வாசகர் வட்ட சந்திப்பு இனிதே முடிந்தது. ஏற்காட்டில் கடும் குளிர். முன்னேற்பாட்டுடன் சென்றிருந்ததால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் ஞாயிறு மதிய உணவு முடிந்ததுமே எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஊருக்கு ஓடி விட்டார்கள். இப்போதெல்லாம் பெண்கள் கணவனை எங்கேயும் தனியாக விடுவதே இல்லை என்று தெரிகிறது. திங்கள் கிழமை என்னும் பூதமெல்லாம் அடுத்த பட்சம்தான். மனைவி பூதம்தான் ஆட்களை அடித்து வீழ்த்துவதாகப் பல கணவர்கள் சொல்கிறார்கள். ஒரு இளம் நண்பர் சொன்னார். ஒரு நான்கு நாட்கள் வெளியூர்ப் பயணம் செல்லலாம் என்று ஏழெட்டு நண்பர்கள் திட்டமிட்டார்களாம். ஒரு வீட்டில் கூட மனைவி அனுமதிக்கவில்லை. சொன்ன நண்பரின் வீட்டில் மட்டும் அனுமதி கிடைத்தது. காரணம், அந்த நண்பரின் மனைவி என் வாசகி. ஒருவராகச் செல்ல மனமில்லாமல் இவரும் செல்லவில்லை. நான் ஐந்து நாட்கள் வீட்டில் விடுப்பு எடுத்திருந்தேன். ஆனால் இரண்டாம் நாளே அவந்திகா ஃபோனில் அழ ஆரம்பித்து விட்டாள். வீட்டில்தான் கார்த்திக், அனு, பேரக் குழந்தை, பணிப்பெண்கள் எல்லோரும் இருக்கிறார்களே, இன்னும் என்ன என்று கேட்டேன். எத்தனை பேர் இருந்தாலும் நீ இல்லாவிட்டால் பெரும் துன்பம் என்று அழுகை. (’அறுபது வயதிலும் இத்தனை அன்பா? இது என்னுடைய சுதந்திரத்தை மதிப்பதிலும் இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்? நான் பொய்யே சொல்லாமல் வாழ இயலுமே?’ என்று எண்ணினேன்.)
என்னோடு பழகும் பெண்கள், நாய்கள் மற்றும் பூனைகள் என்ற மூன்று இனத்தவரும் இப்படித்தான் என்னை அன்பு வலையில் சிக்க வைத்துத் திக்குமுக்காட வைக்கிறார்கள். ஏற்கனவே மூச்சு விடுவதில் பிரச்சினை உள்ள எனக்கு இந்த அன்பு வலை மேலும் மூச்சு முட்ட வைக்கிறது. இப்போது கூட பார்க்கில் ஒரு நாய் என் மீது தாவித் தாவி ஏறி அன்பு மழையால் குளிப்பாட்டியது. பக்கத்தில் இருந்த ராகவனை அது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த நாயை இன்றுதான் முதல் முதலாகப் பார்க்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால், எனக்கும் அன்புக்கும் ரொம்ப தூரம். யாரிடத்தும் எனக்கு அன்பு சுரப்பதில்லை. அப்படிப்பட்ட என் மீது இத்தனை அன்பு பாராட்டுகின்றனர், இந்த மூன்று இனத்தினரும். ஆண்கள் பற்றிச் சொல்ல எதுவுமில்லை, அனுபவமும் இல்லை. ஒரே ஒரு முறை – கொரோனா காலத்தில் – வீட்டை விட்டு வெளியிலேயே செல்லாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டிருந்த போது, ராகவன் ஃபோன் செய்து ”கேட்டுக்கு வெளியே தூரத்தில் நின்றே சும்மா உங்களைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறேன், பார்த்து வெகு காலம் ஆகிறது” என்றார். ஆனாலும் நான் பயந்து கொண்டு அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். ஒரு முழு வருடமும் முடிந்த பிறகுதான் பார்த்தேன்.
