படித்ததில் பிடித்தது

இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களையெல்லாம் படிக்கும் போது எனக்கு ஒரு அடங்காக் கோபம் ஏற்படும்.  ஒருத்தருக்காவது இந்திய வாழ்வின் அவல நிலை பற்றி எந்தக் கோபமும் இல்லையா என்பதே அந்தக் கோபத்தின் காரணம்.  சாக்கடையில் உழலும் பன்றிகளின் போன்ற வாழ்க்கை இந்திய வாழ்க்கை.  அதற்கு அரசியல்வாதிகளே முதல் காரணம்.  தண்ணீர், மருத்துவமனை, சாலை வசதி, கல்வி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கொடூரமான இந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளனுக்காவது கோபம் இல்லையா என்று அடிக்கடி நினைப்பேன்.  தருண் தேஜ்பாலில் The Story of My Assassins நாவலைப் படித்ததும் அந்தக் கோபம் தீர்ந்தது.  அஸாஸின்ஸ் நாவலில் அந்தக் கோபம் எரிமலையாய் கனன்று கொண்டிருக்கும்.  (White Tiger-உம் அப்படியே.  ஆனால் அதில் இலக்கியத் தரம் கம்மி.  அது சுஜாதாவின் ஒரு வெகுஜன நாவலைப் போலவே இருந்தது.)

சமூக எதார்த்தம் குறித்த அதே போன்ற ஒரு கோபத்தை சமீபத்தில் ஒரு கர்னாடக இசைக் கலைஞரின் நேர்காணலில் கண்டேன்.  கடந்த பத்தாண்டுகள் இந்தியாவில் நடந்த கொள்ளையின் காரணமாக நான் செய்தித்தாள்களையே படிக்காமல் இருந்தேன்.  ஆனால் இப்போது அரசியலில் ஒரு நம்பிக்கை பிறந்திருப்பதால் மீண்டும் செய்தித்தாள்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  அப்படிப் படித்துக் கொண்டிருந்த போதுதான் தமிழ் ஹிந்துவின் மே 14, 2014 தேதியிட்ட இதழில் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவின் நேர்காணலைக் கண்டேன்.   நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நேர்காணல் அது.

நீண்ட காலமாக நான் சந்திக்க வேண்டும் என்று மிக விரும்பி அது நிறைவேறாமலேயே இருக்கும் ஒருவர் டி.எம். கிருஷ்ணா.    (இலக்கியத்தில் இருக்கும் குழுச் சண்டைகளில் டி.எம். கிருஷ்ணாவின் இலக்கிய நண்பர்கள் அனைவரும் எனக்கு எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதால்ஒருவேளை அவருக்குத் தயக்கம் இருக்கலாம் என்று புரிந்து கொண்டேன்.  சோமன் என்ற நண்பரிடம் கிருஷ்ணாவைச் சந்திக்க வேண்டும், என்னை அழைத்துச் செல்லுங்கள்  என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்னேன்.  சோமன் இழுத்துக் கொண்டே இருந்தார்.  அப்புறம் வற்புறுத்திக் கேட்ட போது ஏதோ காரணங்கள் சொல்லி மழுப்பி விட்டார்.  உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை.  அதிலிருந்து நானும் சோமனுடன் பேசுவதை நிறுத்தி விட்டேன்.  சோமன், கிருஷ்ணாவின் நண்பர்!)  இன்னொரு வருந்தத்தக்க விஷயமும் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.  எனக்கு மிகப் பிடித்த ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியை முதல் முதலில் சந்தித்த போது அவரிடம் சென்று கை குலுக்கிய போது அவர் கையை சடக்கென்று உதறி விட்டுப் போய் விட்டார்.  அவர் பத்திரிகைகளில் எழுதும் அத்தனை விஷயங்களும் எனக்கு மிகவும் உடன்பாடானவையாக இருக்கும்.  நேற்று கூட இந்தியக் கல்வி முறை பற்றி அவர் எழுதியிருந்தது முழுக்கவும் என் கருத்தையே ஒட்டியிருந்தது.  ஒருவேளை டி.எம். கிருஷ்ணாவை நமக்குப் பிடித்தாலும் அவரோடு கை குலுக்கப் போய்…  என்று அந்த அதிகாரி என்னை அவமதித்த சம்பவம் மனதில் ஓடி நெருடலை ஏற்படுத்துகிறது.

கர்னாடக சங்கீதக் கலைஞர்களில்  நவீனத் தமிழ் இலக்கியம் அறிந்த ஒரே ஒருவர் டி.எம். கிருஷ்ணா தான்.  அப்படித்தான் அவரைப் பற்றி அறிந்திருந்தேன்.  ஆனால் அவருடைய தமிழ் ஹிந்து நேர்காணலைப் படித்த பிறகு தான் சமூக எதார்த்தம் பற்றிய இவ்வளவு அடிப்படையான புரிதலையும் கொண்டவர் என்று அறிந்து கொள்ள முடிந்தது.   நேர்காணல் செய்தவர் சமஸ்.    இந்த நேர்காணலைப் படித்த பிறகு டி.எம். கிருஷ்ணாவின் மீதான என் மதிப்பும் மரியாதையும் இன்னமும் கூடி விட்டது.

பின்குறிப்பு:  மேலே குறிப்பிட்ட ஓய்வு பெற்ற அதிகாரியிடம் நேர்ந்த அனுபவத்துக்குப் பிறகு நானாக யாரையும் சந்திக்க முயற்சிப்பதில்லை என்ற முடிவெடுத்து விட்டேன்.

Comments are closed.