செல்வேந்திரனிடம் சொல்லியிருந்தேன், அவ்ட்ஸைடர் படத்தின் படத்தொகுப்பாளரையும் கலரிஸ்டாகவும் மற்றபடி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த கணேஷ் அன்புவையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று. அதிலும் இசையமைப்பாளர் சத்ய நாராயணனை மறந்து விட்டேன். இன்னொரு முக்கியஸ்தரையும் மறந்து போனேன். ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள். ஒளியிடம் எனக்குப் பிடித்தது கொஞ்சம் கூட ஆணவமோ அகங்காரமோ இல்லாதது. அவரை மேடைக்கு அழைக்கவில்லை. நேற்று அவரைத் தொலைபேசியில் அழைத்து அது பற்றி என் வருத்தத்தைத் தெரிவித்த போது அவர் பெரிதும் ஆச்சரியமே அடைந்தார். இதெல்லாம் ஒரு விஷயமா என்றார்.
அவ்ட்ஸைடருக்காக அருவியிலிருந்து படம் எடுத்தபோது அவர் மேலேயிருந்து விழத் தெரிந்தார். (நான் எழுதிய புத்தகங்கள் அருவியின் நீரில் மிதந்து போகும் காட்சி) சமாளித்ததால் உயிர் பிழைத்தார். அஞ்சு லட்சம் ரூபாய் கேமராவும் விழுந்து விட்டது. பாறையில் அது விழுந்த தருணத்தில் அதன் அடியில் கையை வைத்ததால் லென்ஸ் பிழைத்தது.
தாய்லாந்து முழுவதும் உதவியாளர்கள் கூட இல்லாமல் கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைந்தார் ஒளி முருகவேள். நாங்களெல்லாம் பப்பில் குடித்து விட்டு ஆடிக் கொண்டிருக்கும்போதும் அக்காட்சிகளைப் படமெடுத்துக் கொண்டிருப்பார். காடு, மலை, கடல், தீவு என்று பயங்கரமாக அலைந்தோம். அங்கெல்லாம் தன் கனமான கேமராவோடுதான் அலைந்தார் ஒளி. தாய்லாந்து தீவுகளில் கடுமையான மழை வேறு. அந்த மழையில் நனையாமல் கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும். எல்லாம் செய்தார். அப்படித்தான் ஒருநாள் க்ராபி என்ற தீவுக்குப் போனோம். இதெல்லாம் சுற்றுலாப் பயணிகளே அதிகம் வராத தீவுகள். விபச்சாரம் போன்ற எதுவும் இல்லாத, இயற்கையை மட்டுமே ரசிக்கக் கூடிய பயணிகள் – அதுவும் மிகச் சிலர்தான் – வந்து போகும் தீவுகள். நுகர்வுக் கலாச்சாரம் எட்டிப் பார்க்காத தீவுகள். அந்த க்ராபி தீவுக்கு நாங்கள் படகில் சென்ற போது – அந்த அனுபவத்தை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது – அதையுமே படம் எடுத்தார் ஒளி. படகின் ஒரு பகுதி திறந்திருந்தது. ஒரு பகுதிதான் மூடிய அறை. நாங்கள் திறந்த பகுதியில் அமர்ந்திருந்தோம்.
க்ராபி வந்ததும் இறங்கினோம். பேய் மழை அடித்துக் கொண்டிருந்தது. மாலை ஐந்தோ ஆறோ இருக்கும். எல்லோரும் முழுக்க நனைந்து தொப்பல் தொப்பலாக இருந்தோம். குளிர் நடுக்கியது. ஒளி மட்டும் கேமராவை ஒரு பெரிய போர்வையால் போர்த்திக் கொண்டிருந்தார். எங்கள் படகு மட்டும் வரவில்லை. கடல்கரையில் ஒதுங்கக் கூட இடம் இல்லை. நீண்ட நேரம் மழையில் நனைந்த பிறகுதான் தெரிந்தது, நாங்கள் செல்ல வேண்டிய க்ராபி இது இல்லை. அது வேறு க்ராபி. அங்கே போக ஒரு படகு அமர்த்த வேண்டும். நாங்கள் நாலு பேர்தான் என்பதால் கட்டணம் அதிகமாக இருந்தது. அப்படி ஒன்றும் சென்னை ஆட்டோ மாதிரி வழிப்பறிக் கொள்ளை இல்லை. நாங்கள் செல்ல வேண்டிய க்ராபி மனித நடமாட்டமே இல்லாத தீவு. அங்கே ஒரு ஐம்பது பேர் இருந்தால் பெரிது. நாங்கள் பதிவு செய்திருந்த விடுதியே படகை அனுப்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் சொன்னது 400 பாட். இந்தப் படகுக்காரர்கள் கேட்டது 500. இந்தியாவாக இருந்திருந்தால் 5000 பாட் கேட்டிருப்பார்கள். லெபனான் என்றால் 20,000 பாட். நம்மூர் பிக்பாக்கெட் என்றால் லெபனான் வங்கிக் கொள்ளை. இப்படித்தான் எங்களோடு கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைந்தார் ஒளி.