அவந்திகாவின் அழுத அழுகையினால் நான்காம் நாளே கிளம்பி வந்து விட்டேன். நான் ரயில் பயணம் செய்து நீண்ட காலம் ஆகிறது. ரயில் பயணம் மகா கொடுமை. சேலம் ரயில் நிலையத்தில் மின்படிக்கட்டு இருக்கிறது. ஆனால் வேலை செய்யவில்லை. நல்லவேளை, சுரேஷ் ராஜமாணிக்கம் தன் உதவியாளர் தென்னரசனை அனுப்பியிருந்ததால் இளைஞரான அவர் என் பைகளைத் தூக்கிக் கொண்டார். பைகளையும் தூக்கிக் கொண்டு ஏற வேண்டியிருந்திருந்தால் ரயில் பயணத்தை ரத்து செய்து விட்டு வாடகைக் கார் பிடித்துத்தான் சென்னை வந்திருப்பேன். ஏனென்றால், எனக்கு அப்போது மதுரை ரயில் நிலையச் சம்பவம் ஞாபகம் வந்து விட்ட்து.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சொந்த வேலையாக மதுரை சென்றிருந்தேன். மதுரையில் என் கார்டியன் அருணாசலம். ஆனால் அந்த நேரத்தில் அவர் சென்னை வந்திருந்தார். அதனால் என்னை கவனித்துக் கொள்ளச் சொல்லி இன்னொரு நண்பரிடம் சொல்லியிருந்தார். அவர் எனக்கும் நண்பரே. நெருங்கிய நண்பர். கவனித்துக் கொள்ளக் கூட வேண்டாம். ரயில் நிலையத்தில் என் பையை எடுத்துக் கொண்டால் போதும். நண்பர் வரவில்லை. படிக்கட்டுகளில் பையோடு ஏறி நெஞ்சு வலி வந்து விட்டது. ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் ராணி மங்கம்மாள் சத்திரத்தில்தான் அறை. அதற்கு ஆட்டோக்காரர் நூறு ரூபாய் கேட்டதால் வெறுத்துப் போய் நடந்தே போய் விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய பிழை. இரவு முழுவதும் நெஞ்சு வலி படுத்தி எடுத்து விட்டது. கொஞ்சம் பயந்து கூட போய் விட்டேன். ரயில் நிலையத்துக்கு வர வேண்டிய நண்பருக்கு ஃபோன் செய்தால் அவர் ஃபோனையும் எடுக்கவில்லை என்பதுதான் விசேஷம். இத்தனைக்கும் அருணாசலம் அந்த நண்பரிடம் ”சாரு ஒரு மூன்று வயதுக் குழந்தை மாதிரி, பார்த்துக் கொள்” என்று வேறு சொல்லியிருந்தாராம். தலையைத் தலையை ஆட்டி விட்டு நண்பர் டிமிக்கி கொடுத்து விட்டார். மறுநாள் அவர் வந்த போது ரொம்ப ஜாலியாகப் பேசினார். முதல் நாள் வர முடியாதது பற்றிய எந்த வருத்தமும் வார்த்தையும் அவரிடம் இல்லை. ரொம்ப சகஜமாக எடுத்துக் கொண்டார். வெகுளியான மனிதர் போல.
இந்தக் காரணத்தால்தான் நான் ரயில் பயணங்களை அவ்வளவாக மேற்கொள்வதில்லை. நல்லவேளை. சேலத்தில் தென்னரசனால் தப்பினேன். இருந்தும் என்னால் படியேறுவது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. மூன்று கட்டப் படிக்கட்டுகள். சேலத்தில் ஒரு விமான நிலையம் இருந்தால் வசதியாக இருக்கும்.
இந்த முறை ஏற்காட்டில் சாப்பாடெல்லாம் அமர்க்களம். பழைய சமையல்காரரை மாற்றி விட்டா சுரா.
