விஷ்ணுபுரம் விழா மேடையில் சாரு என் பெயரை சொல்லவில்லை என சில கமெண்டுகள்.
இந்த சில, பல ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த சின்ன பதிவு. அது ஒரு எர்ரர் (error)அவ்வளவுதான். இதை தமிழில் தவறு என்றோ தப்பு என்றோ எழுத முடியாது. வேறு அர்த்தம் கொடுத்து விடும். சாரு என் பெயரை இதுவரை தேவைக்கதிகமாக சொல்லி வந்திருக்கிறார். இந்த விழாவில் நன்றி தெரிவிக்கும் விதமாக பலரின் பெயரை சொன்னார். அந்த லிஸ்டில் என் பெயர் வந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அவுட்சைடர் படம் பற்றி ஓரிரு வரிகள் சொல்லி இருக்கலாம். சொல்லி இருந்தால் என் பெயர் வந்திருக்கும். சாருவுக்கு தூக்கமின்மை மற்றும் விழா பதட்டத்தால் விடுபட்டு விட்டது. அதனால் தான் எர்ரர் என்றேன்.
சாரு அடிக்கடி நான் இல்லையென்றால் , அவருக்கு வாழ்வே துன்பமயமாகி விடுகிறது , தண்ணீர் கூடக் கிடைப்பதில்லை என சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார். இதெல்லாம் ரூம் பாய் செய்யக்கூடிய வேலை. ஆனால் இந்த அடிப்படை ரூம் பாய் செய்யக்கூடிய வேலைகளைக் கூட அவருக்கு யாரும் செய்வதில்லை என்பதுதான் அவர் வாழ்வின் அவலம். மேடையில் அவுட்சைடர் படத்தைப் பற்றிச் சொல்ல முடியாமல் விடுபட்ட விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கடைசி நேரத்தில் ஒன்றுமே செய்யாமல் “பழைய” எடிட்டர் ஹார்ட் டிஸ்கை அப்படியே திரும்ப ஒப்படைத்து விட்டதால் (அதுவும் நான் கழுத்தில் கத்தி வைத்து – முடியுமா முடியாதா என வெளிப்படையாகக் கேட்ட பின்பு) கணேசன் அன்பு மூலம் அத்தியப்பன் சிவா இந்த ப்ராஜக்டுக்குள் வந்தார். கடைசி நேரத்தில் வந்தாலும் பசி உறக்கம் இன்றி ராப்பகலாக உழைத்தார். நாங்கள் எடுத்திருந்த ஃபுட்டேஜை பார்ப்பதற்கே அவருக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. ஆனால் “பழைய” எடிட்டர் கன்வர்சன் கூட போடாமல் வைத்திருந்ததால் , அதை முடிக்கவே அவருக்கு 3 தினங்கள் ஆனது. அதன் பின்பு அவரால் எல்லா ஃபுட்டேஜையும் பார்க்க இயலவில்லை. ஓரளவுக்குப் பார்த்து , என்னிடம் கேட்டுக்கொண்டு , ஒரு மாதிரி அலைன் செய்து வைத்து வைப்பதற்கே ஒரு வாரம் ஆகி விட்டது.ரஃப் கட் வெர்ஷன் பார்த்து திருத்தம் சொல்லி மீண்டும் எடிட் செய்ய ஒரு நாள் மட்டுமே கை வசம் இருந்தது. அதற்குள் அவரும் கணேசன் அன்புவும் கண்கள் பூத்து மயக்க நிலைக்கு சென்று விட்டனர். ஓரளவே கரக்ஷன் சொல்ல முடிந்தது. கணேசன் அன்பு எடிட்டருடன் இணைந்து செயல்பட்டார். கணேசன் அன்பு இல்லையெனில் இந்த அவுட் புட் கூட சாத்தியப்பட்டிருக்காது. தி அவுட்சைடர் இன்னும் யூ டியூபில் அப்லோட் செய்யப்படவில்லை. இன்னும் கொஞ்சம் விஷுவல்ஸ் சேர்த்து நான் நினைத்தபடி மீண்டும் எடிட் செய்து ஒரு மணி நேர படமாக செய்ய முடியுமா என கணேசன் அன்புவிடம் கேட்டிருக்கிறேன். அது முடிவானதும் இங்கே தெரிவிக்கிறேன்.
