நான் என்ன மாதிரியான சூழ்நிலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஆயிரம் கட்டுரைகளில், பல கதைகளில் எழுதி எழுதி எழுதி விளக்கி விட்டேன். ஒரு ஐந்து நிமிடம் முன்னாடி ஒரு நண்பர் செல்வாவின் நம்பர் என்ன என்று கேட்டு எனக்கு மெஸேஜ் பண்ணியிருக்கிறார். நம்பர் கேட்ட நண்பரை நம்பித்தான் நான் வெளியூரே போகிறேன். நம்பர் கேட்ட நண்பரால்தான் எனக்குப் பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நம்பர் கேட்ட நண்பருக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அதற்காக என்னை இப்படி மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டுமா? செல்வகுமாரின் நம்பரை வாங்க வேறு மனிதர்களே இல்லையா? நாளை கிளம்ப வேண்டுமானால் இன்று இரவுதான் செல்வாவின் நம்பரைத் தேட வேண்டுமா? அதற்கும் நான்தான் அகப்பட்டேனா? நண்பர்களே, என்னோடு தினமும் பழகிக் கொண்டிருக்கும் நீங்களே இப்படி இருந்தால் நான் எப்படித்தான் உயிர் வாழ்வது? நான் தினமும் 3000 வார்த்தைகள் எழுதுகிறேன் என்று சொன்னால் உங்களுக்குப் புரியவில்லையா? இப்படி நம்பர் அனுப்பும் வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தால் நான் எப்படி எழுதுவது? ஏன், என்னைத் தவிர செல்வாவின் நம்பரை வாங்க உங்களுக்கு ஆளே இல்லையா?
எனக்கு எதிரி வெளியே இல்லை. உள்ளே இருக்கிறான்.
தப்புக்கு மேல் தப்பு பண்ணாதீர்கள். இப்போது உடனடியாக நீங்கள் என்ன செய்வீர்கள் தெரியுமா? எனக்கு ஒரு நீண்ட விளக்கம் எழுதி மன்னிப்பு கேட்பீர்கள். அதை விட என்னை அவமதிக்க முடியாது. இனி இப்படிச் செய்யாதீர்கள். அவ்வளவேதான்.
அது மட்டும் அல்ல. இப்படி நான் எல்லோரையும் திட்டித் திட்டி எழுதி எல்லா நண்பர்களையும் விரட்டி அடிக்கிறேன், அதனால்தான் எனக்கு நோபலோ புக்கரோ கிடைக்க மாட்டேன் என்கிறது என்றார் ஒரு நண்பர். அதாவது, தினமும் யாரையாவது திட்டி எழுதுகிறேன். அது என்னைச் சுற்றி ஒரு நெகட்டிவ் அலையை (வைப்) உருவாக்குகிறது. அதுதான் எனக்கு நல்லது நடப்பதைத் தடுக்கிறது. பாருங்கள், இப்போது இப்படிச் சொன்ன என்னைத் திட்டியே இன்று நீங்கள் எழுதுவீர்கள் என்றார். இதோ எழுதும்படி ஆகி விட்டது, பார்த்தீர்களா?
ஆனால் அவர் சொல்வதுதான் சரி. இன்று நான் வேலை மெனக்கெட்டு முண்டக்கண்ணி அம்மன் கோவிலுக்குப் போய் இனிமேல் யாரைப் பற்றியும் திட்டியோ நெகட்டிவாகவோ எழுத மாட்டேன் என்று சத்தியம் பண்ணி விட்டு வந்திருக்கிறேன். அதனால் உங்களுக்கு என் அன்பு வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன். என்னை நெகட்டிவாக எழுத வைக்காதீர்கள். உண்மையில் இது மன உளைச்சலை மட்டும் அல்ல, எனக்கு நோபல் பரிசு கிடைப்பதையும் தடுக்கிறது. எனவே, எனக்கு நோபல் கிடைப்பதற்குத் தடையாக இருக்காதீர்கள், ப்ளீஸ்.