வெள்ளி இரவு சென்றேன். அன்றைய தினம் காலை ஐந்து மணி வரை உற்சாகமாக இருந்தது உரையாடல். வெளியே தோட்டத்தில் தீ மூட்டி சுற்றி வர அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பத்து பேர் இருப்போம். சனிக்கிழமை இரவு காலை நான்கு மணி வரை ஓடியது உரையாடல். ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்றே நண்பர்கள்தான். உரையாடல் சரியாக அமையாததால் பன்னிரண்டு மணிக்கே போய் தூங்கி விட்டேன். திங்கள் கிழமை இரவு, நானும் சீனியும் மட்டுமே. மீண்டும் காலை நான்கு மணி வரை ஓடியது பேச்சு. இத்தனைக்கும் நான் காலை எட்டு மணிக்கே மலையிலிருந்து கீழே இறங்க வேண்டும். பத்து மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும்.
அன்றைய தினம் மட்டும் எதற்கும் முன்னேற்பாடாக என்னை ஏழு மணிக்கு எழுப்பி விடச் சொல்லி என் தோழியிடம் சொல்லி வைத்திருந்தேன். சரியாக ஏழுக்கு ஃபோன் வந்தது. இல்லாவிட்டால் ரயிலை விட்டிருப்பேன். இதையே ஒரு ஆணிடம் சொல்லியிருந்தால் நடந்திருக்காது.
டிசம்பர் 17, 18 தேதிகளில் கோவையில் என்னைச் சந்திக்கும் நண்பர்கள், வாசகர்கள் நான் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அல்லது கலந்துரையாடலாகப் பேசும்போது சுவாரசியமாகப் பேசுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் ஒரு நல்ல உரையாடல்காரன் இல்லை. என்னைப் பேச வைக்கும் திறன் சீனிக்கு மட்டுமே உண்டு.
பொதுவாக மற்றவர்கள் தங்களுடைய பேச்சில் லயித்துப் பேசும் போது நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறேன் என்பதை அவதானித்தேன். என்னால் யாருடைய பேச்சையும் தொடர்ந்தாற்போல் கேட்க முடியவில்லை. ஏற்காட்டில் ஒரு காஃபி கடையில் நின்ற போது இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒரு இளைஞர் வாயையே மூடாமல் ஆறு நிமிடங்கள் பேசினார். சொல் சுனாமி அடிப்பது போல் இருந்தது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த – எந்த இலக்கியமும் படித்திராத – தென்னரசனே அந்த இளைஞர்கள் நகர்ந்ததும் பகபகவென சிரித்து விட்டார். இலக்கியப் படிப்பு பலரையும் பைத்தியமாக்கி விடுகிறது போலும்.
