உலகக் கால்பந்தாட்டப் போட்டி

எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையில் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளையும் பார்த்து வருகிறேன்.  எல்லாவற்றையும் பார்ப்பதில்லை.  ஒரு நாளில் ஒரு போட்டி.  இதில் என்னுடைய மனச்சாய்வு எப்படி இருக்கிறது என்றால், கத்தாருக்கும் எகுவாதோருக்கும் என்றால் என் ஆதரவு எகுவாதோர்.  காரணம், தென்னமெரிக்கா.  இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் என்றால், இங்கிலாந்து.  செனகல் – நெதர்லாண்ட்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை, செனகல்.  யு.எஸ். – வேல்ஸ் : இரண்டுக்குமே ஆதரவு இல்லை.  ஆட்டத்தையே பார்க்கவில்லை.  இரண்டு நாடுகளையுமே பிடிக்காது.  அர்ஹென்ந்த்தினா – சவூதி அரேபியா :  என் ஆதரவு அர்ஹெந்த்தினாவுக்கு.  டென்மார்க் – துனீஷியா : என் கட்சி துனீஷியா.  மெக்ஸிகோ – போலந்து.  நீங்களே யூகித்து விடலாம்.  ஃப்ரான்ஸ் – ஆஸ்ட்ரேலியா: இரண்டிலும் ஈடுபாடு இல்லை.  மொராக்கோ – க்ரோஷியா : மொராக்கோ.  ஜெர்மனி – ஜப்பான்: ஆசிய நாட்டுக்கே என் வாக்கு.  ஸ்பெய்ன் – கோஸ்த்தா ரீக்கா: நீங்களே யூகிக்கலாம்.  சென்ற முறை உலக்க் கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்தேனா இல்லையா என்று சுத்தமாக மறந்து விட்ட்து. 

ஏதாவது ஒரு தென்னமெரிக்க நாடுதான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன்.   இந்த நிலையில் கணேஷ் அன்பு முன்பு நான் எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியைத் தன் குறிப்புடன் அனுப்பி வைத்திருக்கிறார்.    

வணக்கம் சாரு,

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கால் பந்து உலகக்கோப்பையில் செனகல் அணி நாக்-அவ்ட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டியைப் பார்த்து, அது நாக்-அவ்ட் சென்றதும், கோணல் பக்கங்களில் நீங்கள் எழுதியது நினைவுக்கு வந்தது. அந்தத் தொடருக்குப் பிறகு ( 2002 ) , அதற்கடுத்த மூன்று உலகக்கோப்பைத் தொடர்களுக்கு செனகல் அணி தகுதி பெறவே இல்லை. பின்னர், 2018 -இல் தகுதி பெற்று, குறிப்பிடும்படி சிறப்பாக ஆடினாலும் ‘நல்ல நேரம்’ கை கொடுக்காததால் நாக்-அவ்ட்க்கு போக முடியவில்லை. இந்த ஆண்டு மீண்டும் தகுதி பெற்று, நாக்-அவ்ட்க்கு முன்னேறியுள்ளது.

அந்த அணியின் தற்போதைய கோச் Alliou Cisse பாப் மார்லி போலவே இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு செனகல் அணியை வழிநடத்தி சென்ற கேப்டனும் கூட.

அடுத்து வருவது, கோணல் பக்கங்களில் செனகல் குறித்து தாங்கள் எழுதியது 👇👇👇

“கடவுளின் சிருஷ்டியில் பெண் ஒரு அற்புதம் என்றால் மனிதனின் சிருஷ்டியில் கால் பந்தாட்டம் ஒரு அற்புதம். இந்த ஆட்டத்தை மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிட முடியாது. இது ஒரு Carnival.

துவக்க ஆட்டமாக ஃப்ரான்ஸூம் செனகலும் மோதப் போகின்றன என்றதும், ‘செனகல்தான் வெல்லும்’ என்றேன். ரஞ்சன் சிரித்தார். ரஞ்சனும் என்னைப் போல் ஒரு ஃபுட்பால் வெறியர். ‘செனகலாவது ஜெயிப்பதாவது?’ என்றார்.

நான் சொன்னது போலவே செனகல் வென்றது. ஆனால், நான் ஏன் அப்படிச் சொன்னேன்? ஒரு சில அனுமானங்கள். 1990 ஆம் ஆண்டு அப்போதைய நடப்பு சேம்பியனான அர்ஜென்டினாவை தொடக்க ஆட்டத்தில் கேமரூன் அணி வென்றது ஞாபகக் கிடங்கில் இருந்ததால் சொல்லியிருக்கலாம்.

மேலும் உஸ்மான் செம்பீன் (Ousmane Sembene) என்ற அற்புதமான இயக்குனரைக் கொடுத்தது செனகல். அந்த நாடு வெல்ல வேண்டாமா? அது மட்டுமல்ல, கால் பந்தாட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் முறியடிக்கப்பட வேண்டும்.

செனகல் நாட்டு ஆட்டக்காரர் கோல் போட்டதும் அவருடைய டி-ஷர்ட்டை கழற்றிப்போட்டு அதைச் சுற்றி வந்து அந்த ஆட்டக்காரர்கள் ஒரு நடனம் ஆடினார்களே… அதைக் காணக் கண் கோடி வேண்டும். அதுதான் dionysian spirit. அதற்காகத்தான் செனகல் வெல்லும் என்று சொன்னேன்.”