சமீபத்தில் நம்பர் ஒன் பற்றிய சர்ச்சையில் ஒரு பத்திரிகையாளர் என் பெயரைக் குறிப்பிட்டு ’சாரு இப்போது ஆட்டத்திலேயே இல்லை’ என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்தில் எழுதியிருந்தார். அப்படி நினைக்க அவருக்கு உரிமை உண்டு என்றாலும் வேறொரு காரணத்தினால் அவரை அந்தக் கணமே என் நட்புப் பட்டியலிலிருந்து விலக்கி விட்டேன். காரணம், அவர் என் எழுத்து எதையும் கடந்த பத்து ஆண்டுகளாகப் படிக்கவில்லை என்று தெரிந்தது. அதற்கு முன்னாலும் படித்திருப்பாரா என்ற சந்தேகம் இப்போது வருகிறது. சந்தேகத்துக்குக் காரணம், தினந்தோறும் 2000 வார்த்தைகளிலிருந்து 3000 வார்த்தைகள் வரை எழுதிக் கொண்டிருக்கும் ஒருவனைப் பார்த்து ‘இவர் ஆட்டத்திலேயே இல்லை’ என்றால் என்ன அர்த்தம்? கொரோனா காலகட்டத்தில் நான் தினந்தோறும் பூச்சி என்ற தொடரை எழுதி வந்தேன். கிட்டத்தட்ட 150 அத்தியாயங்கள். தினமும். அதைத் தொடர்ந்து பிஞ்ஜில் வாரம் மூன்று அத்தியாயம் என்று ஔரங்ஸேப் நாவலை எழுதினேன். நூற்றுக்கு மேற்பட்ட அத்தியாயங்கள். அந்தப் பத்திரியாளருக்காவது என் பெயர் தெரிந்திருக்கிறது. மற்ற பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு என் பெயராவது தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் என்னைப் படித்திருப்பது பற்றி பேச்சே இல்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சமஸ் வித்தியாசமானவர். தமிழ் எழுத்தாளர்களோடு தொடர்ந்து உரையாடுபவர். எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவர். அதைச் செயல்படுத்தியும் வருபவர்.
நேற்று நான் எழுதிய ”சூப்பர் ஸ்டார்: ஒரு குறியீட்டுக் கதை” பற்றி சமஸ் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
”சாருவுக்கு நேரம் சரி இல்லை. நேற்றுதான் ரஜினிக்குக் கதை சொன்ன ஒரு நண்பர் “படத்துக்கு வசனம் நான் எழுதலை பாஸ்; சாரு எழுதினா எப்படி இருக்கும்?” என்று கேட்டார். இன்றைக்கு இப்படி ஒன்று எழுதியிருக்கிறார் சாரு.”
சமஸ் வேடிக்கையாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் வேடிக்கையாக எழுதினாலும் அதற்கு என் தரப்பு பதிலைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.
சினிமா விஷயத்தில் மட்டும் இன்று நேற்று அல்ல, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே எனக்கு நேரம் சரியில்லாமல்தான் இருக்கிறது. கமலின் மகாநதிக்கு நான் கணையாழியில் எழுதியிருந்த மதிப்புரையை கமல் தன் நண்பர்களிடம் வாய்விட்டுப் படித்துக் காண்பித்ததாக கணையாழி கஸ்தூரி ரங்கன் அப்போது சொன்னார். எனக்குத் தன் கையெழுத்தோடு ஒரு கடிதமும் எழுதியிருந்தார் கமல். தட்டச்சு செய்யப்பட்ட கடிதம். கையெழுத்து மட்டும்தான் பேனா. ரொம்ப நாள் அந்தக் கடித்த்தை வைத்திருந்தேன். பிறகு அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டிருந்த போது அந்தக் கடிதமும் அசோகமித்திரனின் கடிதங்களும் ஜெயமோகனின் நீண்ட கடிதங்களும் தொலைந்து விட்டன. பிறகுதான் தசாவதாரம், குருதிப்புனல் எல்லாம் வந்து அதற்குப் பிறகு நடந்த கதையெல்லாம் உலகுக்குத் தெரியும்.
கமலின் நண்பர்கள் பெரும்பாலானவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். பெயர் சொல்ல விரும்பவில்லை. அவர்களில் ஒருவர் சொன்னார், கமல் போன்ற சிநேகமான ஒருவரைப் பார்ப்பது அரிது, பெரியவன் சிறியவன் பார்க்காமல் பழகுவார், ஆனால் சாரு என்றால் மட்டும் அவருக்கு முகம் சிறுத்து விடும்.
காரணம், நான் தசாவதாரம், குருதிப் புனல் இரண்டுக்கும் எழுதிய படு காட்டமான விமர்சனம்.
