இதற்கு முன் வந்த விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழைப் பார்த்திருப்பீர்கள். அதில் உள்ள என் புகைப்படம் பித்துக்குளி முருகதாஸ் மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. தோன்றியவுடனேயே நண்பர்கள் சிலரும் அதேபோல் அபிப்பிராயப்பட்டு எனக்குத் தெரிவித்தார்கள். அந்தப் புகைப்படத்தை அனுப்பியவனே நான்தான் என்பதால் கமுக்கமாக இருந்து விட்டேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் பார்த்தால் விழாக் குழுவினரே அழைப்பிதழை மாற்றி விட்டார்கள். இப்போதைய அழைப்பிதழ் பிரமாதமாக வந்துள்ளது. எனவே இதையே அழைப்பாகக் கொண்டு விழாவுக்கு வந்து விடுங்கள். முக்கியமாக இரண்டு விஷயங்கள். பதினெட்டாம் தேதி மதியம் இரண்டு மணிக்கு என் எழுத்து பற்றிய ஒரு கலந்துரையாடல் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ஜெயமோகன். அதை அடுத்து த அவ்ட்ஸைடர் என்ற ஆவணப்படமும் திரையிடப்படும். அந்தப் படத்துக்காக படத்தொகுப்பாளரும், கலரிஸ்டும், இசையமைப்பாளரும், இயக்குனரும் பத்து நாட்களாக ஒரு மணி நேரம் கூட உறங்காமல் இரவு பகலாக உழைத்தார்கள். இல்லாவிட்டால் படம் தயாராகி இருக்காது. எடிட்டிங் ரெடி எடிட்டிங் முடிந்து விட்டது என்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டார் எடிட்டர் லெனின். பல மாதங்களுக்கு முன்பே பணமும் வாங்கிக் கொண்டு விட்டார். கண்ணில்லாப் பிச்சைக்காரனிடம் திருடுவது போன்ற செயல் இது. யார் கேட்பது? மூச்சுக்கு முந்நூறு தடவை வாழ்க வளமுடன் என்று லெனின் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்படி நம்ப வைத்துக் கழுத்தை அறுப்பதுதான் வளமுடன் வாழும் லட்சணம் போல. சரி, இந்தக் கொண்டாட்டமான தருணத்தில் ரொம்பவும் எதிர்மறையாகப் பேசக் கூடாது. ஆவணப்படத்தைக் காண வந்து விடுங்கள். நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஆவணப்படம் திரையிடப்படும். கூட்டத்தில் என்ன பேசுவது என்று தெரியாமலேயே இருந்தேன். ஒரு பொருளைக் கொடுத்துப் பேசச் சொன்னால் நான்கு மணி நேரம் பேசுவேன். ஆனால் தலைப்பு இல்லாமல் என்ன பேசுவது என்று புரியாமல் இருந்தது. இன்று லட்சுமி சரவணக்குமார் கட்டுரையைப் படித்த போது எங்கிருந்து தொடங்குவது என்ற புள்ளி கிடைத்து விட்டது. லட்சுமிக்கு நன்றி.
சாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)