ஒவ்வொரு வாசகர் வட்ட சந்திப்பிலும் நடப்பது போலவே இந்த சந்திப்பிலும் ஒரு அசம்பாவிதம் நடந்தது. அது பற்றி நான் இதுவரை 500 பக்கங்களாவது எழுதியிருப்பேன். யாருமே கண்டு கொள்வதில்லை. யாரேனும் தனக்காக வாங்கி வைத்திருக்கும் பியரை அவருடைய அனுமதி இன்றி எடுத்துக் குடித்து விடுகிறார்கள். ஒரு பழைய நண்பரும் ஒரு புதிய நண்பரும் இதைச் செய்தார்கள். இப்படி எழுதுவது விருந்தோம்பலுக்கு எதிரானதாகத் தோன்றும். ஆனாலும் நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். சாப்பாடு மட்டும்தான் ஏற்பாடு செய்கிறோம். மற்ற விஷயமெல்லாம் உங்கள் ஏற்பாடாக இருக்க வேண்டும். ஆனால் ஆட்டையாம்பட்டி செந்தில் இதைப் பின்பற்றவே மாட்டேன் என்கிறார். அதனால் இன்னும் இரண்டு சந்திப்புகளுக்கு அவரைத் தடை செய்கிறேன். மூன்றாவது சந்திப்புக்கு அவர் என் அனுமதியின்றியே வரலாம். ஒவ்வொரு சந்திப்புக்கும் அவர் என்னிடம் அனுமதி பெற்ற பிறகுதான் வருகிறார். ஆனாலும் இந்த ஒழுங்கீனம். கூட்டமாக வசிக்கும்போது அடுத்தவருக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சீனி என்ன உங்களுக்கெல்லாம் பியர் சப்ளையரா? என்னைப் பொருத்தவரை குடிப்பது ஒழுங்கீனம் அல்ல; அடுத்தவர் பியரை எடுத்துக் குடிப்பது ஒழுங்கீனம். இல்லாவிட்டால் அனுமதியாவது கேட்டுத் தொலைய வேண்டும். ஏன் செந்தில் பெயரைக் குறிப்பிட்டு இதை எழுதுகிறேன் என்றால், அவர் ஒவ்வொரு சந்திப்பிலும் இதைச் செய்கிறார். உங்களுக்குத் தேவையானதை நீங்களே வாங்கிக் கொண்டு வர உங்களை எது தடுக்கிறது?
அடுத்த பிரச்சினை, தண்ணீர். இதுவும் பியர் மாதிரிதான். ஆனாலும் இது என்னுடைய உயிர்ப் பிரச்சினை. சீனி நம் அனைவருக்காகவும் பதினெட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வாங்கினார். திங்கள் கிழமை பார்க்கிறேன், தண்ணீர் தீர்ந்து விட்டது. பத்துப் பேரும் வயிறு நிரம்ப நிரம்பக் குடித்திருக்கிறார்கள்.
நான் இது பற்றி எத்தனை முறை எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கும். எல்லோரும் வாகனங்களில்தானே வருகிறீர்கள்? தண்ணீரை வாங்கிக் கொண்டு வந்தால் என்ன? எல்லோரும் வாங்கா விட்டாலும் ஒருத்தராவது செய்யலாம்தானே? சுமார் பதினைந்து ஆண்டுகளாக சீனி ஒருத்தரே இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். மற்றவர்கள் கை வீசம்மா கை வீசு! இது எல்லாமே என் எழுத்துக்கு எதிரானது. மற்றவர்களைத் துன்புறுத்தாமல் வாழ வேண்டும் என்பதுதானே என் எழுத்தின் அடிப்படைச் செய்தி? இப்போது எனக்குக் கோவையிலும் இப்படித்தான் நடக்குமோ என்ற பயம் வந்து விட்டது. சரி, நீங்களே சொல்லுங்கள், என் அறையில் நாற்பது லிட்டர் தண்ணீர் வாங்கி வைத்துக் கொள்ளவா?
