கொட்டாங்கச்சி என்ற இளம் இயக்குனரை (வயது இருபத்து நாலு) அழைத்து “கொட்டாங்கெச்சி… உன்க்காக ஒரு படேம் பண்லாம்னு டிசைட் பண்ணிருக்கேன்… ஹா ஹா… படேம் தேர்ட்டி மினிட்ஸ்தான்… ஆனா சும்மா தெறிக்கும்…” என்று சொல்லி விட்டு அவர் ஸ்டைலில் முப்பது டிகிரி உதட்டை மேலேற்றி சிரித்தார் சூப்பர் ஸ்டார்.
கதையையும் பொறுமையாகச் சொன்னார். அதைக் கேட்டு விட்டு கொட்டாங்கச்சி சொன்னான்: “தலைவரே, என்னதான் முப்பது நிமிஷக் கதை என்றாலும் இதன் தயாரிப்பு செலவு 500 கோடி ஆகும். அதனால் ஒரு டிக்கட் விலை 2000 ரூ. வைக்க வேண்டியிருக்கும். என்னதான் சூப்பர் ஸ்டார் என்றாலும் அரை மணி நேரப் படத்துக்கு ரசிகன் 2000 ரூ. செலவு பண்ண மாட்டான். அதனால் இந்த ப்ராஜக்ட் வேண்டாம். வேண்டுமானால் சாண்டில்யனின் கடல் புறாவை படம் பண்ணலாம்.”
கொட்டாங்கச்சி ஒரு பதினைந்து நிமிடம் விலாவாரியாக விளக்கியதை இங்கே நான் சுருக்கமாக ரெண்டொரு வாக்கியத்தில் சொல்லியிருக்கிறேன்.
“ஓஹ்… ஓக்கே… ஓக்கே… கொட்டாங்கெச்சி… நான் இந்த ப்ராஜட்யே விட்டுர்ரன்… டிராப்… ஹா ஹா… ஓக்கே… நீங்க இட்லி சாப்ட்டு போங்கே… நல்லார்ங்கே… பேரண்ட்ஸை காப்பாத்துங்கே… பிகாஸ் ஃபேமிலி முக்யம்… ஏன்னா… அதான் தேசப்பற்று… ஜெய்ஹிந்த்…”
சூப்பர் ஸ்டாருக்கு அவமான உணர்வு தாங்க முடியவில்லை. ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட அவமதிப்புகளை அவர் சந்தித்து இருந்தாலும் இந்த அறுபத்தொன்பது வயதில் ஒரு பொடிப் பயல் தன்னை நிராகரித்து விட்டானே என்று ஆவேசமடைந்தார்.
மனைவியிடம் சொல்லலாம் என்றால், அவளுக்குக் கொட்டாங்கச்சி பெயரைக் கேட்டாலே பிடிக்காது. இந்தக் கொட்டாங்கச்சி காரணமாகவே வீட்டில் தேங்காய் கூட வாங்குவதில்லை. தேங்காய் துருவலாகவே இப்போது டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறதாமே, அதுதான் சூப்பர் ஸ்டார் வீட்டில் வாங்குவது. தேங்காயாக வாங்கினால் கொட்டாங்கச்சி மனைவியின் கண்ணில் பட்டு விடுமே, நிஜக் கொட்டாங்கச்சியைப் பார்த்தாலே மனைவிக்கு மனிதக் கொட்டாங்கச்சி ஞாபகம் வந்து தொலைத்து விடும். இந்தப் பயலை யார் கொட்டாங்கச்சி என்று புனைப்பெயர் வைத்துக் கொள்ளச் சொன்னது, இடியட்? வேறு பெயரா இல்லை? கேட்டால் “நீங்கள்தான் தலைவரே எனக்கு இந்தப் புனைப்பெயரையே வைத்தீர்கள்” என்கிறான்.