எனக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாவற்றிலும் நம்பிக்கை உண்டு. பெருமாள் முருகனைப் பார்த்த பிறகும் அதில் நம்பிக்கை வராமல் இருக்குமா? பெருமாள் முருகனைப் போல் இன்னொருவர் லவ் டுடே இயக்குனரும் ஹீரோவுமான ப்ரதீப் ரங்கநாதன். அதேபோல் கமலின் விக்ரம். விக்ரம் இந்த அளவுக்கு ஓடி கமலுக்கு இப்படி ஒரு மறுவாழ்வு கொடுக்கும் என்று யாராவது நம்பினார்களா என்ன? இக்காரணங்களால் எனக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் ரெண்டிலும் நம்பிக்கை உண்டு.
ஆனால் சினிமா விஷயத்தில் முடிவு செய்தது மட்டும் நான்தான். நான் சுதந்திரமாக இயங்குவதால்தான் சினிமாவில் வேலை செய்ய முடியவில்லை. அது நான் தேர்ந்தெடுத்த முடிவு.
தொடர்ந்து தமிழில் வரும் மோசமான படங்களை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தால் வசனம் எழுத யார் அழைப்பார் சாருவை, சொல்லுங்கள் சமஸ்? கார்த்திக் சுப்பராஜை எடுத்துக் கொள்வோம். அவருடைய ஜிகர்தண்டா என்ற படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டினேன். அடுத்து வந்த இறைவியை மலக்கிடங்கு என்று எழுதினேன். அடுத்து, கார்த்திக் என்னை அழைப்பாரா?
ஷங்கர் படங்களையும் பாலா படங்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்.
வெற்றிமாறன் படங்கள் எல்லாவற்றையும் பாராட்டி வந்த நான், ஊரே கொண்டாடிய விசாரணையின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தேன். அது ஒரு விஜய் படம் என்றேன். வெற்றிமாறனுக்கும் என் மீது மன விலக்கம் ஏற்பட்டிருக்கும்.
இதையெல்லாம் மீறி கௌதம் மேனனோடு நல்ல நட்பு ஏற்பட்டது. வசனம் எழுதினேன். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு முன்பணம் வாங்கும் நாள் அன்று காலையில் படத்தின் ஹீரோ சூர்யா படத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார். ஒரே ஒரு நாள் தள்ளி அறிவித்திருந்தால் கூட எனக்கு முன்பணம் வந்திருக்கும். முன்பணம் கொடுத்து விட்டோமே என்று என்னைப் பயன்படுத்தியும் இருப்பார் கௌதம்.
ஆக, இதில் கடவுளின் திட்டமும் ஏதோ ஒன்று இருக்கிறது.
மேலும், என்னைப் போல் 45 ஆண்டுகள் இலக்கியமே வாழ்க்கை என்று வாழும் ஒரு எழுத்தாளன் ஏன் சினிமாவின் பக்கம் போகிறான்? ஒரு எழுத்தாளனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு சினிமாவில் பணம் வரும். ஆனால், சினிமாவுக்குப் போனால் என் சுதந்திரம் பறி போய் விடும். நான் சினிமாவுக்குப் போனால் நேற்று எழுதிய சூப்பர் ஸ்டார் பற்றிய குறியீட்டுக் கதையை எழுத முடியுமா? முதலில் சினிமா பற்றிய என் கருத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? வெந்து தணிந்தது காடு பற்றி ப்ளூ சட்டை மாறன் சொன்னதெல்லாம் கம்மி. எனக்கு அந்தப் படம் மலத்தைக் கரைத்து வாயில் ஊற்றியது போல் இருந்தது. ஜெயமோகன் சம்பந்தப்பட்டிருந்ததால் நான் வாயையே திறக்கவில்லை. இப்போது அதன் காலம் முடிந்து விட்டதால் சொல்கிறேன். ஜெயமோகன் இல்லாவிட்டால் ஐந்து நிமிடத்தில் குமட்டியபடியே வெளியே வந்திருப்பேன். உதாரணமாக, அந்த முள் சீனிலேயே ஓடியிருப்பேன். அப்படி ஒரு அபத்தமான காட்சியை தமிழ் சினிமா வரலாற்றிலேயே நான் பார்த்த்தில்லை.
பொன்னியின் செல்வனோ ஒரே பேத்தல். காஃபியையும் வைனையும் கலந்து அதில் கொஞ்சம் ஆவக்காய் ஊறுகாயையும் போட்டு அதோடு நிலவேம்புக் கஷாயத்தையும் பச்சை முட்டையையும் போட்டுக் கலக்கிக் குடித்தது போல் இருந்தது. உவ்வே. அந்தப் படம் வந்த போதும் நான் வாயைத் திறக்கவில்லை.
என் நண்பர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதாலேயே நான் வாய் திறக்க முடியவில்லை என்றால், நானே சினிமாவுக்கு உள்ளே இருந்தால் என் நிலைமை எப்படி இருக்கும், பாருங்கள்.
என் நண்பர் ஒருவர் ஒரு வெப்சீரீஸ் தயாரித்தார். ஊரே கொண்டாடியது. அதற்காக ஒரே ஒரு எபிசோட் பார்த்தேன். அந்த இயக்குனரைத் தேடிப் பிடித்து உதைக்க வேண்டும் போல் இருந்தது. கோபப்படாதீர்கள். ஓட்டலில் ஊசிப் போன பண்டத்தைக் கொடுத்தால் கோபம் வரும் இல்லையா, அது மாதிரியான கோபம். ஆனால் நண்பர் செலவிட்ட கோடிகளை எண்ணி வாய் திறவாமல் இருந்து விட்டேன்.
