நண்பர் அய்யனார் விஸ்வநாத் எழுதி, ஜெயமோகனின் தளத்தில் வெளியான கட்டுரை. படிக்கும் போது ரொம்பவும் லஜ்ஜையாக இருந்தது. இதை இங்கே பகிர வேண்டுமா என்று தயங்கினேன். ஆனாலும் என் எழுத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விஷயங்கள் என் எழுத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்றே இதைப் பகிர்கிறேன். ஜெ. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் ஆன்மீகத்தில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள். Activists. அவர்களது ஆன்மீகச் செய்திகளோடு கூடவே அவர்களின் வாழ்வும் ஒரு செய்தியாகத்தான் இருந்தது. வாழ்வை நீக்கி விட்டு அவர்களின் செய்தி இல்லை. ஜெயமோகன் ஒருமுறை எழுதியிருந்தார், சாரு தன் வாழ்வை முச்சந்தியில் விரித்து வைத்திருக்கிறார் என்று. (அதே வார்த்தைகள் ஞாபகம் இல்லை.) அதற்காக நான் ஓஷோவைப் போல் லட்சக்கணக்கானவர்களோடு நேரடியாக உரையாட முடியாது. என் களம் எழுத்து. ஆனாலும் என்னோடு நெருக்கமாகப் பழகிய நண்பர்கள் இப்படிச் சொல்வதிலிருந்து நீங்கள் என் வாழ்வையும் கலையையும் பிணைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அய்யனார் விஸ்வநாத்தின் தலைப்பை வெகுவாக ரசித்தேன். பொதுவாக எல்லோரும் கலையும் வாழ்வும் என்றே வைப்பார்கள். அய்யனார் வாழ்வும் கலையும் என்று சொல்கிறார். அது முக்கியம். நேற்று செல்வேந்திரனிடம் இது குறித்து பதினைந்து நிமிடம் பேசினேன். அதை மட்டும் நான் வாய்ஸ் மெஸேஜாக அனுப்பியிருந்தால் அது ஒரு ஆவணம்.
நான் சொர்க்கத்தில் இருந்தால் இசையும் மதுவும் என்று கொண்டாட ஆரம்பித்து விடுவேன். ஜெயமோகனுக்கு வாய்த்தது போன்ற சூழல் எனக்கு இருந்தால் ஒரு வாக்கியம் எழுத மாட்டேன். நரகம்தான் என் எழுத்தின் உந்துசக்தி. நரகம்தான் என்னை விடுதலையை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அந்தப் பெயரில் எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகமும் உண்டு. பூனைகளெல்லாம் நான் தூங்கும்போது என் கால்களையும் கைகளையும் வயிற்றையும் ஸ்பர்சித்தபடி என்னோடு கூடவே இரவு முழுவதும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தூங்குவதையும், காலை நாலரை மணி ஆனதும் அப்படி இப்படி நகர்ந்து சோம்பல் முறித்து என்னை எழுப்புவதையும், பத்தும் என் நிழலைப் போலவே தொடர்ந்து வருவதையும் போவதையும் பார்க்கும்போது இது நரகமா சொர்க்கமா என்ற சந்தேகமும் வருவதுண்டு. அதிலும் டெட்டி என் உடல் பொருள் ஆவி மூன்றின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது.
ஒருவர் கேட்கலாம், சங்கப் புலவனின் வாழ்வு பற்றி நமக்கு என்ன தெரியும், அவன் வாழ்வு தெரியாமலேயே அவன் எழுத்தை நாம் ரசிக்கவில்லையா என்று. அதற்கு என்னால் நேரடியான பதிலைத் தர முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளில் எழுத்து மாறி விட்டது. இப்போது என் வாழ்வே ஒரு பிரதியாக முன் நிற்கிறது. அதனால்தான் என் எழுத்து ஆட்டோஃபிக்ஷன் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. ஆம், என் வாழ்வும் என் எழுத்து போலவே ஒரு பிரதிதான். அதைத்தான் தன் அனுபவம் கொண்டு விளக்குகிறார் அய்யனார் விஸ்வநாத்.
லெபனானில் நான் இருந்தபோது புரட்சி வெடித்து விட்டது. அதுவும் நான் தங்கியிருந்த இடத்தில்தான். அங்கேதான் பாராளுமன்றம் இருந்தது. அதிலிருந்து தப்பிதான் துபாய் வந்தேன். துபாயில் நான்கு நாட்கள்தான் திட்டமிட்டிருந்தது. ஆனால் லெபனான் புரட்சி காரணமாக துபாயில் பத்து நாட்கள் தங்கினேன். பத்து நாட்களும் அய்யனாரையும் மற்ற நண்பர்களையும் சந்தித்தேன். சில தினங்களில் இரவு முழுவதும் பேசி விட்டு விடிகாலையில்தான் கலைவோம். அதுவும் ஆகாயமே கூரையாக ஒரு வெட்டவெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது சுலபத்தில் கிடைக்காத அற்புதம். அந்நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாது.
வாழ்வும் கலையும் பற்றி 1980களின் முற்பகுதியில் இலக்கிய வெளிவட்டம் என்ற சிறுபத்திரிகையில் ஒரு நீண்ட வாதப் பிரதிவாதம் நடந்தது. ஞானி, தமிழவன், நான் மூவரும் கலந்து கொண்ட விவாதம். என்னுடைய தாந்தேயின் சிறுத்தை என்ற நூலில் அந்த விவாதம் தொகுக்கப்பட்டுள்ளது.
சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும். அய்யனார் விஸ்வநாத் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)