கடைசி நேரத்தில் இணைந்து கணேசன் அன்புவும் அத்தியப்பன் சிவாவும் செய்தது அசாத்தியமானது. அதனால்தான் அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவிக்க சாருவிடம் சொன்னேன். இதில் ஒரு சிறு எர்ரர் நடந்து விட்டது. இதுவும் தெரியாமல் நடந்ததுதான். இப்போதுதான் நானே உணர்கிறேன்.ஒளி யையும் மேடைக்கு அழைத்து கௌரவித்திருக்க வேண்டும். இது என் தவறுதான். என்ன இன்னும் ஓரிரு செகண்ட் தானே ! என்னை மேடைக்கு அழைப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது. எனக்கு எப்படி இது முதல் இயக்க அனுபவமோ அதே போலத்தான் ஒளிக்கும் இது முதல் ஒளிப்பதிவு அனுபவம். ஒளியின் ஒத்துழைப்பை வார்த்தையில் விளக்க முடியாது. படம் முழுக்க எந்த உதவியாளரும் இல்லாமல் வேலை பார்த்தார். மட்டுமல்லாமல் அதிகாலை , நள்ளிரவு என எப்போதும் சலிப்பில்லாமல் கேமரா உபகரணங்களைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவார். ஒரு முறை பாறையில் வழுக்கி விழுந்து எப்படியோ தன் உயிரையும் , கேமரா லென்ஸையும் காப்பாற்றினார். அதிலும் பேங்காக் , புக்கட் , கிராபி என உல்லாசமான இடங்களுக்குச் சென்று கொஞ்ச நேரம் கூட உல்லாசத்தில் ஈடுபடாமல் கேமராவும் கையுமாக , கண்ணும் கருத்துமாக இருப்பதை கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும்
ஒளிப்பதிவு பல இடங்களில் கிராண்டாக வந்திருப்பதை கவனித்தேன். வாழ்த்துகள் Oli Murugavelஅதே போல நாகூர் மற்றும் தஞ்சாவூர் பகுதியை எடுத்த Anbusathiyan Rangaraj அனுபவமிக்கவர். ரவிவர்மனிடம் அசோசியேட்டாக பணியாற்றியவர். இருந்தாலும் அனுபவமில்லாத நான் ஏதேனும் அமெச்சூராக சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்ம சங்கடமாக சிரித்துக்கொண்டு , அது முடியாது என பதமாகச் சொல்லி முடிந்ததை எடுப்பார். இசையமைப்பாளர் சத்ய நாராயணா தான் பாவம். கடைசி பலி ஆடு அவர்தான்
ஃபுட்டேஜை அவருக்கு அளித்தது டிசம்பர் 14 அதிகாலை 5 மணி . எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் ஞானி போல வேலை செய்தார். இதற்கே லைவ் ரெக்கார்டிங் வேறு இருந்தது. அவரும் மீண்டும் வேலை செய்ய வேண்டியிருக்கும். படத்தில் வேலை செய்த இவர்கள் அனைவருடனும் எந்த ஈகோவும் இல்லாமல் நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போல வேலை செய்ய முடிந்தது. நாங்கள் திட்டமிடாமல் இல்லை. திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே எங்கள் பணிகள் முடிந்தன. கிட்டத்தட்ட 2 மாதங்களை “பழைய” எடிட்டர் வீணடித்தார். பொறுப்பற்றத்தனத்தின் உச்சகட்டமாக இதைப் பார்க்கிறேன். இந்த விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் பண்ணை வீட்டில் வைத்து இரவு 11 மணிக்கு என் புத்தக வெளியீடு நடந்தது. அதில் என் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து சாரு அற்புதமான ஒரு உரை நிகழ்த்தியிருப்பார். அதை விரைவில் அப்லோட் செய்கிறேன். அவுட்சைடர் , ஒரு கூட்டு முயற்சி. அதில் சாருவை நேசிக்கும் பலரின் உழைப்பு இருக்கிறது. உழைப்பு மட்டுமல்லாமல் அன்பையும் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். நான் விரும்பியபடியான ஒரு வெர்ஷனை விரைவில் அளிக்க முயல்கிறேன். அது ஒரு மணி நேரமோ ஒன்றரை மணி நேரமோ கூட இருக்கலாம்.
அராத்து