இன்று ஃபேஸ்புக்கில் ஒளி முருகவேள் எழுதியிருந்த பதிவு இது:
அராத்து சொன்னதுபோல இது உண்மையில் எனக்கு முதல் ஒளிப்பதிவு அனுபவம். நான் செய்யக்கூடிய ஒன்றாக நான் சொல்லிக்கொள்வது Travel Photography மட்டும்தான். அதுவும் ஒருமாதிரியான அரைகுறையான absurd abstract photographyதான். ‘மனிதர்களை எனக்குப் படம் பிடிக்கத் தெரியாது’ என்று முதலிலேயே அவரிடம் சொல்லிவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் என் புகைப்படங்களைக் கூட சாருவும் அராத்துவும் பார்த்ததில்லை. எனக்கும் இலக்கிய வாசிப்பு எதுவும் பெரிதாக இருக்கவில்லை. ஏதோ என் மீதிருந்த ஒரு ஆழ்ந்த நம்பிக்கையில் இருவரும் ‘நீங்க பண்ணுங்க ஒளி’ என்றனர்.
அன்று இரவு முழுதும் நான் தூங்கவில்லை. என்னடா இது, நம்மை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து விட்டார்கள்? நாம் ஒன்றும் அவ்வளவு அனுபவம் மிக்க ஆள் இல்லையே என்று பெனாத்திக்கொண்டே இருந்தேன். அதுபோன்ற நேரங்களில்தான் சாருவின் எழுத்தும் அராத்துவின் எழுத்தும் உதவிக்கு வந்தன. எனக்கிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கியது. அவர்களின் எழுத்து எனக்குக் கொடுத்த தன்னம்பிக்கை மிக மிக அபூர்வமானது. அதுவும் என்னைப் போன்ற intensely introverted மனிதர்களுக்கு சாரு மற்றும் அராத்துவின் எழுத்து ஒரு தெரப்பி என்றே சொல்லவேண்டும்.
என்னுடைய உழைப்பை பலர் பாராட்டுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. ஆனால் உள்ளிருந்து என்னை இயக்கியது சாரு மற்றும் அராத்து இருவரின் எழுத்து மட்டுமே. படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது கூட பயந்துகொண்டேதான் எடுத்தேன். அராத்து சொல்வார்; நான் செய்வேன். நடுவில் ஆங்காங்கே என் அனுபவமின்மை எட்டிப்பார்த்துவிடும். அதை… ‘ஆங்.. இது நல்லார்க்கு ஒளி’ என்று தட்டிக்கொடுப்பார். விடிய விடிய சாருவும் அராத்துவும் பேசுவதை பக்கத்தில் அமர்ந்து கேட்டாலே போதும், ஒரு மனிதனுக்கு பயம் நீங்கி creativity பொங்கிக்கொண்டு வந்துவிடும். அதுபோன்ற பல இரவுகளில் நான் கற்றதே த அவ்ட்ஸைடர் படத்தில் பிரதிபலிக்கிறது.
கணேசன் அன்புவும் அத்தியப்பன் சிவாவும் செய்தது ஒரு சாதனை. நினைத்துப்பாருங்கள். அனுபவமில்லாத ஒருத்தன் ஒளிப்பதிவு செய்ததை நேர்த்தியாகக் கோர்த்து சலிப்புத்தட்டாத ஒரு படமாக்கவேண்டும். நினைத்தால் எனக்கே திகிலாக இருக்கிறது. அதனாலேயே எடிட்டிங் எப்படி நடக்கிறது என்று நான் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. Footageஐ பார்த்துவிட்டு எடிட்டர் என்ன நினைத்தாரோ யாருக்குத் தெரியும்? ‘ஒளிப்பதிவு செஞ்சவன் கைல கெடச்சா வெளுக்கணும்’ என்றுதான் நினைத்திருப்பார். விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் கணேசன் அன்புவை பார்த்துக் கேட்டேன். ‘படம் எப்படி வந்திருக்கு?’