என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். இரவில் எனக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் வேண்டும். இல்லாவிட்டால் என் நாக்கையே கடித்துக் கொண்டு விடக் கூடிய அளவுக்கு தாகம் என்னைக் கொன்று விடும். அத்தனை வறட்சி. பகலிலும்தான். பகலில் தண்ணீரை வாங்கிக் கொண்டு விடலாம். இரவில் என்ன செய்வது? கேரளத்தில் ஒரு ஓட்டலில் தங்கின போது அந்த மேனேஜர் எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், இரவு பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது. நான் ஓட்டலுக்கு வந்து சேர்ந்ததே பத்தே காலுக்குத்தான். எங்கேயும் கடைகள் தென்படாததால் என் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் நண்பரை நேரில் அழைத்தேன். வந்ததும் அவர் அந்த விடுதி மேலாளரை பலமாக அடித்து விட்டார். ஊழியரும் திடகாத்திரம். அவரும் பதிலுக்குத் தாக்க இருவரும் கொஞ்ச நேரம் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள். எனக்கு தாகம் மறந்து விட்ட்து. நிஜ சண்டை சுவாரசியமாக இருந்தது. சென்னைவாசிகள் சும்மா கத்துவார்களே தவிர காரியத்தில் ஒன்றும் இருக்காது. அவர்கள் திட்டிக் கொள்வதைப் பார்த்தால் அடுத்த நிமிடமே கொலை விழும் என்று இருக்கும். நானும் செம ஆர்வத்தோடு கவனிப்பேன். எவ்வளவு காலம்தான் கொலைகளை சினிமாவிலேயே பார்த்துக் கொண்டிருப்பது? படுபாவிகள், கொஞ்சம் கூட தாய்ப்பாசமே இல்லாமல் தன் தாயின் கற்பு அங்கே சந்தி சிரிப்பதைப் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சப்தம்தான் பலமாக இருக்குமே தவிர கையை உயர்த்த மாட்டார்கள். கேரளம் தேவலாம். எடுத்த எடுப்பில் அடிதான். அப்புறம்தான் பேச்சு. களைத்துப் போகும் அளவுக்குத் தெருவில் புரண்டு சண்டையிட்ட இருவரும் ஒரு கட்டத்தில் சண்டையை நிறுத்தினார்கள். எனக்கு வேறொரு விடுதியில் அறை போட்டார் நண்பர். ஒரு பாட்டில் தண்ணீருக்கு இந்தப் பாடு.
அந்தச் சம்பவம் போல் கேரளத்தில் எனக்குப் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடந்ததால், நானும் ஒரு சொகுசுப் பேர்வழி என்பதால், கேரளம் செல்வதையே நிறுத்தி விட்டேன். தென் கேரளத்தைப் போல் முரட்டுப் பேர்வழிகள் இந்தியாவிலேயே யாரும் இல்லை. மலபார்வாசிகள் விதிவிலக்கு. அன்பான மனிதர்கள்.
கோவையிலும் வந்து என்னைத் தண்ணீர் இல்லாமல் ஆக்கினீர்கள் என்றால் எனக்குக் கெட்ட கோபம் வந்து விடும். இதற்கெல்லாம் நான் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களையோ நான் தங்கியிருக்கும் விடுதியையோ குறை கூற மாட்டேன். சீனிதான் பதினெட்டு ரெண்டு லிட்டர் பாட்டில் வாங்கி வைத்திருந்தாரே? அவ்வளவையும் காலி பண்ணி விட்டால் அவர் என்ன செய்வார்? இந்த ஒரு காரணத்தினால்தான் எனக்கு ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர விடுதிகள் பாந்தமாக இருக்கின்றன. நள்ளிரவு இரண்டு மணிக்குத் தண்ணீர் கேட்டாலும் நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும். எனவே, நான் ஆடம்பரப் பிரியன் என்பதால் நட்சத்திர விடுதிகளில் தங்கப் பிரியப்படவில்லை. தண்ணீர்ப் பிரச்சினைதான் ஒரே காரணம். விஷ்ணுபுரம் வட்டம் இந்த விழா நிகழ்ச்சிகளை பெரிய ஸ்பான்ஸர்கள் யாரும் இல்லாமல் தனிப்பட்டவர்களிடம் நிதியுதவி பெற்று நடத்துவதால் நானும் எளிமையையே கடைப்பிடிக்கலாம் என்று இருக்கிறேன். எனவே எனக்கென்று எதுவுமே தேவைகள் இல்லை. நள்ளிரவில் தாகம் எடுக்கும். அப்போது தண்ணீர் வேண்டும். அது ஒன்றுதான் என் தேவை.
