துறவு

டியர் சாரு,

Rishi here.  பூச்சி அத்தியாயங்களை உங்களுக்கு அனுப்பி விட்டு படிக்க ஆரம்பித்தேன். நிறைய அத்தியாயங்களை நான் படிக்காமல் தவறவிட்டு விட்டது தெரிய வந்தது. பூச்சி 80ல் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபியான மன்ஸூர் அல்ஹலாஜ் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.  அவர் இந்தியத் தத்துவமும் சூஃபி தத்துவமும் ஒன்று என உணர்ந்தார் என்று வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த சிவவாக்கியர் பாடலும் வருகிறது.

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;

சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

நட்ட கல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!

ரிஷி

இதைப் படித்தவுடன் என்னுடைய பதினெட்டாவது வயதிற்கு என்னை எடுத்துச் சென்று விட்டது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்ல பணம் இல்லாததால் ஒரு ஃபாக்டரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். (அப்பன் ஒரு தறுதலை). அப்போதைய என்னுடைய ஒரே நண்பர் 45 வயதான ஒரு சித்த மருத்துவர். பெருங்களத்தூரில் இருக்கும் சதானந்தபுர மடத்தில் தங்கியிருந்தார். ஒரு சைக்கிள் வைத்திருந்தார். ஒவ்வொரு டீக்கடையாகப் போய் டீ குடித்துக்கொண்டே சித்தர்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். பதினெட்டு சித்தர்களின் வாழ்க்கை வரலாறு,  அவர்களின் அஷ்டமா சித்திகள் என்று அவர்களின் வாழ்க்கை எனக்கு சிலிர்ப்பூட்டியது  . ஜீவ சமாதி அடைந்தவர்களின் இடங்களுக்குப் போய் மணிக்கணக்கில் தியானத்தில் இருப்பேன். வீட்டில் என் அம்மா நான் சாமியாராகப் போய் விடுவேன் என்று பயந்து விட்டார். ..

பரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதையைப் படித்திருக்கிறேன். ஒரு முறை “வாசி யோகம்” பயில வேண்டும் என்று ஆசை. மூச்சை அடக்கி ஆழ கற்றுக் கொண்டால் சகலத்தையும் அடக்கி ஆளலாம். சித்த வைத்திய நண்பர் மூலம் ஒரு குருவை கண்டு பிடித்து குருதட்சணையும் கொடுத்தேன். வாசியோகம் எல்லாராலும் பயில முடியாது. அது எழுதி வைத்திருக்க வேண்டும் என்றார் . நாளையிலிருந்து கற்றுக் கொள்ள வருகிறேன் என்று சென்று விட்டேன். மறுநாள் போகவில்லை. அதற்குப் பிறகு அந்த பக்கமே போகவில்லை. ஏன் என்று என்ன யோசித்தும் புரியவில்லை. பின்னர் ஒரு Sponsor மூலம் மெட்றாஸ் க்றிஸ்டியன் காலேஜில் சேர்ந்தேன். அப்படியே எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. இவ்வளவும் இந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. ஆனால், இன்னுமே நான் ஒரு துறவியின் மனநிலையில்தான் உள்ளுக்குள் இருக்கிறேன் என்று தோன்றுகிறது. எதன் மீதும் யார் மீதும் எனக்கு எந்தப் பிடிப்பும் இருந்ததே இல்லை. இந்த வாழ்வு தரும் நெருக்கடி மற்றும் ஒரு துறவியின் மனநிலை, இரண்டிற்குமான மனப்போராட்டத்தைத்தான் என்னுடைய ஓவியத்தில் தீட்டிக்கொண்டிருக்கிறேன்.
Love you

ரிஷி