‘தாய்லாந்து song ஒண்ணு கட் பண்ணியிருக்கோம். பாருங்க’ என்று சஸ்பென்ஸ் வைத்தார். முந்தின நாள் இரவு போட்டுக்காண்பித்த பொழுது இவையெல்லாம் நான் எடுத்ததா என்று வியக்கும் அளவிற்கு cuts இருந்தன. இசையுடன் பார்த்தபொழுது ‘இத வேற எவனோ எடுத்திருக்கான். நாம தாய்லாந்து போனதெல்லாம் கனவுதான்’ என வார்த்தையே இல்லாமல் மெளனமாக இருந்துவிட்டேன். பல நாட்கள் கழித்து அன்று இரவுதான் ஆழ்ந்து உறங்கினேன். விழாவில் படம் ஓடும் பொழுது சிலைபோல் நின்றிருந்தேன். படம் முடிந்த பிறகு பலர் வந்து கட்டியணைத்துப் பாராட்டினர். அனைத்து பாராட்டுகளும் அராத்து, கணேசன் அன்பு மற்றும் அத்தியப்பன் சிவாவுக்கு மட்டுமே உரியது.
சாரு மற்றும் அராத்துவின் எழுத்தும் அவர்களுடனான பயணங்களும் ஒரு உயர்ந்த பல்கலைக்கழகத்தில் சென்று தேர்ச்சிபெறுவதற்கு சமமானது.
மேடையில் என்னை அழைத்து கௌரவிக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. சாருவுடனும் அராத்துவுடனும் அவர்களின் வாசகர் வட்ட நண்பர்களுடனும் இருப்பதும் இயங்குவதுமே ஒரு பெரிய கௌரவம்தான்.
***
மேற்கண்ட பதிவிலிருந்தே ஒளி முருகவேள் எப்படிப்பட்ட மனிதர் என்று தெரிந்திருக்கும். ஒரே ஒரு விஷயம் முக்கியமானது. எப்படி ஒளி “அராத்து சொன்னார், நான் செய்தேன்” என்று சொல்லியிருக்கிறாரோ அதேதான் படத்தொகுப்பிலும் நடந்தது. ஏதோ ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனைப் போல் அராத்து ஒளியிடம் அப்படிச் செய்யுங்கள், இப்படி நில்லுங்கள், இந்தக் கோணம் வேண்டாம், அந்தக் கோணம் ஓக்கே என்று சொல்லிக் கொண்டே இருப்பார். வேறு ஒளிப்பதிவாளராக இருந்தால் “இல்லிங்க அராத்து, அது நல்லாருக்காது” என்று சொல்ல அவருக்கும் அராத்துவுக்கும் பெரிய பிரச்சினைகள் வந்திருக்கும்.
(உதாரணமாக, லெனின் அனுப்பிய ஒரு ஒளிப்பதிவாளர் என்னையும் அராத்துவையும் கொடூரமாக டார்ச்சர் பண்ணி விட்டார். பேச ஆரம்பித்தால் குறைந்தது ரெண்டு மணி நேரத்துக்கு வாய் மூடாது. மட்டுமல்லாமல், அந்த ஆள் மாதிரி ஒரு முழு மூடனை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. என் வீட்டுக்கு வந்து என் நூலகத்தைப் பார்த்த்தும், நானும் படிப்பேன் சார், உங்களிடம் சாண்டில்யன் புக் இருக்கா என்று கேட்டார். அவரைப் பற்றித் தனியாக ஒரு கதை எழுதலாம் என்று இருக்கிறேன். இப்போது வேண்டாம்.)
ஒளி முருகவேள் அராத்து சொன்னதைச் செய்தார். பட்த்தொகுப்பு வேலையிலும் அராத்துதான் தனக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அதைத் தொகுப்பாளர் கொடுத்தார்.
