் ஆகும். எனவே, இனிமேல் ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரிதான். நான் சொல்வேன். நீங்கள் கேட்க வேண்டும். அல்லது, விவாதிக்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. சீனி, வினித் ஆகிய நண்பர்கள் என்னோடு விவாதிப்பார்கள். அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னைப் பொருத்தவரை எஸ். சம்பத்தின் இடைவெளி உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று. சீனி அதை ஒரு போலி நாவல் என்று ரெண்டு மணி நேரம் விவாதிப்பார். ஆனால், ஜெயலலிதா புரட்சித் தலைவியா எம்ஜியார் புரட்சித் தலைவரா என்று விவாதித்தால் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். கவனம். அப்படிப்பட்ட நண்பர்கள் நம்மிடையே இல்லை என்றாலும், சில சமயங்களில் மிக நெருங்கிய நண்பர்களே இப்படி ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் நானும் முன்பு போல் இல்லை. தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி விட்டு தூங்கப் போய் விடுகிறேன்.
ஆனால் வைன் அருந்தினால் அப்படி தலையாட்ட முடியவில்லை. சமீபத்தில் அப்படித்தான் ஒரு விவாதத்தில் ஒருவர் மீது இருந்த கோபத்தில் இன்னொருவரை அடித்து விட்டேன். அவர் திருப்பி ஒரே ஒரு அடி அடித்திருந்தாலும் நான் செத்திருப்பேன். அந்த மஹாத்மா அன்று என்னிடம் யேசு போல் நடந்து கொண்டார். சாவு செய்திகள் என்னை எதுவும் செய்யாது என்றாலும், அன்றைய தினம் நான் வைன் அருந்தியிருந்ததால் சாவு செய்தி என்னை மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கி விட்டது. இன்னும் சில காரணங்களும் உண்டு. வெளியே சொல்லக் கூடாது. உதாரணமாக, என்னுடைய வெந்நீர்ப் பாத்திரத்தில் அம்பது நெளிசல்கள். ஒருநாள் தண்ணீரோடு பாத்திரத்தைத் தரையில் அடித்து விட்டேன். காரணம், என்னிடம் “நீ எப்போது பார்த்தாலும் ஃபோனிலேயே இருக்கிறாய்” என்ற வாசகம் சொல்லப்பட்டது. நான் ஃபோன் பேசுவதே இல்லை. நான் பேச விரும்பும் மூன்று நபர்களோடும் வீட்டில் பேச தடை இருப்பதால். ஆக, இப்படிப்பட்ட உளவியல் நெருக்கடிகள் கொடுக்கப்படும் போது ஆவேசம் கிளம்பி விடுகிறது. அந்த ஆவேசத்தை அடக்கித்தான் என் அம்மா ப்ரெய்ன் ஹேமராஜ் வந்து இறந்தார்கள்.
இந்தக் காரணங்களாலேயே என்னோடு மிக நெருக்கமான நண்பர்கள் – எனக்காகத் தன் உயிரையே தரக் கூடிய நண்பர்களோடு மட்டுமே வைன் அருந்துகிறேன். மற்றவர்களோடு அல்ல.
வைன் அருந்தாவிட்டால் என்ன ஆகும்? தினமும் 3000 வார்த்தைகள் எழுதுகிறேன். படிப்பதற்குக் கணக்கே இல்லை. பத்து பூனைகளுக்குப் பீ மூத்திரம் அள்ளி, சாப்பாடு போட்டு அவைகளைக் காபந்து பண்ணுகிறேன். (இந்த வாக்கியத்துக்கு விளக்கம் நூறு பக்கம் வரும்!) அதனால் வைன் அருந்தாமல் இதைச் செய்தால் ஒன்று, மனநோய் விடுதி. அல்லது, ப்ரெய்ன் ஹேமராஜ்.