விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 2

2.

விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரையும் அல்லது தெரிந்தவர்களை மட்டுமாவது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவில் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் நடந்தது என்னவென்றால், எனக்கும் நேரமில்லை.  அவர்களுக்கும் நேரமில்லை.  அரங்கா, காளி ப்ரஸாத், செல்வேந்திரன், மீனாம்பிகை, செந்தில் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஹலோ சொல்லத்தான் நேரமிருந்தது.  அஜிதனோடு நீண்ட நேரம் பேசலாம் என்று இருந்தேன்.  கை குலுக்கியதோடு சரி.  வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கண் விழித்ததால் காலையில் எட்டு மணிக்கு அரக்கப்பரக்க எழுந்து விஷ்ணுபுரம் விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அதே வேகத்தோடு திரும்பி அறைக்கு வந்தேன்.  ஓட்டலின் வரவேற்பாளர்கள்தான் மோசமே தவிர உள்ளே வசதிக்குக் குறைவே இல்லை. 

மதிய உணவுக்கு எது நல்ல இடம் என்று செந்திலிடம் கேட்டிருந்தேன். ஐகான் ஓட்டலுக்கு அருகிலேயே மூகாம்பிகை மெஸ் என்று சொல்லியிருந்தார்.  கேரளா மெஸ்.  எனக்குக் கேரளத்து உனக்கலரியும் கேரளத்து மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம்.  மூகாம்பிகை மெஸ் முதல் தரம்.  இனி கோவை சென்றால், மூகாம்பிகை மெஸ்ஸில்தான் சாப்பாடு.  சாப்பிட்டு விட்டு வந்து தூங்கி விட்டேன். 

மாலையில் நண்பர்கள் வந்தார்கள்.  பிறகு குமரேசனுடன் மனோகரன் மாசாணத்தின் அலுவலகத்துக்குப் போய் விட்டேன்.  இன்னொரு அறையில் கணேஷும் அத்தியப்பன் சிவாவும் படத்தொகுப்பு வேலையில் மும்முரமாக இருந்தார்கள்.  மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தோம்.  அராத்து, செல்வகுமார், குமரேசன், ஒளி முருகவேள், வினித், மற்றும் பல நண்பர்கள்.

இரவு இரண்டு மணி அளவில் கிளம்பி அறைக்கு வந்தேன்.  ஞாயிறு காலையில் எழுந்து நண்பர் ரமேஷின் நாகர்கோவில் ஆரியபவனில் சிற்றுண்டி.  ராம்ஜியுடனும் காயத்ரியுடனும்.    திரும்பி வந்து நண்பர்களுடன் சந்திப்பு.  பிறகு மதியம் பழையபடியே ராஜஸ்தான் பவன் சென்றேன்.  கேள்வி பதில் அமர்வு.  பொதுவாக கேள்வி பதில் அமர்வு என்றால் எனக்குப் பதற்றம் தொற்றி விடும். முதல் கேள்வியே எழுத்தாளரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, எழுத்தாளனைக் கோபப்பட வைத்து அந்த சூழலையே நச்சு வாயு சூழ்ந்தது போல் ஆக்கி, அந்த சந்திப்பே நடக்காமல் குலைத்து விடுவார்கள்.  என்னுடைய இலக்கிய சந்திப்புகள் அனைத்துமே அப்படித்தான் ஆகியிருக்கின்றன.  அமைப்பாளர்களோ அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்களோ இதற்கு எந்த வகையிலும் காரணமாக இருக்க மாட்டார்கள்.  எவனோ ஒரு லும்பன் சொல்லை விட்டு எறிவான். தொலைந்தது சந்திப்பு.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கூட்டத்தில் பேசினேன்.  அந்த எழுத்தாளரின் முதல் புத்தகம்.  அந்த விழாவுக்கு வந்து இரண்டு கவிஞர்கள் அங்கே செய்த கலாட்டாவை என் வாழ்நாளில் மறக்க முடியாது.  இப்போதும் அம்மாதிரி லும்பன்கள் பலர் என்னைத் தேடி அலைவதால் என்னை மீறி அடிதடி ஏற்பட்டால் சமாளிப்பதற்காக இரண்டு பௌன்ஸர்களோடு சென்றிருந்தேன்.  அருண் பாண்டியன், வினித். 