ஆனால்,
எடிட்டர் லெனின் செய்த ஏமாற்றுவேலையின் காரணமாக டிசம்பர் பத்து தேதி வாக்கில்தான் படத்தொகுப்பு, கலரிங் எல்லா வேலைகளுமே ஆரம்பித்தன. ஏற்கனவே எழுதியிருக்கிறேன். லெனின் படத்தொகுப்பை முடித்து நவம்பர் பதினைந்தாம் தேதியே கொடுத்து விடுவதாகச் சொல்லியிருந்தார். அதற்காக முப்பதாயிரம் ரூபாய் பணமும் வாங்கி விட்டார். அக்டோபர் இறுதியிலிருந்தே நான் நினைவூட்டினேன். பதினைந்தாம் தேதி முழுசாக்க் கிடைத்து விடும் என்று உறுதியளித்தார். ஆனால் நவம்பர் பத்தாம் தேதியிலிருந்தே லெனின் எங்கள் ஃபோனை எடுக்கவில்லை. லெனின் ஏற்கும் வேலை அனைத்தையும் அவருடைய உதவியாளர்தான் செய்கிறார். லெனின் அல்ல. அந்த உதவியைத் தொடர்பு கொண்டால் சார் சொன்னால் செய்கிறேன் என்கிறார். சாரையோ தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
உடம்புக்கெல்லாம் ஒரு கேடும் இல்லை. நன்றாகத்தான் பூனே ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் லெனின். ஆனாலும் எங்களோடு பேசுவதைத் தவிர்த்தார்.
கடைசியில் அவரிடம் கொடுத்த ஃபுட்டேஜையே மிரட்டித்தான் திரும்ப வாங்க வேண்டியிருந்தது. டிசம்பர் பத்தில் ஆரம்பித்து பதினெட்டு வரை அராத்து, அத்தியப்பன் சிவா, கணேசன் அன்பு யாரும் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. அதற்குப் பிறகு இசையமைப்பாளர் சத்ய நாராயணன் வருகிறார். இதில் அராத்து பேசிக் கொண்டிருக்கும்போதே சத்யா மயக்கமடித்து விழுந்து விடுகிறார். அந்த அளவுக்கு உறக்கமின்றி வேலை செய்திருக்கிறார்கள்.
இது ஒரு உலக சாதனை. பத்து மணி நேரம் ஓடும் படத்தை முக்கால் மணி நேரமாகத் தொகுத்திருக்கிறார்கள். அராத்து சொன்னதைச் செய்ய ஒரு குழு இருந்தது. அப்படியில்லாமல் ஆள் ஆளுக்குத் தங்கள் வேலைத்திறமையைக் காண்பித்துக் கொண்டிருந்தால் படம் வந்திருக்காது.
நான் நினைத்துக் கொண்டிருந்தேன், நான் பார்த்த ஒரு நூறு உலக சினிமாவைப் பார்க்காமல் யாராலும் படம் பண்ண முடியாது என்று. அந்த நூறில் ஒன்றைக் கூட அராத்து பார்த்ததில்லை. ஆனாலும் ஒளிப்பதிவாளரிடமும் படத்தொகுப்பாளரிடமும் இசையமைப்பாளரிடமும் தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார் அராத்து. அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.
இதுபோல் பணியாற்றும் ஒரே ஒருவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன். மிஷ்கின் தனக்கு வேண்டியதைத்தான் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் மூவரிடமும் வாங்குவார். அந்த மூவரும் தனிப்பட்ட முறையில் மிஷ்கின் பட்த்தில் இயங்க முடியாது. மிஷ்கின் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் ராஜா கொடுத்ததை மிஷ்கின் தன்னிஷ்ட்த்துக்கு மாற்ற ராஜா கோபித்துக் கொண்டார். இது விஷயத்தில் நான் மிஷ்கின் பக்கம்தான். படத்தில் பணியாற்றும் யாரும் அவர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் இயக்குனருக்குக் கீழேதான். இயக்குனர்தான் கேப்டன்.
ஆனால் சினிமா இயக்குவதற்கு அடிப்படைத் தேவை என்று நான் கருதும் ஒரு நூறு படங்களின் பெயர் கூடத் தெரியாமல் அராத்து எப்படி இம்மாதிரி ஒரு உலகத்தரமான படத்தை இயக்கினார் என்பது எனக்கு ஆச்சரியமே. அதே சமயம் பாரதிராஜா கூறுவதையும் நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய நூறு படப் பட்டியலை பாரதிராஜா தன்னுடைய காலத்தில் பார்த்ததில்லை. இப்போது ஒன்றிரண்டைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர் படம் எடுத்த போது என் பட்டியலைப் பார்த்ததில்லை. அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார், அவர் சிந்திக்கும் எல்லாமே அவருக்குக் காட்சிகளாகத்தான் தெரிகின்றனவாம்.
