குப்பை

ரேமண்ட் கார்வர் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையேயும் இலக்கிய வாசகர்களிடையேயும் ஒரு சூப்பர் ஸ்டார். நான் இதுவரை அவரைப் படித்ததில்லை. படிக்க விரும்பியதும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால் என்னோடு பிணைக்கப்பட்டால்தான் ஒரு எழுத்தாளனை வாசிக்க ஆரம்பிப்பேன். ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பிணைப்பு ஏற்பட வேண்டும். ஒரு இளம் தோழி – என் வாழ்விலே அப்படி ஒரு அழகியை அத்தனை அருகில் நான் கண்டதில்லை – முராகாமியோடு எனக்கு ஒருமுறையாவது படுக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்ன போது முராகாமியைப் படித்து விட வேண்டும் என்று இறங்கினேன். படித்தேன். அவர் எழுதிய முதல் நாவல் மட்டுமே ஈர்த்தது. மற்றவை ஈர்க்கவில்லை. அவரது சிறுகதைகளில் ஒன்றிரண்டு அபாரமாக இருந்தன.

ரேமண்ட் கார்வர் பற்றி அப்படி யாரும் இதுவரை சொன்னதில்லை என்பதால் அவர் எந்த ஊர், உயிரோடு இருக்கிறாரா என்று எதுவும் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பியதும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு புத்திஜீவிகளிடையே கார்வர் ரொம்பப் பிரபலம் என்பதை அறிந்திருக்கிறேன். வாஸ்தவம்தான். தமிழர்கள் வெளிநாட்டு மோகம் மிக்கவர்கள்.

நேற்று சீனி What we talk about when we talk about love? என்ற ஒரு குறுநாவலை அனுப்பியிருந்தார். எழுதியவர் ரேமண்ட் கார்வர். அதை அடிப்படையாக வைத்து – அல்லது தழுவி – சீனியும் ஒரு சிறிய நாவலை அனுப்பியிருந்தார். ”உண்மையான காதல் என்றால் என்ன?” என்பது சீனியின் நாவலின் தலைப்பு. தழுவல் என்று கூட சொல்ல முடியாது. கார்வரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ரேமண்ட் கார்வரின் எழுத்தை இனி ஒருபோதும் படிக்க மாட்டேன். காரணம், மேலே குறிப்பிட்ட கதை ஒரு குப்பை. அதை விட நல்ல கதைகள் தமிழில் 50 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு விட்டன. மேலும், இன்றைக்கும் கார்வரின் மேற்குறிப்பிட்ட கதையை விட சிறந்த கதையை எழுதும் 40 இளைஞர்கள் தமிழில் உண்டு. அந்தக் கதையைப் படித்ததை என் வாழ்வின் அவலம் என்று நினைக்கிறேன். எனக்கு அடிக்கடி பீக்கனவு வரும். பீக்கிடங்கில் மாட்டிக் கொண்ட மாதிரி ஒரு கனவு. அது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அம்மாதிரி இருந்தது அந்தக் கதை. உள்ளடக்கம் எல்லாம் பிரச்சினை இல்லை. கருத்து பிரச்சினை இல்லை. காமன்மேன்கள் பலர் ”சார், நான் ஒரு கதெ எழுதியிருக்கேன்” என்று சொல்லி நம்மிடம் காண்பிப்பார்களே அப்படி இருந்தது ரேமண்ட் கார்வரின் மேற்படி கதை. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வைக்கும் போட்டிகளுக்கு இம்மாதிரி கதைகள்தான் வரும். தினத்தந்தியில் கூட இதை விட நல்ல கதை வரும் என்று நினைக்கிறேன்.

சரி, சீனியின் கதையையாவது படிப்போம் என்று ஆரம்பித்தேன். கால்வாசிக்கு மேல் முடியவில்லை.

ஒரு கலைஞன் அல்லது ஒரு தேர்ந்த எழுத்தாளன் என்றால், இப்படிப்பட்ட குப்பைகளை ஒருபோதும் எழுத மாட்டான். இனிமேல் நான் ரேமண்ட் கார்வர் பக்கம் போவதற்கான எந்த சாத்தியமும் இல்லை.