இது பற்றி யோகா குரு சௌந்தரிடம் ஆலோசனை செய்தேன்.  என்ன செய்தாலும் கோபமடைய மாட்டேன், என் எழுத்தை அவமதித்தால் கடும் சீற்றத்துக்கு உள்ளாகிறேன்.  மூன்று மந்திரங்களையும் சில யோகப் பயிற்சிகளையும் கற்பித்திருக்கிறார்.  செய்து கொண்டிருக்கிறேன்.

விஷ்ணுபும் வாசகர் வட்ட நண்பர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாகவும், கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகவே கேள்வி பதில் அமர்வு மிகவும் கட்டுக்கோப்புடன் நடந்து வருவதாகவும் அறிந்தேன்.  மிக ஒழுங்காக நடந்து முடிந்தது கேள்வி பதில் அமர்வு.  சில கேள்விகளே எனக்குப் புரியவில்லை.  குறிப்பாக கடைசி இரண்டு கேள்விகள்.  அந்தக் கேள்விகளை நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்தால் பதில் கூற முயல்கிறேன். 

கேள்வி பதில் அமர்வு முடிந்ததும் நண்பர் ஒருவர் தன் அறைக்கு அழைத்தார்.  சென்னை நண்பர் என்பதால் அங்கே ராஜஸ்தானி பவனுக்கு அருகிலேயே அறை போட்டிருப்பார் என்று நினைத்தேன்.  நண்பரும் அறை மிக அருகில்தான் இருப்பதாகச் சொன்னார்.  காரும் வந்தது.  இங்கே இதை வாசிப்பவர்கள் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.  நண்பர்கள் எது சொன்னாலும் கேட்பவன் நான்.  யோசிக்கவே மாட்டேன். 

காரில் நானும் நண்பரும் பௌன்ஸர் நண்பர் அருண் பாண்டியனும் ஏறினோம்.  இன்னொரு பௌன்ஸர் வினித்துக்குக் காரில் இடம் இல்லை.  கார் கிளம்பியது.  ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர்.  கார் போய்க் கொண்டே இருந்தது. அறை வரவில்லை.  மட்டுமல்லாமல் அது ஒரு நெடுஞ்சாலை மாதிரி இருந்தது.  அதோடு ஓட்டுநருக்கும் அறை எங்கே என்று தெரியவில்லை.  என் நண்பருக்கும் தெரியவில்லை.  யார் யாருக்கோ ஃபோன் செய்தார்கள்.  கார் போய்க் கொண்டே இருந்தது.  என் அறை – ஐகான் ஓட்டல் ராஜஸ்தான் சங்கத்துக்கு அடுத்த தெருவில் உள்ளது.  ஒன்றரை நிமிடம் ஆகும்.  இங்கேயோ கார் போய்க் கொண்டே இருக்கிறது.

எனக்கு முந்தின இரண்டு இரவுகளுமே தூக்கம் இல்லாத்தால் வயிறு கடாமுடா என்று இரைச்சல் இடுகிறது.  உடனடியாகக் கழிப்பறை போக வேண்டும்.  அப்போது வேளாண் பல்கலைக்கழகக் கட்டிடங்கள் தென்பட்டன.  கெஸ்ட் ஹவுஸ் எங்கே இருக்கிறது என்று ஃபோன்கள் பறந்து கொண்டிருந்தன.  அருண் பாண்டியன் பார்வையில் இடது பக்கம் இருந்த கெஸ்ட் ஹவுஸ் தென்பட அவர் அதை சற்று சப்தமாகச் சொன்னார்.  என் நண்பர் தன் நண்பருக்கு ஃபோன் போட்டார்.  ஓட்டுநர் கெஸ்ட் ஹவுஸ் இருந்த இடது பக்கம் திரும்பலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்த போது ஒருவர் இரு சக்கர வாகனத்தில் காரின் முன்னே மோதுவது போல் வந்து கை காண்பித்தார்.  ஓ, அவர்தான் எங்களை வேளாண் பல்கலை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் செல்லப் போகிறார்.  அவர் எங்களை வலது பக்கம் அழைத்துப் போனார்.  அது ஒரு வனம் மாதிரி இருந்தது.  அங்கே ஒரு கெஸ்ட் ஹவுஸும் இருந்தது.  அங்கே இருந்த அரசு அதிகாரிகளும் ஊழியர்களும், “ஹி ஹி, சார் வர்றது முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரெடி பண்ணியிருக்கலாம்” என்றார்கள். 