ஆனால் ஒன்று, சூப்பர் ஸ்டார் ஒன்றும் கொட்டாங்கச்சியை சீட்டுப் போட்டுக் குலுக்கி சினிமா எடுக்கக் கூப்பிடவில்லை. அவன் ஐஏஎஸ் டாப்பராக வந்து செய்தித்தாள்களில் இடம் பிடித்தவன். ஆனாலும் ”நான் ஐஏஎஸ் ஆக மாட்டேன், என் வாழ்நாளை சூப்பர் ஸ்டாருக்காகவே அர்ப்பணித்திருக்கிறேன்” என்று அறிவித்து விட்டு, அப்போது வெளிவந்திருந்த நீலா என்ற படத்தின் வெற்றிக்காக சென்னையிலிருந்து திருப்பதி வரை அங்கப் பிரதட்சணம் பண்ணியே போய் வந்து மீண்டும் ஒருமுறை செய்தித்தாள்களில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டாரின் இதயத்திலும் இடம் பிடித்தவன். அதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்றத்தின் உள்வட்டத்தில் கொட்டாங்கச்சிக்கு பொறாமை கலந்த ஒரு மரியாதை உண்டு. அதன் பிறகு சில புதுமுகங்களை வைத்து ஒன்றிரண்டு படங்களையும் செய்திருக்கிறான். ஆனால் சூப்பர் ஸ்டாரை வைத்துச் செய்யவில்லை. ஆ, அர்த்தம் பிழையாக வருகிறது. விடுங்கள், இப்போதுதான் சூப்பர் ஸ்டாரை வைத்துச் செய்து விட்டானே?
கொதித்துக் கொண்டிருந்தார் சூப்பர் ஸ்டார். யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. நம் தற்கொலைப் படையே இப்படி என்றால் நமக்குத்தானே அவமானம்?
அந்தக் கணத்தில் கமலை நினைத்துப் பார்த்தார் சூப்பர் ஸ்டார். வாழ்ந்தால் கமல் மாதிரி வாழ வேண்டும். கமலின் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்ட மிஷ்கின் சார் தென்பாண்டிச் சீமையிலே பாட்டைப் பாடுகிறார். அது வரைக்கும் சரி. பாடி முடித்து விட்டு, முழங்காலை மடித்தபடியே நாலு அடி நடந்து சென்று கமலிடம் ஆசி வாங்குகிறார்.
இனி சூப்பர் ஸ்டாரே பேசுகிறார்:
மிஷ்கின் சார் அப்டி காலே மடிச்சி, குனிஞ்சி, பம்மி பம்மி நால் அடி நடந்து போனது… எனக்கு வேறே ஒண்ணு ஞாபகம் வந்துச்சி… கொஞ்சம் வர்ஷம் முன்னாலே… ஒரு அரசியல்வாத்தீ ஒரு பொம்ப்ளே கால புடிக்க முட்டி போட்டு போனாங்க… ஹாஹ்ஹா… அதூ எனக்கு ஞாபகம் வந்துச்சி…
என் பொறந்த நாள்ளே கூட என் ரசகர்ங்க இப்டி செய்வாங்கே… ஆனா இப்டி மிஷ்கின் ரேஞ்சிக்கு யாரும் செஞ்சதில்லே… கிட்ட கூடே வந்ததில்லே… என்னாதான் விஸ்கி ரம்முன்னு மிஷ்கின் ஜாலியா இருந்தாலும்… ஒடம்பு… அவரோட பாடி… ஃபிஸிக்… ஒரு அக்ரோபாட் மாதிரி வச்சிருக்காங்கே… ஹாட்ஸ் ஆஃப்… எனக்கே பொறாமையா இருக்கு… ஹாஹ்ஹா…