கேமரா கோணத்தைக் கூட அராத்து சொல்லிக் கொண்டிருந்ததால் என் சினிமாக் கனவு அத்தனையும் நொறுங்கி விட்டது. எனக்கு கேமரா கோணமெல்லாம் தெரியாது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நிபுணரே செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். எனக்கு என்ன வேண்டும் என்பதை அதன் தொழில் நுட்பம் இல்லாமல்தான் சொல்வேன். ஆனால் அராத்து எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார். படத்தொகுப்பு உட்பட.
டிசம்பர் பதினெட்டாம் தேதி விஷ்ணுபுரம் விழாவில் திரையிடப்பட்ட த அவ்ட்ஸைடர் ஆவணப்படம் தனக்கு வேண்டியதாக இல்லை, தான் நினைத்ததாக இல்லை என்றார் அராத்து. அவருக்கு வேண்டியதாக இருக்க வேண்டும் என்றால், அவர் படத்தொகுப்பாளரோடு இன்னும் பதினைந்து நாள் வேலை செய்திருக்க வேண்டும். நேரம் இல்லை. அதனால் அராத்து தீர்மானிக்கும்படி சுமார் இரண்டு மணி நேரப்படமாக ஃபெப்ருவரியில் இங்கே சென்னையில் திரையிடலாம். மொத்த படம் பத்து மணி நேரம். அதை நாகூர் எபிசோட், தஞ்சாவூர் எபிசோட், சென்னை எபிசோட், தாய்லாந்து எபிசோட், சீலே எபிசோட் என்று பத்து பிரிவுகளாகப் பிரித்து ஓடிடியில் வெளியிடலாம். அதற்கு முன்னதாக அந்தப் பத்து மணி நேரப் பட்த்தை இரண்டு மணி நேரமாகச் சுருக்கித் திரையிடலாம்.
ஆவணப்படம் பத்து மணி நேரம் இருக்கலாம். ஏனென்றால், Ulrike Ottinger எட்டரை மணி நேர ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். பெயர் Taiga. மங்கோலிய இனக்குழு பற்றிய ஆவணப்படம்.
மற்றொரு நான்கு மணி நேர ஆவணப்படம் த சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி டேப்ஸ். இது அறுபத்து நான்கு மணி நேர ஃபூட்டேஜிலிருந்து நான்கு மணி நேரமாகத் தொகுக்கப்பட்ட்து. இந்தப் படம் இப்போது ஒரு cult classicஆகக் கருதப்படுகிறது.
அதே மாதிரிதான் அராத்து இயக்கிய த அவ்ட்ஸைடர் என்ற ஆவணப்படமும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒரு cult classic ஆக மாறப் போகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸீரோ டிகிரி நாவல் வந்த போது அதை எல்லோரும் குப்பை என்றும் போர்னோ என்றும் திட்டினார்கள். இப்போது அது ஒரு cult classic. அதேமாதிரிதான் ஆகும் தி அவ்ட்ஸைடர் ஆவணப்படமும்.
படம் முடிந்ததும் பெரிதாக யாரும் கைதட்டவில்லை. மேடையில் பேசியவர்களும் த அவ்ட்ஸைடர் என்ற பெயரையே குறிப்பிடவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் என்னிடம் பல நண்பர்கள் சொன்னார்கள். அந்த இரண்டும்தான் இந்த ஆவணப்படம் ஒரு கல்ட் க்ளாஸிக்காக மாறப் போகிறது என்பதற்கான சாட்சியங்கள்.
