சென்னையின் கலாச்சார அவலங்களில் ஒன்று, ஹிண்டு ஆங்கில நாளிதழ். அதில் உள்ள யாருக்குமே சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் யாரையும் தெரியாது. ஒரே விதிவிலக்காக இருந்தவர் அசோகமித்திரன். அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பிறகும் சரி, ஆங்கில ஹிண்டு ஆட்களுக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் சுஜாதாவும் பாலகுமாரனும்தான். அதன் காரணமாக அந்தப் பத்திரிகை நடத்தும் இலக்கிய விழாவிலும் வெளிமாநில எழுத்தாளர்களைத்தான் பார்க்கலாமே தவிர தமிழ்நாட்டிலிருந்து ஒருவரும் தென்பட மாட்டார்கள். ஒப்புக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். அவர்களும் நாகர்கோவில் பத்திரிகை கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்தான்.
கொரோனாவுக்கு சற்று முன்னர் நான் ஒரு ஐரோப்பிய நாட்டுக்குப் போவதாகத் திட்டமிட்டிருந்தேன். அங்கே உள்ள என் வாசகர் ஒருவர் தங்குவதற்குப் பொறுப்பு எடுத்திருந்தார். இதுவரை எந்த ஒரு அமைப்பும் என்னை எந்த வெளிநாட்டுக்கும் அழைத்ததில்லை. என்னுடைய எல்லா பயணங்களும் என் வாசகர்கள் தரும் பணத்தில் செல்வதுதான்.
என்னைத் தான் வசிக்கும் நாட்டுக்கு அழைத்தவர் அந்த நாட்டின் பிரஜை. நாங்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் காரில் செல்ல்லாம் என்று ஏற்பாடு. போய் வருவதற்கு டிக்கட் எல்லாம் எடுத்து விட்டேன். நாற்பதாயிரமோ என்னவோ செலவு. ஆனால், வழக்கம்போல் எனக்கு வீசா மறுக்கப்பட்டு விட்டது. டிக்கட் எடுக்கப்பட்ட பிறகும் வீசா மறுக்கப்பட்டது அதுவே முதல் முறை. ”உங்களுக்குத் தேவையெனில் எங்கள் நீதிமன்றத்தில் நீங்கள் முறையீடு செய்யலாம்” என்றும் வீசா மறுப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் பயணத் தேதி நெருங்கியிருந்தது. முறையீடு செய்வதற்கெல்லாம் நேரம் இல்லை. ஐரோப்பியத் திமிர் என்று சொல்வதைத் தவிர வேறு எதுவுமில்லை. ”நான் உன்னை செருப்பால் அடிப்பேன், உனக்கு அதில் ஆட்சேபம் இருந்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம்.” இதைத் தவிர அவர்களின் மறுப்புக் கடிதத்துக்கு வேறு அர்த்தம் இல்லை. இப்படியும் ஒரு ஐரோப்பியப் பயணம் தேவையில்லை என்று விட்டுவிட்டேன். இம்மாதிரி எனக்கு வீசா நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீளமாக இருக்கிறது. அந்த நேரத்தில் அதே நாட்டில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் ஒரு சென்னைப் பெண்மணியின் பெயரைச் சொல்லி அவரை அணுகுங்கள், அவர்தான் சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் பெரிய ஆள் என்றார்.
