எல்லாம் சரி, ஒற்றைக் கையைத் தூக்கித் தூக்கிக் காண்பிப்பதுதான் நடனமா? அதை அறிஞர் அண்ணாவே செய்திருக்கிறாரே?
எஸ். செந்தில் குமார், திருச்சி.
செந்தில், கீழே வரும் பத்தியைப் படித்துப் பாருங்கள்.
“பாபு ரங்கண்ணாவைப் பார்க்கும் முதல் காட்சியில், ரங்கண்ணா தனக்குத்தானே, தன் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நாதத்தைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருப்பார். அதைக் கலைக்க விரும்பாதபடி, பாபுவும் மற்றவர்களும் தயங்கி நின்றிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று அது,” என்று ‘தி. ஜானகிராமனின் இசையுலகம்’ என்ற கட்டுரையில் சொல்கிறார் சேதுபதி அருணாசலம். அது உண்மைதான். மேலும், என்னைப் பொருத்தவரை, ‘மோகமுள்’ முழுவதுமே அதுபோன்ற தருணங்களால் நிரம்பி வழிவதாகத்தான் தோன்றுகிறது. ‘மோகமுள்’ளில் ரங்கண்ணா அறிமுகமாகும் காட்சி இது:
“ரங்கண்ணா, நடையில் இருந்த ஒட்டுத் திண்ணையில் சப்பணம் கட்டி உட்கார்ந்திருந்தார். கண் மூடியிருந்தது. வலது கை, முழங்கைக்கு மேல் அசைந்துகொண்டிருந்தது. மேலும் கீழும் முன்கையை உயர்த்தித் தாழ்த்திக்கொண்டிருந்தார் ரங்கண்ணா. கண் மூடின முகமும், கையோடு மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தது. உதடுகள் சற்றுப் பிரிந்திருந்தன. ஆனால், சப்தம் ஏதும் வாயினின்று எழவில்லை. தியானத்தில் ஆழ்ந்து, சுழலில் சிக்குவதைப்போல, சூழ்நிலை நினைவின்றி சிக்கின ஒரு நிலையின் முகபாவம்தான் அது. நடுவில் இரண்டு தடவை, இரண்டு கைகளும் ஏதோ வானைக் கண்டு இறைஞ்சுவதுபோல் மல்லாந்தன. நாலைந்து கணங்கள், அந்த நிலையில் நின்று முழங்கால்களின் மீது அமர்ந்தன. முகம் சற்று மேல் நோக்கி, அசைவு ஓய்ந்தது. இருபது விநாடிக்குப் பிறகு, மீண்டும் வலது முன்னங்கை பழையபடியே மெதுவாக உயர்ந்து தாழ்ந்தது. முகமும் அதன் சலனத்துக்கேற்ப உயர்ந்து அந்த முகத்தில் ஒரு எல்லை காணா அமைதி. ஏதோ பெரிய அலைகள் மீது ஏறி ஏறி இறங்குவது போல, இந்தக் கையும் முகமும் எழும்பி இறங்குவது, உள்ளே நிகழும் இயக்கத்தின் வெளித் தோற்றமாகத் தோன்றுகிறது. அப்படி, எந்த அலை மீது இந்த உள்ளம் ஏறி மிதக்கிறது… தன்னை மறந்த அந்த லயிப்பில், அவர் உடல் உள்ளம் உயிர் எல்லாவற்றையுமே இழந்துவிட்டதுபோல்தான் இருந்தது.”
“ரங்கண்ணாவுக்கு சங்கீதம்தான் உயிர். பாடாவிட்டால், நாதத்தைப் பற்றி நினைக்காவிட்டால், அவருக்கு உயிர் தாங்காது. சங்கல்பம் செய்துகொண்டு அதைப்பற்றி நினைக்க வேண்டுமென்றில்லை. தைலதாரை என்று சொல்வதுபோல், அவருடைய சங்கீத உபாசனை கணமும் அறாத உபாசனை. வருடம் முழுதும் வற்றா அருவிபோல், கணமும் ஓயாக் கடலின் அலைபோல், கருத்தும், உணர்வும், கணமும் அறாமல், நாதம் அவருள் நடனமிடுகின்றது. ஓயாத வெள்ளம் அது. இசையே உயிர் அவருக்கு. குளிப்பதும், தின்பதும், பேசுவதும் தற்செயலாக நிலவும் நிகழ்ச்சிகள் அவருக்கு. வேறு சிந்தனையின்றி, நாதத்தையே பரம்பொருளாக எண்ணி, அதன் அருவியின் கீழ் ஓயாமல் நனைந்துகொண்டிருப்பவரின் உணர்வும் அறிவும் குளிர்ந்திடாமல் எப்படியிருக்கும்? அவர் பேச்சும் – ஏன், வெசவும்கூட அருளின் வடிவாகக் குளிர்ந்து, நம் மனதில் எழும் புயலையும், பகையையும், களங்கங்களையும் சாடி விடுவதில் என்ன வியப்பு!”
படித்தீர்களா செந்தில்? இதில் இசை என்பதற்கு பதிலாக நடனம் என்றும் ரங்கண்ணாவுக்கு பதிலாக சாரு என்றும் போட்டுக் கொண்டால் அதுதான் நடனத்துக்கும் எனக்குமான தொடர்பு. சலனமே நடனத்தின் அடிப்படை. காற்றில் இலை சலனிக்கிறதா? அது நடனம். நடனம் என்பது சரீரத்தின் சலனம். அவ்வளவுதான். சமயங்களில் அது துள்ளலாகவும் வெளிப்படும். சமயங்களில் தியானத்தைப் போல் சலனமற்றும் இருக்கும். அதுவும் நடனம்தான். எப்படி ஒரு இசைக் கோர்வையின் நடுவே வரும் மௌனமும் சங்கீதமாகிறதோ அதேபோல் சலனமற்று அமைவதும் நடனம்தான்.
இதையெல்லாம் மீறி சில சமயங்களில் நடப்பதும் உண்டு. சிறுமலையில் சில ஆண்டுகளுக்கு முன் ”நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” என்ற பாடலுக்கு நான் ஆடிய நடனம் என் வாழ்வில் மறக்க முடியாத பரவசத் தருணங்களில் ஒன்று. அதன் காணொலி யாரிடமாவது இருக்கலாம்.
அடுத்து, அல்லாஹு அக்பர் பாடலின் ஆன்மீக ஒருமையில் பரவசம் கொண்டு நான் ஆடிய சூஃபி நடனத்தை அவ்ட்ஸைடர் படத்தில் கொஞ்சமாவது சேர்க்கச் சொல்லி அராத்துவிடம் விண்ணப்பித்திருக்கிறேன்.