நாகூர் என்றவுடன் இன்றைக்குச் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள் என்னென்ன?
நாகூர் ஹனீஃபா. அவரைப் போன்ற குரல் படைத்தவர் அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. அதேபோல், அவருடைய பாடல்களில் ஒன்றுகூட சோடை போனது இல்லை. எல்லாமே ரசிக்கத் தகுந்தவை. அது, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…’ பாடலாக இருந்தாலும் சரி, ‘ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?’ பாடலாக இருந்தாலும் சரி; ஹனிஃபாவின் பல பாடல்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பவை.
சில்லடி. எங்கள் ஊர் கடற்கரை. என் காலத்தில் அங்கே பாலைவனத்தில் உள்ளதுபோல் பெரும் மணல் மேடுகள் இருந்தன. அந்த மணல் மேடுகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து சறுக்கிக் கீழே இறங்குவது எங்கள் அப்போதைய விளையாட்டு. இப்போது அந்த மணல் மேடுகளின் தடயம் எதுவும் இல்லை. அந்த இடங்களில் பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகளே நிரம்பியுள்ளன. சில்லடியில் உள்ள ஈச்சந்தோப்புகள் மட்டும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. அந்த ஈச்சந்தோப்பில்தான் தனியாக அமர்ந்து படிப்பேன். சமயங்களில் சுயமைதுனம் செய்ததும் உண்டு.
தர்ஹா. இதைத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும். எஜமான் அடங்கின இடம். ஆயிரக்கணக்கான புறாக்கள் வசிக்கும் இடம். மனித மனதின் நோய்மைகளைப் போக்கும் இடம். எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை, ஹரிக்கேன் விளக்கில் படிப்பதற்கு மண்ணெண்ணெய் வாங்கவும் காசு இருக்காது என்பதால், இரவில் தர்ஹாவில்தான் படிப்பேன். தர்ஹா என் தாய் வீடு.
நஹரா. எனக்கு இலக்கியம் எப்படியோ, பயணம் எப்படியோ, அதே அளவுக்குத் தீவிரமான உந்துவிசையாய் இருப்பது இசை. அதற்கு ஆதாரமாக இருந்தது காலை ஆறு மணிக்கு தர்ஹாவின் அலங்கார வாசலுக்கு எதிரே இருக்கும் மனாராவிலிருந்து கேட்கும் நஹரா இசை. இந்த நஹரா இசையை நீங்கள் இந்தியாவில் வேறு எங்குமே கேட்க முடியாது என்று நினைக்கிறேன். நான் கேட்டதில்லை. நஹரா இசையே முதல் முதலாக இசை உலகில் என்னை அழைத்துச் சென்ற இசைக் கருவி. நஹரா ஒரு தோல் கருவி. மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து நாகூருக்கு வந்தது. அந்த நாடுகளில் அவர்கள் நகரா என்கிறார்கள். நாகூரில் நாங்கள் எல்லாவற்றுக்கும் ‘ஹ’ போடுவோம். ‘என்ன, வாப்பா சப்ர்லேந்து வந்துட்டாஹாளா?’
பன்மைத்துவம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது கிட்டத்தட்ட இன்று தேய்வழக்காகிவிட்ட ஒரு வாக்கியம் என்றாலும், என் வாழ்வில் நான் அப்படித்தான் இருக்கிறேன். இந்த மனோபாவத்தை எனக்குக் கொடுத்தது நாகூரின் நிலம். ஊரின் கிழக்குப் பகுதி இஸ்லாமிய கலாச்சாரம். மேற்கில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலுமான ஹிந்து கலாச்சாரம். தெற்கே வெட்டாற்றைத் தாண்டினால் வாஞ்சூர். வெட்டாறு என்ன, ஒரு ஃபர்லாங் அகலம். வாஞ்சூரில் கால் வைத்ததும் பத்துப் பதினைந்து வைன் ஷாப்புகளும் கள்ளுக்கடைகளும் சாராயக் கடை ஒன்றும் கண்கொள்ளாக் காட்சியாய் மிளிரும். என்னவென்று புரிந்துகொள்வான் ஒரு பதின்பருவத்து இளைஞன்? ஒரு பாலத்தைத் தாண்டினால் ஐரோப்பா! வாஞ்சூரைத் தாண்டினால் காரைக்கால். குட்டி பாரிஸ். மேற்கத்திய சங்கீதமும் கிறித்தவக் கலாச்சாரமும் காரைக்காலில் கொடி கட்டிப் பறக்கும். ஆக, இந்த மூன்று கலாச்சாரங்களும் என்னுள் ஒன்றேபோல் இறங்கியதற்குக் காரணம், நாகூரின் நிலவியல் அமைப்பு.
இன்று ‘அருஞ்சொல்’ வெளியிட்டிருக்கும் சாரு பேட்டியிலிருந்து. முழுப் பேட்டியை வாசிக்க அருஞ்சொல் தளத்துக்குச் செல்லுங்கள்.
கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)