சரி சரி… எங்கியோ போய்ட்டேன்… விட்ட எடத்துக்கு வரேன்… கமல் மேட்டர்ல ஒரு auteur டேரக்டரே மடங்கி குனிஞ்சி போறாங்கே… சாரு நிவேதித்தாங்கிற ரைட்டர் தமிழ்ல மணி சாரும் மிஷ்கினும்தான் auteurனு எழுதியிருக்காங்கே. அப்டிப்பட்ட மிஷ்கினே கமல்ஹாஸன் முன்னாலே இப்டி முழங்காலாலே நடக்கிறாங்கே. ஆனா நம்ம விஷயத்திலே என்னோட தற்கொலைப் படையே நம்மள வச்சுப் படம் பண்ண முடியாதுங்கிறாங்கே. எப்டி இருக்கு பாருங்கே… என்னெ எல்லாரும் சுப்பர் ஸ்டாருங்கறாங்கே… ஹாஹ்ஹா…
மன உளைச்சல் அதிகமானதால் சூப்பர் ஸ்டாரின் ரத்த அழுத்தம் இருநூறைத் தாண்டியது. உடனே அவரது யோகா மாஸ்டர் சௌந்தர் சொல்லிக் கொடுத்த யோக நித்ரா பயிற்சியை ஒரு பதினைந்து நிமிடம் பண்ணினார். பிறகு ரத்த அழுத்தம் பார்த்ததில் 130 – 80க்குக் குறைந்திருந்தது. அதைப் பார்த்ததும் சற்று ஆசுவாசமடைந்த சூப்பர் ஸ்டார் அவரது இன்னொரு தற்கொலைப் படையான பிஸ்க்கானை அழைத்தார்.
பிஸ்க்கானின் வயது பதினெட்டு. நாலைந்து குறும்படங்கள் எடுத்திருக்கிறான். ஆனால் அது எல்லாமே செக்ஸ் கண்டெண்ட் கொண்டவை என்பதால் இண்டஸ்ட்ரியில் எல்லோருமே பிஸ்க்கானை ஒரு தினுசாகத்தான் பார்த்தார்கள். யாருமே அவனை ஒரு இயக்குனராகக் கருதுவதில்லை. ஆனாலும் சூப்பர் ஸ்டார் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பதால் யாருக்கும் அவனை நேரடியாகப் பகைத்துக் கொள்வதற்கும் தைரியமில்லை.
சூப்பர் ஸ்டாரின் உள்வட்டத்தினருக்குக் கொட்டாங்கச்சியைப் பிடிக்காது என்றாலும் சூப்பர் ஸ்டாருக்காக சென்னையிலிருந்து திருப்பதிக்கு அங்கப்ரதட்சணம் செய்தவன் என்ற முறையில் அவன் மேல் அவர்களுக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது.
ஆனால் கொட்டாங்கச்சியை விட அதிகக் கெட்ட பேர் எடுத்தவன் பிஸ்க்கான். இண்டஸ்ட்ரியிலும் சரி, சூப்பர் ஸ்டாரின் உள்வட்டத்திலும் சரி, பிஸ்க்கான் அளவுக்கு வெறுப்பை சம்பாதித்தவர் யாரும் கிடையாது. பொடிப் பயலுக்குத் திமிரைப் பாருங்கள் என்பார்கள். பிஸ்க்கான் என்ற பெயரே அவனுடைய வயதை வைத்து ஊரார் வைத்த பெயர்தான். அவன் எடுத்த குறும்படங்களால் அவன் ஈட்டிய கெட்ட பெயரோடு, சூப்பர் ஸ்டாரைத் தவிர வேறு யாரையுமே அவன் மதிப்பதில்லை என்ற விஷயமும் சேர்ந்து கொண்டது. கேட்டால், பெண்ணின் ஜனன உறுப்பைக் குறிப்பிடும் மூன்று எழுத்து வார்த்தையை வாக்கியத்தின் ஆரம்பத்தில் போட்டு, “என்ன மயித்துக்கு ஒங்களை மதிக்கணும்?” என்று கேட்பான். இது பற்றி சூப்பர் ஸ்டாரின் காதுகளுக்கே பல முறை செய்தி போயிற்று என்றாலும் சூப்பர் ஸ்டார் அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. சூப்பர் ஸ்டாருக்கு பிஸ்க்கான்தான் வலது கரம். அதனால் அவரே அவரது வலது கரத்தை வெட்டி விட முடியாது என்று அவர் தன் நெருங்கிய சகாக்களிடம் பலமுறை தெரிவித்திருக்கிறார்.
