சுமந்தலைதல் என்பது வேறு.. எடுத்துக் கொள்வது என்பது வேறு.விரும்பியவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டதற்கு காரணங்களை கற்பித்துக் கொண்டே ஒரு சித்தாந்தத்திற்குள் பிடிபட்டு, செக்கு மாடு போல அது சார்ந்தே சிந்திப்பதிலும், செயல்படுவதில் இருந்தும், ஒரு வாசகன் வெளிவர வேண்டுமானால், தமிழில் சாருவின் படைப்புகளை வாசிப்பதால் சாத்தியப்படும்.
நாற்பதாண்டு காலமாக தமிழில் வாசித்து வரும் எனக்கு, சாருவின் எழுத்துகள் அறிமுகமான போது தான், தொடர் வாசிப்பு மற்றும் பன்முக சிந்தனை குறித்த ஒரு தெளிவான பார்வை கிடைக்கத் தொடங்கியது.
மனித வாழ்க்கை ஒரு கட்டுக்கடங்காத சவாலான நீரோட்டம் போன்றது. அது குறித்த தேடல்களை, கற்பிக்கப்பட்ட அல்லது பொதுப்படுத்தப்பட்ட ஒற்றை இசத்துக்குள் இருந்து கொண்டு, அதற்குள்ளாகவே ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு, அந்த சுழலுக்குள்ளாகவே விடைதேடுதல் என்பது ஒரு கட்டத்தில் மிகுந்த அயற்சியையே அளிக்கும்.ஒரு கூட்டத்தில் தன்னை பாதுகாப்பாக ஒப்புக்கொடுத்து விட்டு, மற்றொரு கூட்டத்துடன் மோதி, காயப்படுத்தி, தப்பித்துக் கொள்ளல் என்பது விடுதலை அல்ல. அறிவுபூர்வமாக செயல்பட்டு, எல்லா உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பிறருக்குத் தீங்கிழைக்காமல் வாழும் மனநிலையை கடைபிடிப்பதே உண்மையான விடுதலை ஆகும்.
தத்துவத்திற்கும், போதனைகளுக்கும் உள்ள சூட்சம வித்தியாசங்களை கண்டுணர்தல் வேண்டும். பல தத்துவங்கள், இலகுவாக வளைக்கப்பட்ட ஒருசார்பு போதனைகளால் தோல்வி அடைந்த நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தத்துவங்களை புறக்கணித்தல் என்பதல்ல விடுதலை. தத்துவங்களில் உள்ள வாழ்வியல் சாத்தியக்கூறுகளை ஆராயத் துவங்கும் புள்ளியே, விடுதலைக்கான திறவுகோலை கண்டடையும் பாதைக்கான ஆரம்பமாகும்.
சாரு நிவேதிதாவின் ஒவ்வொரு படைப்பும் விடுதலையை ஆராதிக்கும் பெரும்பண்புகளை தன்னகத்தே உள்ளடக்கியது. அதற்காக சாரு இதுவரை தான் கற்றது, பெற்றது மற்றும் வாழ்வியல் சூழல்களால் தான் சந்தித்தவற்றை எல்லாம் ஆழ்ந்து நோக்கி, அவற்றின் நிறை குறைகளை வாசகனுக்கு கடத்துவதில் ஒரு தேர்ந்த ரசவாதி.சாருவின் பிரத்யேகமான Transgressive and Non-linear writing வகைமையிலான படைப்புகளை புரிந்து கொள்வதற்கு, வாசகனுக்கும் ஒரு நுட்பம் வேண்டும். சிலருக்கு அது சாத்தியப்படாததால், மேலோட்டமாக அவரது படைப்புகளை அணுகி, எல்லாவற்றிக்கும் எதிர்வினையாற்றி, அவரை எதிரி போல பாவித்து கொள்கின்றனர். அதனால் சாருவுக்கு ஏதும் நட்டமில்லை.