எனவே சமஸ், சினிமா விஷயத்தில் எனக்கு எப்போதுமே நல்ல நேரம்தான். சினிமாவுக்கு உள்ளே இருந்தால் இரண்டு சாத்தியங்கள்தான் உண்டு. ஒன்று, அவர்களுடைய ரசனைக்கும் என் ரசனைக்கும் ஒத்துப் போக வேண்டும். அல்லது, நான் என் கருத்துக்களைச் சொல்லாமல் அமைதியாக இருந்து சமரசம் செய்து கொள்ள வேண்டும். இந்த இரண்டைத் தவிர வேறு வழியே கிடையாது.
உதாரணமாக, பொன்னியின் செல்வனுக்கு நான் வசனம் எழுதியிருந்தால் என்ன ஆகும்? (எனக்கு மணி ரத்னத்தின் பெரும்பாலான படங்கள் பிடிக்கும்). தமிழில் இலக்கியம் பரந்து பட்ட மக்கள் திரளிடம் செல்லாமல் போனதற்கும், தமிழ்ச் சூழல் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக மாறியதற்கும் கல்கிதான் முக்கியமான காரணம் என்று ஒரு பத்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தன் பற்றிய என்னுடைய எட்டு மணி நேர சொற்பொழிவில் அந்த விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் பொன்னியின் செல்வனில் வசனம் எழுதியிருந்தால் எனக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும்; புகழும் கிடைக்கும். ஆனால் கல்கி பற்றிய என் கருத்துக்களை வெளியே சொல்ல முடியாது. என் கைகள் கட்டப்பட்டு விடும்.
நீங்கள் சுஜாதாவின் கடைசிப் பக்கங்களைப் படித்திருக்கிறீர்களா? பஞ்சு அருணாசலம், கண்ணதாசன் போன்றவர்களை அதில் கன்னாபின்னா என்று சாடியிருக்கிறார், கலாய்த்திருக்கிறார் சுஜாதா. சிவாஜியின் நடிப்பை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அதே சுஜாதா வெகுஜன சூழலுக்கு வந்தவுடன் மூன்றாந்தர சினிமாவையெல்லாம் பாராட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
எந்த ஒரு சமூகத்திலும் எழுத்தாளர்கள் சினிமாவுக்காகத் தங்கள் கொள்கைகளை சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் அப்படி எதிர்பார்க்கிறார்கள். என் சக எழுத்தாளர் ஒருவர் கமல் பற்றி ஃபேஸ்புக்கில் ஏதோ எழுதி விட்டார். உடனே அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டார் எழுத்தாளர். கொடுக்காவிட்டால் கமல் படத்துக்கு அவர் வசனகர்த்தாவாக இருந்த பதவி பறிக்கப்பட்டு விடும்.
இதுதான் நிலைமை.
மேலும், இன்றைய சமூகம் பல துறைகளில் சீரழிந்திருக்கிறது என்று நமக்குத் தெரியும். அதன் பிரதிபலிப்பு இலக்கியத்திலும் தெரியாமலா போகும்? இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலருக்கு சினிமாவில் வசனம் எழுதுவதே வாழ்வின் பெரும் இலட்சியமாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி இது! இந்த வீழ்ச்சியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். சினிமாவுக்கு எழுதுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் நான் எழுதினால் என் சுதந்திரம் பறி போகும். என் சுதந்திரத்தின் விலை என் உயிர்.
மேலும் ஒன்று, என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழ்ச் சமூகம் தான் கொண்டாடிய சூப்பர் ஸ்டாரை அவருடைய காலத்துக்குப் பிறகு மறந்து விடும். எம்கேடி ஒரு உதாரணம். ஆனால் புதுமைப்பித்தன் போன்ற எழுத்துக் கலைஞனுக்கு தமிழ் மொழி உள்ளளவும் சமூகத்திலும், வரலாற்றிலும், பண்பாட்டிலும், மொழியிலும், கலாச்சாரத்திலும் இடம் உண்டு. ஏனென்றால், எழுத்துக் கலைஞன் தான் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே உருவாக்குகிறான், கபிலனைப் போல, பரணரைப் போல, வள்ளுவனைப் போல, இளங்கோவைப் போல… சாரு நிவேதிதாவாகிய நானும் அந்த மரபில் வருபவன் என்பதால் எல்லா கெட்ட நேரங்களையும் என்னுடைய நெருப்பில் எரித்துக் கொண்டேதான் எழுதுகிறேன்… சமயங்களில் நானே கூட அந்த நெருப்பில் வெந்து போவதும் உண்டு. அப்படி வெந்து மீண்ட பிரதிதான் காமரூப கதைகள். அதை என்னைத் தவிர வேறு யாரும் எழுத முடியாது. அதை வாசிப்பதற்கே தமிழ்ச் சமூகத்துக்கு இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகும்.