ஜெயமோகனின் அழகியல் வேறு, சாருவின் அழகியல் வேறு என்று ஊர் உலகத்துக்குத் தெரியாதா? கேங்ஸ் ஆஃப் வாஸேபூர் ஹிந்தி சினிமாவின் உச்சம் என எழுதினேன். அது ஒரு மொக்கைப் படம் என்று எழுதினார் ஜெ. எனக்கு ஸ்டீக் பிடிக்காது, சீலேயில் நான் பதினைந்து நாள் பட்டினி என்றேன். ஜெயமோகனுக்கு ஸ்டீக் பிடித்த உணவு. (உணவில் மட்டும் நான் ஒரு கிழக்காசிய மனிதன்!) இப்படி நீங்கள் ஒரு நூறு விஷயங்களைப் பட்டியலிட்டால் அது அத்தனையிலும் என்னுடைய ரசனை வேறாக இருக்கும். வாசகர்களும் அப்படித்தான். ஒரு நண்பரின் சட்டையைப் பார்த்து விட்டு, அவர் உங்கள் ரசிகரா என்று கேட்டார் ஜெ. அவர் மனாசே. என் நெருங்கிய நண்பர். வெறும் சட்டையைப் பார்த்து விட்டே சொல்லி விட முடிகிறது என்கிற போது என்னைப் பற்றி அராத்து இயக்கிய ஆவணப்படத்தை எப்படி ஒரு ஜெ. வாசகர் எதிர்கொள்ள முடியும்? நானோ அன்றைய விழாவின் முக்கிய விருந்தினர். அப்படியே ஆவணப்படத்தை ஒரு பக்கம் வைத்து விட வேண்டியதுதான். அதுதான் நாகரிகம். அதைத்தான் செய்தார்கள்.
செல்வேந்திரன்தான் மேடையிலேயே குறிப்பிட்டாரே, எல்லோரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று? அப்புறம் என்ன?
இன்னொரு ரகசியம். நான் ஒரு மாதத்துக்கு முன்பே படத்தின் கடைசிக் காட்சியை செல்வேந்திரனுக்கு அனுப்பி விட்டேன். அப்போதே அவர் சொல்லியும் விட்டார், எதிர்வினை எப்படி இருக்கும் என்று.
என் நண்பர் ஒருவர் ஆவணப் படத் திரையிடலுக்கு ஐந்தரைக்கு வந்தார். படம் ஐந்து மணிக்குத் தொடங்கி அரை மணி நேரம் ஓடி விட்டது. நண்பர் படத்தின் பதினைந்து நிமிடங்களையே பார்த்தார். ஆறு மாத காலம் உயிரைக் கொடுத்து இருபத்தைந்து லட்சம் ரூபாயில் ஊர் ஊராகச் சுற்றி, தாய்லாந்தெல்லாம் போய் எடுத்தது. அது எல்லாவற்றையும் விடக் கொடுமை, ஒரு வார காலம் யாருமே ஒரு நிமிடம் கூடத் தூங்காமல் படத்தை முடித்திருக்கிறார்கள். இரண்டு பேர் நின்ற நிலையில் மயக்கமடித்து விழுந்திருக்கிறார்கள். அது மயக்கம் அல்ல, உறக்கம். சென்னையிலிருந்து வேலை மெனக்கெட்டு வந்த நண்பர் படத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்து பதினைந்து நிமிடம் பார்க்கிறார். கேட்டால் ட்ராஃபிக் ஜாம் என்றார். அவமானப்படுத்துகிறோம் என்று கூட அவருக்குத் தெரியவில்லை. யாரோ என்றால் போய்யா சரிதான் என்று நகர்ந்து விடுவேன். உயிர் நண்பர். த அவ்ட்ஸைடர் படத்தைச் சேர்ந்த யாராவது அப்படிச் செய்திருந்தால் அங்கே ஒரு க்ரைம் நடந்திருக்கும். இப்படிச் செய்ததற்காகத்தான் வெர்னர் ஹெர்ஸாக் தன் கதாநாயக நடிகன் க்ளாஸ் கின்ஸ்கியின் நெற்றியில் தன் பிஸ்டலை வைத்து விட்டான்.
அதனால்தான் சொல்கிறேன், ஒரு நிகழ்த்துக் கலையின் உருவாக்கத்தில் ஜனநாயகத்தன்மையெல்லாம் வேலைக்கு ஆகாது. கேப்டன் என்றால் கேப்டன்தான்.
அந்த விதியை மீறி த அவ்ட்ஸைடர் பட்த்தில் நான் ஒரே ஒரு முறை குறுக்கிட்டேன். அது அந்தக் கடைசிக் காட்சி. அது பற்றித் தத்துவார்த்தமாகச் சொல்ல வேண்டும். சொல்கிறேன்.