ஆங்கிலத்தில் ஒரு நாலு எழுத்து வார்த்தை உள்ளது. முதல் எழுத்துதான் கடைசி எழுத்தும். அந்தப் ’பணி’யை கலாச்சாரத் தளத்தில் செய்யும் அருவருக்கத்தக்க அம்மாள் அவர். அவரைப் பற்றி ஜெயமோகன் ரெண்டு வரி எழுதியிருக்கிறார் என்று சொல்லி ஸ்ரீராம் அதன் இணைப்பை அனுப்பியிருந்தார். அதில் வரும் பகுதி இது. இனி ஜெயமோகன்:
”சென்னையில் ஹிந்து லிட் ஃபெஸ்ட் என ஓர் சர்வதேச இலக்கியவிழா பற்பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க இருந்து இலக்கியவாதிகள் வந்து கலந்துகொள்கிறார்கள்.அவர்கள் எவருக்கும் தமிழில் நவீன இலக்கியம் என ஒன்று உள்ளது என்பதே அறிமுகப்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் அங்கே முக்கியமான தமிழ்ப்படைப்பாளிகள் அழைக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலம்பேசும் சென்னை மக்களின் விழா அது. அம்மக்கள் அதிகம்போனால் கல்கி, சுஜாதா, பாலகுமாரனை அறிந்தவர்கள்.
ஹிந்து லிட்ஃபெஸ்ட் நிகழ்வுக்கு க்ரியா, காலச்சுவடு ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய ஓரிருவர் அவ்வப்போது அழைக்கப்படுவார். எந்த அரங்கையும் எவ்வகையிலும் கவனிக்கச்செய்யும் தகுதி கொண்ட முதன்மைப் படைப்பாளிகளாக அவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் அரங்கும் எப்போதுமே ஒதுக்குபுறமானதாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் பத்துபேர் அரங்கில் அமர்ந்திருப்பார்கள்.
ஹிந்து லிட் ஃபெஸ்டுக்கு வந்த இலக்கியவாதிகளை பின்னர் மும்பையில் அல்லது திருவனந்தபுரத்தில் சந்திக்கையில் அவர்கள் தமிழில் நவீன இலக்கியமே உருவாகவில்லை என்றும், ஒருசிலர் சமூகசீர்திருத்த எண்ணத்துடன் எழுதும் சில எழுத்துக்களே உள்ளன என்றும், அவை கல்வியறிவில்லா தமிழர்களால் எதிர்க்கப்படுகின்றன என்றும் மனப்பதிவு கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். நான் தமிழில் எழுதுகிறேன் என்றால் திகைப்பார்கள்.
இதுவரை நான் ஹிந்து லிட்பெஸ்டுக்கு அழைக்கப்பட்டதில்லை. இம்முறை என்னை அங்கிருந்து ஓர் அம்மாள் கூப்பிட்டு அவ்விழாவுக்கு அழைத்தார். இலக்கியவாதியாக என்னை அழைக்கவில்லை. மணி ரத்னம் ஓர் அரங்கில் பொன்னியின் செல்வன் பற்றி பேசுவார் என்றும், அதை நான் அவரிடம் கேள்விகேட்டு நடத்தவேண்டும் என்றும் கோரினார். (தமிழில் நான் அருவருக்கும் ஆளுமைகளில் ஒருவர் அந்தப் பெண்மணி, பொய்யே உருவான வம்பர்) மேற்கொண்டு எதன்பொருட்டும் என்னிடம் தொடர்புகொள்ளலாகாது என்று எச்சரித்து தொடர்பை முறித்தேன்.”
சில தினங்களுக்கு முன்பு நடந்த அறைகலன் சர்ச்சையை கவனமாகப் பார்த்தேன். கடைசியில் எனக்கு அறைக்கலனா அறைகலனா என்றே முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் ஜெயமோகன் பயன்படுத்தும் அம்மாள் என்ற வார்த்தை இருக்கிறதே, அந்த வார்த்தையை ஜெயமோகன்தான் கண்டு பிடித்தார் என்று சந்தேகமில்லாமல் சொல்வேன். அவர் கண்டு பிடிப்பதற்கு முன்பே அந்த வார்த்தை இருந்தது என்றாலும், ஜெயமோகன் பயன்படுத்தும்போது அந்த வார்த்தைக்கு வேறோர் ”மீனிங்” வருகிறது. ஒரு நல்ல வார்த்தையைத் தரை மட்டமாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு தமிழில் வேறு இல்லை. நன்றி ஜெ.
முழுக்கட்டுரைக்கு:
பொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)