கடவுளின் ஜாதகம் (கடவுள் கவிதைகள் 4)

அஞ்சு மாச வயசான கடவுள்

ஒரு இசை வெறியர் என்று தெரிந்தது

கவனம் பிசகாமல் மணிக்கணக்கில் இசை கேட்கிறார்

அதனால் கடவுளை

நான் இசைக் கலைஞனாக்குவேன்

என்றானொருவன்

உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம்

சலிப்பே இல்லாமல் கடவுள்தன்

கையையும் காலையும் உதைத்துக் கொண்டேயிருக்கிறார்

அதனால் கடவுளை நான் நாட்டியக்காரனாக்குவேன்

என்றானொருவன்

எந்தக் காரணமும் தேவையில்லாமலேயே

கடவுளை நான் அய்ப்பீயெஸாக்குவேன்

என்றாளொருத்தி

கடவுளை நான் தத்துவவாதியாக்குவேன்

என்றானொரு தத்துவவாதி

எந்தக் குறுக்கீடும் இல்லாமல்

புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருப்பதால்

கடவுள் ஒரு எழுத்தாளனாகப் பிறந்திருக்கிறார்

என்றானொருவன்

கடவுள் ஒரு விளையாட்டு வீரன்

கடவுள் ஒரு பயணி

கடவுள் ஒரு ஞானி

கடவுள் ஒரு விஞ்ஞானி

கடவுள் ஒரு மருத்துவர்

விதவிதமான மனிதர்கள்

விதவிதமாகச் சொன்னார்கள்

கடவுள் என்னைப் பார்த்து

சிரித்தார்