என்னதான் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் சாத்வீகமானவர்கள் என்ற போதிலும் யாராவது விஷ்ணுபுரம் வட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் புகுந்து நீர் ஒரு திருடன், நீர் ஒரு செக்ஸ் ரைட்டர் என்று என்னைப் பார்த்து சொல்லக் கூடும். ஒரு இலக்கிய சந்திப்பில் அப்படி ஒருத்தர் சொல்லப் போக, நான் அவரை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி விட்டேன். அதைத் தொடர்ந்து ஒரே வெட்டுக் குத்து கலவரம் அளவுக்குப் போய் நான் போலீஸ் பாதுகாப்போடு வீடு போய்ச் சேர்ந்தேன். ஒரு வாரம் போலீஸ் பாதுகாப்போடு இருந்தேன். சம்பவம் நடந்தது புத்தக விழாவில். மது கிது எதுவும் இல்லாமல் நடந்தது. என் முகத்துக்கு நேராக எவனாவது என்னை செக்ஸ் ரைட்டர் என்று சொன்னால், நான் என் சுயநிலையை இழந்து விடுவேன். இப்போது கூட ஒரு சக எழுத்தாளர் என்னை கழிசடை என்றும், கோமாளி என்றும் அழைத்து, இந்தக் கழிசடைக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதன் மூலம் அந்த விருது மதிப்பை இழந்து விட்டது என்றும் எழுதியிருந்தார். எழுதினால் எனக்குப் பிரச்சினை இல்லை. நேரில் வந்து என் முகத்துக்கு நேரே சொன்னால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
எனவே என்னோடு நான்கு பௌன்ஸர்களை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். வினித்துக்குப் புஜபலம் ஜாஸ்தி என்றாலும், அவர் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் தூங்குபவர் என்பதால் அவர் உதவியைக் கோர முடியாது. பௌன்ஸராக வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள். உடல் தகுதி: உயரம் பிரச்சினை இல்லை. ஆனால் எடை குறைந்தது 90 கிலோ இருக்க வேண்டும். வயது ஐம்பதுக்குள்.
ஒரு சந்திப்புக்கு இப்படித்தான் இரண்டு பௌன்ஸர்களோடு போயிருந்தேன். ஒரு பொன்ஸர் மூச்சா போகச் சென்றிருந்த போது ஒருவர் என்னைத் தாக்க வந்து விட்டார். அவர் காலில் விழுந்துதான் அடியிலிருந்து தப்பினேன். அடி வாங்கியிருந்தால் செத்திருப்பேன். இன்னொரு பௌன்ஸர் என்னிடமிருந்து பத்து அடி தூரத்தில் இருந்தார். அவர் செய்த பிழை, எனக்கு அருகில் அமர்ந்திருந்த பௌன்ஸர் மூச்சாவுக்குப் போனதுமே இவர் என் அருகில் வந்து அமர்ந்திருக்க வேண்டும்.
நான் எழுதுவதெல்லாம் உங்களுக்கு சும்மா பில்டப் என்று தோன்றும். என் கடந்த கால அனுபவத்தையே எழுதியிருக்கிறேன்.
இல்லாவிட்டால், ஒரு பெண் என் அருகில் இருந்தால் போதும். ஒருத்தரும் கிட்டத்தில் நெருங்க மாட்டார்கள். அவந்திகா வந்தால் ஒரு பெரும் படைக்குச் சமானம். ஆனால் அவள் என்னைப் பற்றிய ஆவணப் படத்தைப் பார்த்தால் என் கதியே அதோ கதி என்பதால் வேறு யாரைக் கேட்பது என்று பார்க்கிறேன். ஆனால் பெண்களால் எந்நேரமும் – நான் உறங்கும் நேரம் தவிர – என் அருகிலேயே இருப்பது சாத்தியம் இல்லை. புவனேஸ்வரி, ஸ்ரீ, ப்ரியா, ஆனந்தி, ரமா சுரேஷ் போன்றவர்களிடம் கேட்கலாம். ஆனால் இவர்களெல்லாம் வீர மங்கைகளா சோப்ளாங்கிகளா என்று தெரியாது. ஒருத்தர் இருந்தால் போதும். அல்லது, ஷிஃப்ட் மாதிரியும் போட்டுக் கொள்ளலாம். பார்ப்போம், இன்னும் நாள் இருக்கிறது…