அது எப்படி வலது கரம் என்று சொல்ல வேண்டும். ஆயிரத்தெட்டு உதாரணங்கள் சொல்லலாம். அதில் ஒன்றே ஒன்று. சூப்பர் ஸ்டார் முன்னைப் போல் ரெமி மார்ட்டின் குடிப்பதில்லை. அவருக்கு நுரையீரலில் பிரச்சினையாகி சிங்கப்பூர் போய் மருத்துவம் செய்து கொண்டு வந்ததிலிருந்து வைன்தான் அருந்துகிறார். அதிலும் சீலே வைன்தான். மற்ற தேசத்து வைன்கள் முரடாக இருக்கின்றன. முடியவில்லை.
போன வாரம் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்காட்டில் படப்பிடிப்பு. ஏற்காடு செல்வதற்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு ஃபோன் போட்ட பிஸ்க்கான், “தலிவா, சேலத்தில் உங்கள் சீலே வைன் கிடைக்காது, அதனால் சென்னையிலிருந்து கிளம்பும்போதே உங்களுக்குத் தேவையான சீலே வைனை வாங்கிக் கொண்டு போய் விடுங்கள், அது மட்டுமல்லாமல் எலைட் பாரில் போய் சீலே வைன் என்று கேட்டால், இல்லை என்று சொல்லி விடுவான், சிலி வைன் என்று கேட்க வேண்டும்” என்று விவரமாகச் சொல்லியிருந்தான்.
பிஸ்க்கான் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால், ஏற்காட்டில் போய் ரம், வோட்கா என்று எந்த எழவையாவது குடித்து சூப்பர் ஸ்டாரின் ஆரோக்கியம்தான் கெட்டிருக்கும்.
இப்படி உயிர் காக்கும் தொண்டனான பிஸ்க்கானின் முக்கியத்துவம் பற்றி சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் தெரிவதில்லை.
நேற்று கூட கொட்டாங்கச்சி சூப்பர் ஸ்டாரிடம் சொன்னான். தலைவரே, கமலை விட நீங்கள்தான் சிறந்த நடிகர் என்று அந்த ரைட்டர் சாரு நிவேதிதா எழுதியிருக்கார். ஆனால் உங்களை சூப்பர் ஸ்டார் என்கிறார்களே தவிர ஏன் யாரும் சிறந்த நடிகர் என்று அங்கீகரிக்கவில்லை? பாரதிராஜா கூட உங்களை நல்ல மனிதர் என்கிறார், ஆனால் நல்ல நடிகர் என்று சொல்லவில்லை. ஏன்? இந்தப் பிஸ்க்கான் பயல்தான் காரணம். உங்கள் சேர்க்கை சரியில்லை. சகவாசம் சரியில்லை. அண்ணி கூட அதையேதான் சொல்கிறார்கள். சொல்லப் போனால், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் ஒரு பையன் உங்களை யார் நீங்க என்று கேட்டது கூட பிஸ்க்கானின் சகவாசத்தினால்தான்.
”அதுக்கும் பிஸ்க்கானுக்கும் என்ன செம்மந்தம் கொட்டாங்குச்சி? அனாவஸ்யமா ஓர்த்தர் மேலே பழி போடே கூடாது… ரொம்பத் தப்பூ… ரொம்பத் தப்பூ…” என்று வெகுளியாகச் சொன்னார் சூப்பர் ஸ்டார்.