அதற்குள் ஏசியைப் போடு ஏசியைப் போடு என்ற அதிகாரக் குரல்கள் பறந்தன.  நான் நேராகக் கழிப்பறைக்கு ஓடினேன்.  அந்த கெஸ்ட் ஹவுஸில் கெஸ்ட் தங்கியே ஆறு மாதம் இருக்கும் போல் தோன்றியது. 

வயிறு சுத்தமானதும் பார்த்தால் ஃப்ளஷ் அவுட்டின் அருகில் தண்ணீர் வரும் ட்யூபில் தண்ணீர் இல்லை.  தேடிப் பார்த்ததில் அங்கே இருந்த ஒரு பிளாஸ்டிக் வாளியில் அரை வாளி தண்ணீர் இருந்தது.  அதையே பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொண்டேன்.  பிறகு வாஷ் பேசின் அருகே வந்து அங்கே இருந்த ஹேண்ட் வாஷ் புட்டியிலிருந்து திரவம் என் கைக்கு வருமாறு அழுத்தினேன்.  பாட்டிலில் எந்த இயக்கமும் இல்லாததால் மூடியையே திறந்து லோஷனைக் கையில் சாய்த்தேன்.  கொஞ்சம் அஜாக்கிரதையாக சாய்த்ததால் பாதி பாட்டில் திரவம் கையில் கொட்டி விட்டது.  கிட்டத்தட்ட ஒரு வாளி தண்ணீர் இருந்தால்தான் அவ்வளவு கொழகொழப்பையும் கையிலிருந்து நீக்க முடியும்.  திரும்பவும் வந்து வாளியில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தேன்.  அடியில் கொஞ்சூண்டு இருந்தது.  அதில் கையை விட்டு முடிந்த வரை கழுவிவிட்டு என் பாக்கெட்டில் வைத்திருந்த கர்ச்சீஃபை எடுத்து நன்றாகத் துடைத்துக் கொண்டேன். 

வெளியே வந்து அங்கே இருந்த ஒரு துண்டை எடுத்து அதிலும் துடைத்தேன். 

காஃபி வந்தது.  திரும்பும் போது நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன்.  அட்டா, நீங்கள் மோட்டார் போடச் சொல்லியிருக்கலாமே சார் என்றார். 

ஆஹா, எனக்கு அது தோணவே இல்லியே என்றேன்.

அரங்கத்தில் ஆவணப் படம். 

படம் முடிந்ததும் திரையை அகற்றி விட்டு மேடையில் நாற்காலிகள் போடப்பட்டன.  அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது, கையில் உள்ள கொழகொழப்பு என்னதான் கர்ச்சீஃப் மூலம் துடைத்தும், துண்டு மூலம் துடைத்தும் போகவில்லை.  இப்போது அந்தக் கொழகொழப்புக் கையோடுதான் மமங் தய், ஜெயமோகன், போகன் சங்கர், காளி ப்ரஸாத் மற்றும் எல்லோருக்கும் கை கொடுக்க வேண்டுமா?  ஏற்கனவே டார்ச்சர் கோவிந்தன் “எதிரிகளின் பாசறைக்குச் சென்றிருக்கிறீர்கள், கெட்ட பேர் எடுத்து விடாதீர்கள்” என்று கடுமையாக எச்சரித்திருந்தார். 

வினித்திடம் கழிப்பறை எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.  கீழே என்றார்.  ஐயோ கீழேயா, மீண்டும் ஒருமுறை படி ஏறுவது கஷ்டம் ஆயிற்றே?  ஒரு வாரமாக சரியாக உறங்காததால் உடம்பு கொஞ்சம் தினுசாக இருந்தது.  இருந்தாலும் டார்ச்சர் கோவிந்தன் சொன்னபடி நல்ல பேர் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வினித்துடன் கீழே நடந்தேன்.  அங்கே போய் கையை நன்றாகக் கழுவிக் கொண்டிருக்கும்போதே வினித், “சாரு, உங்களை மேடையில் அழைக்கிறார்கள், ஜல்தி, ஜல்தி” என்று கத்தினார்.  நல்லவேளையாக அங்கே லிஃப்ட் இருந்தது, பிழைத்தேன்.  இல்லாவிட்டால் சாரு எப்போதும் தாமதமாகத்தான் வருவார் என்ற கெட்ட பேர் ஏற்பட்டிருக்கும்.

***

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி.  நான் கோவையில் இருந்த போது என்னை சிறந்த முறையில் கவனித்துக் கொண்ட விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.