இந்தியத் தத்துவம் குறித்த ஒரு நூல்: ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்

என் நண்பர்கள் யாரேனும் பதிப்பகம் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னாலோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன் என்று சொன்னாலோ ரொம்ப வருத்தப்படுவேன். முன்னது, எல்லோரிடமிருந்தும் கல்லடி பட வேண்டும். முக்கியமாக, எழுத்தாளர்களிடமிருந்து. பணமும் கிடைக்காமல் மாடு மாதிரி உழைக்க வேண்டும். கெத்து மட்டும் இருக்கும். எனக்கு இந்த காரியத்துக்கு ஆகாத கெத்து பிடிக்காது.

திருமணம் ஒரே ஒருத்தரிடமிருந்து கல்லடி சொல்லடி செருப்படி எல்லாம் பட வேண்டும். ஆணோ பெண்ணோ ஒருத்தரின் கையில்தான் சவுக்கு இருப்பதை இதுவரை பார்த்திருக்கிறேன். சமமாக சௌஜன்யமாக வாழும் ஒரு தம்பதியைக் கூட இதுவரை கண்டதில்லை. இல்லியே, நாங்க ரொம்ப சொகமா இருக்கமே என்று சொல்லும் தடித் தாண்டவராயனின் வீட்டில் பார்த்தால் அம்மிணி அடிமைப்பட்டுக் கிடப்பாள். அவளை நீங்கள் பேட்டி கண்டால் ஐயோ என் கணவர் தெய்வம் என்பாள். சொல்லி விட்டு அவள் தனியாக அழும் அழுகை கடவுளுக்குத்தான் தெரியும்.

இப்போது என் நண்பர்கள் பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் என்ற நூல் வெளிவருகிறது. தேவிப் பிரஸாத் சட்டோபாத்யாய எழுதியது. இந்த நூல் ஒரு அவசியம். இதையெல்லாம் நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தேன். நீங்களும் படித்தே ஆக வேண்டும். இலவசமாகத் தருகிறார்கள். ஆம், 780 பக்க நூல் 350 ரூபாய்க்குத் தருகிறார்கள் என்றால் அது இலவசம்தானே? தயவு செய்து அந்த முந்நூற்று அம்பதுக்கும் கூட ஒரு டென் பர்ஸெண்ட் டிஸ்கவுண்ட் உண்டா என்று கேட்காதீர்கள்.

பதிப்பகத்தின் பெயர் ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங். (எந்த மஹானுபாவர் இந்தப் பெயரை வைத்தார் என்று தெரியவில்லை. நான் ஜெ. மாதிரி இல்லையா? இங்கே டிமாக்ரஸிதானே? அதனால் பெயரைப் பதிவு செய்து விட்டுத்தான் என்னிடம் சொன்னார்கள். சரி, வெயில், ஆசை என்றெல்லாம் கவிஞர்கள் பெயர் வைத்துக் கொண்டிருக்கும்போது இவர்கள் ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங் என்று பெயர் வைத்தால் என்ன என்று விட்டு விட்டேன். ரேமண்ட் கார்வர் என்ற ஒரு உருப்படாத எழுத்தாளரின் ஒரு உருப்படாத புத்தகத்தையும் போடுகிறார்கள் என்று கேள்வி.

பதிப்பகத்தின் தொடக்க விழா டிசம்பர் 16ஆம் தேதி இரவு பத்து மணிக்கு நடைபெறும். இப்போதைக்கு இந்தப் புத்தகத்துக்கு முன்பதிவு குவிய வேண்டும். இனி இந்தப் பதிப்பகத்தைச் சேர்ந்த வினித் இந்த விவரத்தைத் தெரிவிக்கிறார்:

சாரு நிவேதிதா அடிக்கடி சொல்வார். “தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ புத்தகத்தை வாசிக்காத ஒருவனை எழுத்தாளன் என்றே சொல்ல முடியாது.”சாரு அடிக்கடி சொல்வதால் உந்தப்பட்டு , இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம் என தேடினால் எங்கும் பிரதி இல்லை என்றே தெரிய வந்தது. வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதா? அல்லது இந்த நூலைப்பற்றி இளைய தலைமுறைக்குப் போதுமான அறிமுகம் இல்லாததா ? எது காரணம் எனத் தெரியவில்லை. சாரு நிவேதிதா வாசகர் வட்ட நண்பர்கள் இணைந்து பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்று பேச்சு வந்த போது , முதலில் நினைவுக்கு வந்தது இந்தப் புத்தகம் தான். கைவிடப்பட்ட புத்தகங்கள் , கவனத்தில் இருந்து மறைந்த முக்கியமான புத்தகங்கள் , தடை செய்யத்தக்க வகையில் இருக்கும் புத்தகங்கள் , வாசகர்களைக் கவர்ந்திழுத்து விற்பனையில் சாதனை செய்ய சாத்தியக்கூறு முற்றிலும் இல்லாத புத்தகங்கள் போன்றவற்றை பதிப்பிக்க முன்னுரிமை கொடுக்கலாம் என முடிவு செய்தோம்.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் இந்தப் புத்தகம் வாசிப்பில் ஆர்வம் உள்ள இளைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். இந்துத்வா என்ற பெயரில் இந்து மதத்தைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு பெரும் கூட்டம் வெறியுடன் உருவாகி வருகையில் இந்தப் புத்தகத்தின் தேவை இன்னும் அதிகமாகிறது .கைப்பேசியை ஒரு லட்சம் கொடுத்து வாங்கும் வாசிப்புப் பழக்கம் இல்லாத , அறிவுத் தேடல் இல்லாத இளைஞர் கூட்டம் ஒரு பக்கம். வாசிக்க ஆர்வம் இருந்தும் ,புத்தகம் வாங்க வசதியில்லாத இளைஞர் கூட்டம் ஒரு பக்கம் என கொஞ்சமும் சமநிலை இல்லாத ஒரு விசித்திரமான காலகட்டத்தில் இருக்கிறோம். சுமார் 800 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தை மக்கள் பதிப்பாக கொண்டு வரலாம் என திட்டமிட்டோம். அதனால் இந்தப் புத்தகத்தின் விலையை அனைவரும் வாங்கும் வண்ணம் ரூ 350 /- என எந்த லாப நோக்கும் இல்லாமல் நிர்ணயித்தோம்.

ஓரளவு வசதியுள்ளவர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிப்பில் ஆர்வம் கொண்ட , அறிவுத் தேடல் கொண்ட இளைஞர்களுக்கு பரிசளிக்க வேண்டுகிறோம். சமூக , அரசியல் அறிவற்று , வெறும் கேளிக்கை மற்றும் நுகர்வு சார்ந்து இருக்கும் பெரும் இளைஞர் கூட்டத்தை விமர்சிப்பது சுலபம். அவர்கள் இப்படி இருப்பதற்கு சூழலும், நாமும் ஒரு காரணம் என்பதை மூத்தவர்கள் உணர வேண்டும். பொதுவெளியில் இதைப்போன்ற புத்தகங்களை அறிமுகப்படுத்தாதது , கருத்து செறிவுள்ள உரையாடல்களை நிகழ்த்தாதது என இந்த சூழலுக்கு மூத்த அறிவுடையோர்களும் பொறுப்பாவார்கள். இந்தப் புத்தகத்தை பிரசுரிக்கலாம் என்றதும் , கரிச்சான் குஞ்சு மகளிடம் பேசி அனுமதி வாங்கிக்கொடுத்ததோடல்லாமல் , அற்புதமான முன்னுரையும் வழங்கிய அ.மார்க்ஸ் க்கு நன்றி தெரிவிப்பதென்பது ஒரு வறட்டு அலுவல் கடமை போல ஆகி விடும். ஆரம்பத்தில் இந்தப் புத்தகம் வெளிவர அ.மார்க்ஸ் எப்படி முக்கியமான உந்து சக்தியாக இருந்தாரோ , அதே போல இப்போதும் இந்தப் புத்தகம் வெளிவர முக்கியமான உந்து சக்தியாக இருப்பது யதேச்சையானது அல்ல.

இந்தப் புத்தகம் வெளிவரும் இந்த நேரத்தில் பொ.வேல்சாமி , இதை முதன்முதலில் வெளியிட்ட பாலாஜி புக்ஸ் மற்றும் மறு பிரசுரம் செய்த விடியல் பதிப்பகம் என அனைவரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறோம். இதை வெளியிட அனுமதி கொடுத்து , ஆர்வமுடன் உதவிய கரிச்சான் குஞ்சு அவர்களின் மகள்கள் விஜயா மற்றும் பிரபாவுக்கு எங்கள் நன்றியும் மரியாதையும். ஆட்டோ நேரேடிவ் பதிப்பகத்தின் தொடக்க விழா டிசம்பர் 16 அன்று கோவையில் நட்க்க இருக்கிறது. அந்த விழாவில் இந்தப் புத்தகம் வெளியிடப்படும். இந்தப் புத்தகத்தை எப்படி , எங்கே வாங்கலாம் என்பதை விரைவில் அறியத் தருகிறோம். நன்றி.

ஆட்டோ நேரேடிவ் பப்ளிஷிங்