“உங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை தலைவரே. சொன்னால் உங்களுக்குக் கோபம் வந்து விடுகிறது. நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என்றாலும் உங்கள் சகவாசத்தினால்தான் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறது. வடக்கில் பாருங்கள், அங்கேயும் கமல்ஹாசன்தான் கொடி கட்டிப் பறக்கிறார். உங்களுக்கோ அங்கேயும் கெட்ட பேர்தான்…”
”என்ன சொல்றே, நார்த்லேயுமா?”
“ஆமாம் தலைவரே. நார்த்லேயும்தான். அதுக்கும் இந்தப் பிஸ்க்கான் பையன்தான் காரணம்…”
“ஹேய் ஹேய் ஹேய் கொட்டாங்கச்சி… ஸ்டாப் இட்… ஸ்டாப் இட்… திஸ் இஸ் டூ மச்.”
“எல்லாத்துக்கும் காரணம் இந்த பிஸ்க்கான்தான்னு அண்ணியும் நினைக்கிறாங்க தலைவரே…”
”ஹே ஹே ஹே, அவ்ளே பத்தி இங்கெ இழுக்காதே. எத்தனையோ கோடி சொத்து இருந்தும் பத்து பர்ஸேண்ட் நிம்மதி எங்கே கிடேக்கிம் எப்டி கிடேக்கிம்னு தேடிட்டிருக்கேன்… நீ அந்த பத்து பர்ஸேண்ட்டையும் என் கிட்டேர்ந்து பிடுங்கிக்காதே…”
இப்படியாக சூப்பர் ஸ்டாருக்குத் தன்னால் எத்தனை முடியுமோ அத்தனை டார்ச்சர் கொடுத்து விட்டு கொட்டாங்கச்சி கிளம்பிய பிறகு பிஸ்க்கானை அழைத்தார் சூப்பர் ஸ்டார். புதிய பட விஷயத்தைச் சொன்னார். கொட்டாங்கச்சி மறுத்து விட்ட விஷயத்தையும் விளக்கமாகக் குறிப்பிட்டார்.
”தலிவா, எவன் சொன்னது ஐநூறு ஸீ பட்ஜெட் ஆகும் என்று? நான் நூறு ஸீயில் படம் எடுத்துக் காண்பிக்கிறேன். அந்த நூறு ஸீயும் கூட உங்கள் ஸலாரிதான். டிக்கட் இருபதே ரூபா.”
”ஹோ ஹோ ஹோ… அது ஸலாரி இல்லே பிஸ்க்கான். ஸாலரி… நீ இந்த மாதிரி இங்க்லீஷ் பேச எங்கேதான் கத்துக்கிட்டே… ரொம்ப ஃபன்னி நீ. உன் கிட்டே எனக்குப் பிடிச்சதே இந்த லிட்டில் லிட்டில் ஃபன்னி திங்ஸ்தான்… சரி, நாம் பிஸ்னஸே பாப்போம். ஸாலரி போக மத்த செலவுக்கு என்ன பண்ணுவே பிஸ்க்கான்?”
”பிச்சை எடுப்பேன் தலிவா. பிச்சை எடுப்பேன். தமிழ்நாடு பூரா பிச்சை எடுப்பேன். திருடுவேன்னு சொல்லத்தான் நினைச்சேன். ஒங்களுக்குப் பிடிக்காது. ஒங்களுக்குப் பிடிக்காததை இந்த ரசிகன் செய்ய மாட்டான். ஆனா ஒண்ணு தலிவா… இந்த மாரி மட்டும் எம்ஜியாருக்கு நடந்திருந்தா அந்தக் கொட்டாங்கச்சி இருக்கும் இடத்தையே எரிச்சிருப்பார். ஆனா நீங்க தெய்வம். உங்க ஸ்டைலே வேறெ. அதான் வுட்டுட்டீங்க. சரி தலீவா, நாம இந்தப் படத்தைப் பண்றோம். ஜெய்க்கிறோம்.
சுபம்.