படித்ததில் பிடித்தது…

நம் வாசகர் வட்டத்தில் பிரவீன் என்ற நண்பர் எழுதியிருந்தது இது:

சாரு,

நான், நண்பர் ப்ரவீன் வெங்கடேஷ் மற்றும் சில நண்பர்கள் வேலை முடித்துக்கொண்டு மாலையில் ஒன்றுகூடி பேசிக்கொள்வோம். பேச்சு என்றால் அதில் அரசியல், மருத்துவம், பொழுதுபோக்கு, இலக்கியம், மக்கள் என பல விஷயங்களை ஆராய்வோம். எங்கள் குழுவில் மூத்தவர், இளைஞர்கள் என்ற எந்த பாகுபாடுமின்றி சந்தோஷமாய் இருக்கும். குழுவில் 50 வயதை கடந்த ராமலிங்கம், முனுசாமி போன்றோரும் உண்டு, 23,25 வயதுடைய நாங்களும் உண்டு. முனுசாமி ஒரு தீவிர கம்யூனியச கொள்கைகளை கொண்டவர். அவரை பார்த்தாலே நாங்கள் ஓடிவிடுவோம்.

ராமலிங்கம் ஒரு சித்த மருத்துவர். அனுபவம் மூலம் கற்று தேர்ந்தவர். சித்த மருத்துவத்திற்கு என எந்த தனிப்பட்ட ஒரு பட்டப்படிப்பையும் படிக்காமல் தன் அனுபவங்கள் மூலம் தேர்ந்தவர். மருத்துவத்துறையில் M.S. படித்தோருடன் சரளமாக மருத்துவத் துறை சம்பந்தமாக பேசக் கூடியவர். இலக்கியங்களிலும் இவர் நாட்டம் கொண்டவர்.

நாங்கள் ஒன்றுகூடி பேசும் இடம் எங்கள் குழுவில் இருக்கும் ஹரிஷ் என்ற நண்பர் கடையில் தான். எட்டுக்கு எட்டு சதுர அடி கொண்ட அறை அது. தெருமுனையில் அமைந்திருக்கும். உள்ளே இருவர் அமரலாம்.

அன்றும் வேலையை முடித்துக்கொண்டு அங்கே கூடினோம். சித்த மருத்துவர், ஹரிஷ், நான், ப்ரவீன் வெங்கடேஷ் ஆஜராகியிருந்தோம். அன்று தி இந்துவில் வெளிவந்திருந்த உங்களின் பத்து கேள்வி பதில் நேர்காணலை பற்றி பேச ஆரம்பித்தோம். அதிலிருந்த 9, 10 வது கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதிலை படித்ததும் சித்த மருத்துவர் ராமலிங்கம் தன் வாழ்நாளில் நடந்த மிக இறுக்கமான ஒரு விஷயத்தை சொன்னார். அவர் dachshund வகை நாய் ஒன்றினை வளர்த்ததாகவும் அதை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தனக்கும் இது போல நேர்ந்ததாகவும் அப்போது அவர் நீங்கள் வெளிப்படையாக சொன்ன விஷயத்தை அந்த வக்கீலிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே நினைத்து வருந்தியதாகவும் சொன்னார்.

அதன்பின் அவர் அந்த செல்லப் ப்ராணியின் மீது வைத்திருந்த அதீத அன்பை விளக்க ஆரம்பித்தார். அவரின் தந்தையை பார்த்து தான் நாய் வளர்க்கும் ஆசையை இவருக்கும் வந்துள்ளது. ஆனால் தந்தையின் வளர்ப்பில் நாய்க்கு ட்ரெய்னிங் கொடுப்பதை பிடிக்காமல் இவரே தனியாக ஒரு dachshund நாயை எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளார். இதை எழுதும் நான் தான் நாய் என்று அதனை குறிப்பிடுகிறேனே தவிர அவர் பேசிய போது செல்லம், குட்டி என்றே சொன்னார்.

dachshund அதிக உயரம் வளரக்கூடிய ப்ராணியில்லை. மாறாக நீளவாக்கில் வளரக்கூடியது. பத்து வருடம் முதல் பதினைந்து வருடங்கள் வாழுமாம். அவரிடம் மிகவும் நெருக்கமானதாகவே எப்போதும் இருக்குமாம். வெளியூர் எங்கே சென்றாலும் அதனையும் கூட்டிக்கொண்டே செல்வாராம். டூ வீலரில் கச்சிதமாக பெட்ரோல் டாங் மீது ஜம்மென உட்கார்ந்து கொள்ளுமாம் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது. பல சமயங்களில் சட்டென வந்து மவுத் கிஸ் கொடுத்துவிடுமாம் அவருக்கு. அது சரியல்ல என்று அவருக்கு தெரிந்தாலும் அது காட்டும் அன்பிற்கு முன்னால் அதெல்லாம் கானல்நீர் தானாம். தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் படுத்துறங்குமாம். வீட்டிற்கு யாரேனும் வந்தால் தன் அப்பாவின் சொந்தம் யாரோ வந்திருக்கிறார் என சந்தோஷம் அடையுமாம். சந்தோஷத்தில் சுற்றி சுற்றி விளையாடுமாம்.

திடீரென ஒரு நாள் நாய்க்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துகொண்டே இருந்ததாம். பல மருத்துவமனை பார்த்தும் பலனில்லை. ரத்தம் நிற்காமல் வந்துகொண்டிருந்ததாம். வீட்டில் தன் மூன்று வயது குழந்தை இருக்க இப்படி ரத்தம் கசிந்துகொண்டிருப்பது சரியில்லை என அவரின் வீட்டில் எதிர்ப்பு. இவரும் தொடர்ந்து மருத்துவமனைகளை தேடிச் சென்றுள்ளார. எல்லோரும் கைவிரித்துவிட்டனர். இதே நிலையில் விட்டால் வெறிபிடித்துவிடும் என்று சொல்லிவைத்தாற் போல் எல்லா டாக்டர்களும் சொன்னார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல் ஒரு டாக்டரிடம் சென்று,”இவன் என் மகன். இவனது இறப்பு இவனுக்கு அதிகம் வலி கொடுக்கக்கூடாது. வலியில்லாமல் இவன் உயிர் பிரிய வேண்டும்” என கெஞ்சி அதற்கு மருந்து கொடுத்துள்ளார்.

அவரின் வீட்டின் இடத்திலேயே அதை ஒரு மெல்லிய வெள்ளை துணி போர்த்தி புதைத்துள்ளார். யாருக்கும் தெரியாமல் தனியே அழுதுவிட்டு பின் வீட்டினுள் சென்றுள்ளார்.

மொபைலில் தட்டச்சு செய்ததால் ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்கவும்.

Comments are closed.