விளிம்பு நிலைக்கும் கீழாக வாழ்வோர் குறித்த உண்மைகள், மனிதர்களின் இருண்மை சார்ந்த தந்திரங்கள் மற்றும் கொடூரங்கள் குறித்தான தனது பார்வைகளை அப்பட்டமாக சாரு முன்வைக்கும் போது, ஒழுக்கவிதிகளை பெயரளவில் கட்டிக்கொண்டு அழுபவர்களுக்கு, பேரதிர்ச்சியாக தெரிகிறது.
ஏற்கனவே போதிக்கப்பட்டவற்றை கட்டுடைத்து, அதன் சாதக பாதகங்களை பன்முகப்பட்ட கோணங்களில் Non-linear ஆக எழுதுவது என்பது அரிய தவம் போன்றது. அதை சாரு எளிய மொழிநடையில் வெகு சுலபமாக சாதித்துக் கொண்டே வந்துள்ளார். ஆனால் அதற்காக அவர் இழந்தது ஏராளம்.தான் ஏற்கனவே கூறிய கருத்துக்கு முற்றிலும் முரணாக வேறொரு கருத்தை சாருவால் முன்னிலைப் படுத்த முடிகிறது என்றால், அது அவரது தனிப்பட்ட தடுமாற்றமோ தோல்வியோ அல்ல. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பெருவாரியான நடவடிக்கைகள் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டே இருப்பதால்தான், சாருவின் விடுதலை விரும்பும் மனதும் அவை சார்ந்து பிரதிபலிக்கிறது.தனது உடலையும் வாழ்க்கையையும் எழுத்துக்கு ஒப்புக்கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் சிரத்தையுடன் தொடர்ந்து தனக்கென ஒரு உலகளாவிய பார்வையுடன் எழுதிவரும் சாருவின் படைப்புகளை உள்வாங்கிக் கொண்ட எந்த ஒரு வாசகனும், சக மனிதன் தவறிழைக்கும் போது, அம்மனிதனை முற்றிலும் தண்டித்து வீழ்த்தாமல்… மாறாக அம்மனிதனிடம் அப்போதிருந்த மிருக குணத்தை மட்டுமே கண்டிக்க விழைவான். நானே அதற்கு சாட்சியாக வாழ்வதால், அந்தப் பெருமை முழுவதும் சாருவையே சாரும்.
சாருவின் படைப்புகளை தொடர்ந்து பல காலமாக வாசித்து வரும் போது, ஒரு நிலையில் மற்ற Linear Writings மேலுள்ள ஈர்ப்பு கணிசமாக குறைந்து விடும். விடுதலைக்கான மற்றுமொரு சாளரமாகத் தான் நான் இதை பார்க்கிறேன்.அடுத்தவரை காயப்படுத்தாத அன்பு, இனிமை, மகிழ்ச்சி, தனி மனித முக்கியத்துவம், கேளிக்கை, கொண்டாட்டம், விடுதலை போன்றவற்றை எல்லோரும் பெற வேண்டும் என்பதை சாருவின் படைப்புகள் பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றன.
உதிரிகளாக இருக்க விழைபவர்களும், உதிரிகளாக வாழ்வினை தகவமைத்துக் கொண்டவர்களும், பல புள்ளிகளில் சிந்தனையால் இணைவதற்கு, சாருவின் எழுத்து பாதை சமைத்து கொடுத்துள்ளது என்பதே உண்மை.உதிரியாகத் திரிவது என்பது ஏதோ ஒழுக்கக் கேடனாது அல்ல. சிந்தனையால் பிரிந்து, பொதுப்புத்தி கற்பிதங்களில் இருந்து விலகி, எல்லோரும் மகிழ்ச்சியுடனும், விடுதலை உணர்வுடனும் வாழ வேண்டும் என்ற பெரு வேண்டுதலில், உதிரியாக உலா வருவதாகும்.
சாருவின் படைப்புகளுக்கும், சாருவின் அன்புக்கும் எனது நன்றிகள்.தான் மறுத்த நாவலின் பெயரால் வழங்கப்படும் விருதினை, மாசற்ற அன்போடு ஏற்கவிருக்கும் தலைமை உதிரி சாரு நிவேதிதா என்ற என் ஞானத்தகப்பனுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.